Published:Updated:

டெல்லி ராஜஸ்தானில் இருந்து லாரிகள் மூலம் ஹெல்மெட் சப்ளை:தட்டுப்பாட்டை நீக்க நடவடிக்கை!

விகடன் விமர்சனக்குழு
டெல்லி ராஜஸ்தானில் இருந்து லாரிகள் மூலம் ஹெல்மெட் சப்ளை:தட்டுப்பாட்டை நீக்க நடவடிக்கை!
டெல்லி ராஜஸ்தானில் இருந்து லாரிகள் மூலம் ஹெல்மெட் சப்ளை:தட்டுப்பாட்டை நீக்க நடவடிக்கை!
டெல்லி ராஜஸ்தானில் இருந்து லாரிகள் மூலம் ஹெல்மெட் சப்ளை:தட்டுப்பாட்டை நீக்க நடவடிக்கை!

சென்னை: சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு நகரங்களில் நிலவும் ஹெல்மெட் தட்டுப்பாட்டை நீக்க ராஜஸ்தான் மற்றும் டெல்லி மாநிலங்களிருந்து ஹெல்மெட்டுகள் லாரிகள் மூலம் கொண்டுவரப்படவுள்ளன.

தமிழகத்தில் இரு சக்கர வாகனங்களை ஓட்டிச் செல்பவர்களும், பின்னால் அமர்ந்து செல்பவர்களும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்ற உயர்நீதிமன்றத்தின் உத்தரவு நேற்று முதல் அனைத்துப் பகுதிகளிலும் நடைமுறைக்கு வந்தது.

இதையடுத்து தமிழகம் முழுவதும் போலீசார் நேற்று முதல் ஹெல்மெட் அணியாமல் இரு சக்கர வாகனத்தில் செல்பவர்களை பிடிக்க அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். நேற்று மட்டும் தமிழகம் முழுவதும் 5 ஆயிரம் இடங்களில் போக்குவரத்து போலீசார் சோதனை நடத்தி ஹெல்மெட் அணியாமல் சென்ற 80 ஆயிரம் பேரை  பிடித்துள்ளனர்.  இதில் 42 ஆயிரம் பேரிடம் ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. ஒரிஜினல் ஆவணங்கள் இல்லாத 38 ஆயிரம் பேரிடம் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.இதே போன்ற நடவடிக்கைகள் இன்றும் தொடருகின்றன.

ஹெல்மெட் கட்டாயம் என்பதால் கடந்த 1 வார காலமாகவே ஹெல்மெட் விற்பனை செய்யும் கடைகளில் கூட்டம் அலைமோதியது. சென்னையின் முக்கிய பகுதிகளான அண்ணாசாலை மற்றும் பாரிமுனை பகுதிகளில் ஹெல்மெட் விற்கும் கடைகள் முன்பு வாகன ஓட்டிகள் பெருமளவில் திரண்டதால் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.

கடைகளில் போதிய அளவு ஹெல்மெட் இல்லாதா காரணத்தால் சென்னையில் ஹெல்மெட் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனால் சில கடைக்காரர்கள் டெல்லியில் இருந்து விமானம் மூலமும், ரெயில்கள் மூலமும் ஹெல்மெட்டை வரவழைத்து வாகன ஓட்டிகளுக்கு விற்பனை செய்தனர்.தமிழகத்தின் பிற நகரங்களிலும் இதே நிலைதான் தொடருகிறது.

ஹெல்மெட் தட்டுப்பாட்டை பயன்படுத்தி பல கடைகளில் ஹெல்மெட் 2 மடங்கு விலை உயர்த்தி விற்கப்பட்டது. விமானங்களில் வரவழைக்கப்பட்டதால் ஹெல்மெட் விலை பல மடங்கு உயர்ந்தது. இதனால் ஹெல்மெட் அதிக விலைக்கு விற்கப்படுவதாக வாகன ஓட்டிகள் மத்தியில் புகார் எழுந்தது. ஹெல்மெட் விற்பனையில் சீரான விலையை கடை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து விமானம் மூலம் ஹெல்மெட் கொண்டு வருவது நிறுத்தப்பட்டது.

