Published:Updated:

படித்த மேதையை சீண்டும் படிக்காத மேதை: போஸ்டரால் விழுப்புரம் தி.மு.கவில் சலசலப்பு!

விகடன் விமர்சனக்குழு
படித்த மேதையை சீண்டும் படிக்காத மேதை: போஸ்டரால் விழுப்புரம் தி.மு.கவில் சலசலப்பு!
படித்த மேதையை சீண்டும் படிக்காத மேதை: போஸ்டரால் விழுப்புரம் தி.மு.கவில் சலசலப்பு!

விழுப்புரம்: ''படித்த மேதைகள் இருந்தும் படிக்காத மேதையே! நீதான் படித்த மேதைகளுக்கு கழக பதவி கொடுத்து அழகு பார்க்கிறாய்!! என்று விழுப்புரம் வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் மஸ்தானை வாழ்த்தி ஒட்டப்பட்டிருக்கும் போஸ்டரால் விழுப்புரம் தி.மு.க.வில் சலசலப்பு ஏற்பட்டு உள்ளது.

படித்த மேதையை சீண்டும் படிக்காத மேதை: போஸ்டரால் விழுப்புரம் தி.மு.கவில் சலசலப்பு!

நானே ராஜா, நானே மந்திரி என விழுப்புரம் மாவட்ட தி.மு.க.வில் கோலோச்சிக் கொண்டிருந்த பொன்முடிக்கு, மாவட்டம் மூன்றாக பிரிக்கப்பட்டு அவரது அதிகாரம் குறைக்கப்பட்டது பெரும் பின்னடைவை ஏற்படுத்தியிருக்கிறது. பெயரளவுக்கு மாவட்டம் பிரிக்கப்பட்டாலும், நாம் தான் ‘சூப்பர் மாவட்ட செயலாளராக’ இருப்போம் என்ற பொன்முடியின் எண்ணத்தில் மண் விழுந்த கதையாக வடக்கு மாவட்ட செயலாளர் மஸ்தான் தன்னிச்சையாக செயல்பட ஆரம்பித்துள்ளார்.

பென்முடியின் உதவியால் பதவி பெற்று ஆரம்பத்தில் பொம்மலாட்ட பொம்மை போல மஸ்தான் செயல்பட்டார். ஆனால், தற்பொழுது மஸ்தான் கட்டுப்படாமல் பணியாற்றுவதை பார்த்து விரக்தியடைந்த பொன்முடிக்கு, மேலும் ஒரு அதிர்ச்சியாக பொன்முடியால் ஓரம்கட்டி வைக்கப்பட்ட பலருக்கு புதிய மாவட்ட செயலாளர் மஸ்தான் பதவிகளை தாராளமாக வழங்கி அழகுப்பார்த்துக் கொண்டிருக்கிறார். மஸ்தான் மூலம் புதிய பதவி பெற்றவர்கள், பொன்முடிக்கு பாடம் கற்பிக்கும் விதமாகவும் அவரை சீண்டும் விதமாகவும் மேற்கண்ட வாசகங்கள் கொண்ட போஸ்டர்களை மாவட்டம் முழுக்க ஒட்டி பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றனர்.

படித்த மேதையை சீண்டும் படிக்காத மேதை: போஸ்டரால் விழுப்புரம் தி.மு.கவில் சலசலப்பு!

2013 ஆம் ஆண்டு தி.மு.க. கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை சார்பில் கனிமொழி எம்.பி. தலைமையில் பிரம்மாண்ட நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிக்கு அப்பேரவையில் திண்டிவனம் பகுதி செயலாளர் எம்.டி. முத்து ஏற்பாடு செய்திருந்தார். முதலில் இந்த நிகழ்ச்சிக்கு அனுமதி கொடுத்த பொன்முடி, கடைசி நேரத்தில் மேலிடத்தில் தனக்கு இருக்கும் செல்வாக்கை பயன்படுத்தி கனிமொழி அந்த நிகழ்ச்சியில் கலந்துக்கொள்ளாமல் பார்த்து கொண்டார்.

தன்னை மீறி எம்.டி.முத்து போன்றவர்கள் தலைமையுடன் தொடர்பு வைத்திருப்பதை பொன்முடி விரும்பாததால், அவரை கட்சியில் இருந்து கட்டம் கட்டினார். உட்கட்சி தேர்தலின்போது கூட எம்.டி.முத்து போன்றவர்களை போட்டியிடாதபடி தடுத்துவிட்டார். இந்நிலையில், பொன்முடியால் ஓரம்கட்டபட்ட முத்துவை, மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு செயலாளராக மஸ்தான் நியமித்துள்ளார்.

தங்களை ஓரம்கட்டிய, டாக்டர் பட்டம் பெற்று பேராசியராக பணியாற்றிய படித்த மேதையை பொன்முடியைவிட, பள்ளி படிப்பை கூட முடிகாத மஸ்தான் எவ்வளவோ மேல் என்று நினைத்து அவருக்கு நன்றி தெரிவித்து போஸ்டர் ஒட்டியுள்ளார்கள். இந்த மாவட்டம் பிரிக்கப்பட்டதில் இருந்து பொன்முடி விழுப்புரத்தில் அதிகம் தலைக்காட்டுவதில்லை.

விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரியை தான் தான் கொண்டுவந்ததாக மேடைதோறும் முழங்கும் அவர், அந்த மருத்துவமணையில் எட்டு பச்சிளம் குழந்தைகள் இறந்தபோது ஒரு ஆர்பாட்டம் கூட நடத்தவில்லை. தி.மு.க.வை தவிர மற்ற எல்லா கட்சிகளும் மருத்துவமனைக்கு எதிராக ஆர்பாட்டம் நடத்திய போதும் பொன்முடிக்கு ஏனே மனம் வரவில்லை என்று தெரியவில்லை என்கிறார்கள் சில மூத்த தி.மு.க நிர்வாகிகள்.

அதே நேரம், அதிகாரம் குறைக்கப்பட்ட வருத்தத்தால் ஆக்டிவ் பாலிடிக்சில் இருந்து பொன்முடி விலகியிருப்பதால், தி.மு.க. ஒரு பிரதான எதிர்கட்சி என்பதையே மக்கள் மறந்துவிட்டதாக பொன்முடியின் ஆதரவாளர்கள் புலம்பி வருகின்றனர். மேலும், அக்டிவ் பாலிடிக்சில் இருந்து எங்கள் அண்ணன் ஒதுங்கியிருந்தாலும், தன்னை சீண்டிவர்களை சும்மா விட மாட்டார் என்கிறார்கள்.

ஆ.நந்தகுமார்

படங்கள்:
தே.சிலம்பரசன்