அதிமுகவுடன் மென்மையான போக்கா? ஜி.கே.வாசன் மறுப்பு!

புதுக்கோட்டை: அதிமுகவுடன் மென்மையான போக்கைத் தமாகா கடைபிடிக்கவில்லை என்று அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை  தமிழ்மாநில காங்கிரஸ் கட்சி மாநில நிர்வாகியின் இல்லத் திருமண விழாவில்  பங்கேற்க வந்த அவர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.

அப்போது அவர் கூறுகையில், " அதிமுகவுடன் மென்மையான போக்கை தமாகா கட்சி கடைப்பிடிக்கவில்லை. மக்கள் நலனுக்கு எதிரான நடவடிக்கைகளில் மத்திய மாநில அரசுகளை எதிர்ப்பதில் நாங்கள் தயங்கியதில்லை. ரயில்வே துறை வளர்ச்சிக்கு மட்டுமே ஆலோசனை  கூறலாம். ஆனால் தனியார் மயம் என்ற பெயரில் வளர்ச்சிக்காக பாடுபட்டு  வரும் லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்க்கையைப் பாதிக்கக்கூடிய முடிவை ஏற்க முடியாது.  மாவட்டங்களுக்கு இடையே பயணிகள் ரயில்களை அதிகமாக இயக்க வேண்டும்.  மத்திய அரசின் பாராமுகத்தால்  தமிழகத்தில் அரசு, தனியார் தொழிற்பயிற்சி (ஐடிஐ) நிலையங்களுக்கு தகுதி சான்றிதழ் வழங்குவதில் சிக்கல் நீடித்து வருவதை தமிழக அரசு கவனிக்க வேண்டும்.

மாநில சுகாதாரத்துறையில் உள்ள தமிழ்நாடு சுகாதார திட்டத்தின் கீழ் ஆயிரம் ரூபாய் தொகுப்பூதியத்தில் கடந்த 5 ஆண்டுகளாக 8 ஆயிரம் பேர் பணியாற்றி வருகிறார்கள் . அவர்களை பணி நிரந்தரம் செய்வதற்கு தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். ராமநாதபுரம் சிவகங்கை புதுக்கோட்டை  மவட்டத்தில் உள்ள 2 லட்சம் ஏக்கர் விவசாய நிலம் பாசன வசதி பெறும் வகையிலான காவிரி, வைகை, குண்டாறு இணைப்புத் திட்டத்தை உடனடியாக  நிறைவேற்றவேண்டும். சென்னை மதுரவாயல் பறக்கும் சாலை திட்டத்தை உடனடியாக செயல்படுத்திட  வேண்டும்.

புதுக்கோட்டை நகராட்சி பகுதிகளில் குடிநீர் சுகாதாரம் தெருவிளக்கு உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதியினை மேம்படுத்துவதில் தனிக்கவனம் செலுத்த வேண்டும். கடந்த 6 ஆண்டுகளாக  புதுக்கோட்டையில் நடைபெற்று வரும் புதை சாக்கடைத் திட்டம் நிறைவேற்றப்படாததால் மக்கள் வரிப்பணம் வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளது.  எனவே அத்திட்டத்தை உடனடியாக செயல்படுத்த முன்வர வேண்டும். கிராம ஊராட்சிகளில் மேற்கொள்ளப்படும் திட்டப் பணிகளை கண்காணிக்க உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிகளைக் கொண்ட  ஒருங்கிணைப்பு குழு அமைக்க வேண்டும்.

இந்தியாவில் பல மாநிலங்களில் கூட்டணி ஆட்சி வெற்றிகரமாக நடந்து வருகிறது.  மூன்றாவது அணி அமைவது குறித்து தமிழக சட்டமன்றத் தேர்தல் நடைபெறும் போதுதான் தெரியும். தமாகா கட்சியின் வளர்ச்சி எதிர்பார்த்ததைவிட நன்றாகவே உள்ளது. தேர்தல் ஆணையம் மக்கள் மன நிலையைப்  பிரதிபலிக்கும் வகையில் செயல்பட வேண்டும்"  என்று கூறினார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!