இதன் மூலம் கடுமையாக ஹெல்மெட் தட்டுப்பாடு அதிகரித்துள்ளது. ஆந்திராவிலும் நேற்று முதல் ஹெல்மெட் கட்டாயமாக்கப்பட்டதால் அங்கிருந்தும் ஹெல்மெட்டை வரவழைக்க முடியவில்லை. போலீசாரின் பிடி இறுகுவதால் எப்படியும் ஹெல்மெட் வாங்கியே தீர வேண்டும் என்ற எண்ணத்தில் வாகன ஓட்டிகள் ஏராளமானோர் நேற்று ஹெல்மெட் விற்பனை செய்யும் கடைகளில் குவிந்தனர்.சென்னையில் கடைகள் திறக்கப்படுவதற்கு முன்பே கடைகளின் வாசலில் ஏராளமான வாகன ஓட்டிகள் வரிசையில் நின்று ஹெல்மெட்டுகளை வாங்கிச் செல்கின்றனர்.

டெல்லி, பெங்களூர், ராஜஸ்தான் ஆகிய இடங்களில் இருந்து வரவழைக்கப்பட்டாலும் தற்போதுள்ள தேவையை பூர்த்தி செய்ய முடியவில்லை. பெரும்பாலான கடைகளில் கடந்த 2 நாட்களாக ஹெல்மெட் கிடைக்காததால் வாகன ஓட்டிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

இது பற்றி நுங்கம்பாக்கம் பகுதியில் உள்ள ஹெல்மெட் டீலர் ஒருவர் கூறுகையில்,

சென்னையில் தற்போது ஹெல்மெட்டுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பது உண்மை தான். முன்பெல்லாம்  ஒரு கடையில் 30 ஹெல்மெட் விற்பனையாவதே விற்பனையாக இருக்கும். தற்போது கட்டாயம் என்பதால் தேவை பெருமளவு அதிகரித்துள்ளது.அதனால் சென்னையின் பெரும்பாலான கடைகளில் நூற்றுக்கணக்கில் ஹெல்மெட் விற்பனையாகின்றன. எங்களிடம் இருந்து 500, 1000 என்று மொத்தமாக சில்லரைக் கடைகாரர்கள் வாங்கிச் செல்கின்றனர்.

ஹெல்மெட் தட்டுப்பாட்டை உடனடியாக போக்க விமானம் மூலம் வரவழைத்தோம். போக்குவரத்து செலவு அதிகம் என்பதால் கூடுதல் விலைக்கு விற்க வேண்டியதாகி விட்டது. அதற்கு பொதுமக்கள் மத்தியில் புகார் எழுந்ததால் விமானத்தில் வரவழைப்பதை நிறுத்தி விட்டோம். இதனால் மீண்டும் ஹெல்மெட் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இதனைப் போக்க,  தற்போது டெல்லி, ராஜஸ்தான், பெங்களூரூ ஆகிய இடங்களில் ஹெல்மெட் ஆர்டர் கொடுத்துள்ளோம். அதை லாரி மூலம் கொண்டு வர நடவடிக்கை எடுத்துள்ளோம். கடந்த 4 நாட்களுக்கு முன்பு ஆர்டர் செய்த ஹெல்மெட்டுகள் இன்னும் வந்து சேரவில்லை. அந்த ஹெல்மெட்டுகள் இன்னும் ஓரிரு நாட்களில் வந்து விடும். அதன் பிறகு ஹெல்மெட் தட்டுப்பாடு முழுமையாக நீங்கும். வாகன ஓட்டிகள் விரும்பும் வகையில் விலையும் குறையும்" என்று கூறினார்.