வெளியிடப்பட்ட நேரம்: 12:08 (16/07/2015)

கடைசி தொடர்பு:13:15 (16/07/2015)

அடுத்த ஆட்சி த.மா.கா வினுடையது: ஜி.கே. வாசன் நம்பிக்கை!

தஞ்சை:  தமிழகத்தில் அடுத்த ஆட்சியமைக்கப்போவது த.மா.கா.தான் அக்கட்சியின் தலைவர் ஜி.கே.  வாசன் கூறியுள்ளார்.

தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் காமராஜரின் 113வது பிறந்தநாள் பொதுக்கூட்டம் தஞ்சையில் நடந்தது. இதில் பேசிய அக்கட்சியின் தலைவர் ஜி.கே. வாசன், காமராஜர் தனக்கென வாழாமல் பிறருக்கென வாழ்ந்தவர். கல்வி புரட்சி, விவசாய புரட்சி, தொழில் புரட்சி காமராஜர் ஆட்சிக்காலத்தில் இருந்தது, இப்போது இருக்கிறதா? என்று கேள்வி எழுப்பினார்.

தொடர்ந்து பேசிய வாசன், “மின் உற்பத்தி செய்வதற்கு தமிழக அரசிடம் எந்த திட்டமும் இல்லை. தமிழகத்தில் அணைகள் கட்ட வேண்டிய இடத்தில் மனையாக்கிக்கொண்டிருக்கிறார்கள். மத்திய அரசின் நிலம் கையகப்படுத்தும் திட்டத்தை தமிழக அரசு எதிர்க்க வேண்டும், இல்லையென்றால் தமிழக அரசு களத்தில் இறங்கி போராடும்" என்று எச்சரித்தார்.

 பல லட்சம் இளைஞர்கள் வேலைவாய்ப்புக்காக காத்துக்கிடக்கிறார்கள். 50 சதவீதம்கூட இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கவில்லை, இளைஞர்கள் இந்த தேசத்தின் உயிர் நாடி. இளைஞர்களின் முன்னேற்றத்திற்காக த.மா.கா தொடர்ந்து பாடுபடும்.

25 கோடி பேர் சிறுபான்மையினர் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள், அவர்களின் முன்னேற்றத்திற்காகவும் பா.ஜ.க பாடுபட வேண்டும். சிறுபான்மையினரின் எண்ணங்களை பிரதிபலிக்கின்ற அரசாக செயல்பட வேண்டும். உலகத்தை சுற்றி வரும் பிரதமர், அதில் சிலமணி நேரம் தமிழகத்திற்காக ஒதுக்கி காவிரி பிரச்னையில் தீர்வு காணவேண்டும்.

முல்லைப்பெரியாறு பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். தென்னக நதிகளை இணைப்பதற்காக நிதி ஒதுக்க வேண்டும். தண்ணீர் இல்லாமல் விவசாயம் பொய்த்துப்போன விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும்.

காமராஜரின் பிறந்தநாள் விழாவை கொண்டாடும் பாரதீய ஜனதா, தமிழக மக்களின் நலனில் அக்கறை கொள்ள வேண்டும், நிலம் கையகப்படுத்தும் மசோதாவிற்கு தமிழக அரசு முழு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும்.

இளைஞர்கள் அதிகம் உள்ள கட்சி நம்முடைய கட்சிதான். மக்களின் வாழ்வாதார பிரச்னைகளை நாம் கையில் எடுத்து போராட வேண்டும். காமராஜரின் நேர்மை எளிமை, தூய்மையான ஆட்சி மீண்டும் வரவேண்டுமென்றால், கடுமையானஉழைப்பை மேற்கொண்டு சட்டமன்ற தேர்தலில் வெற்றியை உறுதி செய்ய வேண்டும். அடுத்து நாம் ஆட்சியை பிடிக்க வேண்டும்.” என்றார்.

-ஏ.ராம்
படங்கள்;
கே. குணசீலன்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்