Published:Updated:

வி.ஏ.ஓ.க்களுக்கு லேப்-டாப் உள்பட 43 புதிய திட்டங்கள்

வி.ஏ.ஓ.க்களுக்கு லேப்-டாப் உள்பட 43 புதிய திட்டங்கள்
வி.ஏ.ஓ.க்களுக்கு லேப்-டாப் உள்பட 43 புதிய திட்டங்கள்
வி.ஏ.ஓ.க்களுக்கு லேப்-டாப் உள்பட 43 புதிய திட்டங்கள்

சென்னை: அனைத்து கிராம நிர்வாக அதிகாரிகளுக்கும் (வி.ஏ.ஓ.) பிரின்டருடன் கூடிய லேப்-டாப் வழங்கப்படுவது உள்ளிட்ட 43 புதிய திட்டங்களை முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டார்.

சென்னை திங்கட்கிழமை முடிந்த மாவட்ட ஆட்சியர்கள் மாநாட்டின் நிறைவுரையில் முதல்வர் ஜெயலலிதா வெளியிட்ட புதிய அறிவிப்புகளின் விவரம்:

1. கோவை மாவட்டத்தில் மேட்டுப்பாளையம் ரோடு, திருச்சி ரோடு, அவினாசி ரோடு, பொள்ளாச்சி ரோடு, சத்தியமங்கலம் ரோடு ஆகியவை மேம்படுத்தப்படும்.

2. கோவை உக்கடம், ஆத்துப்பாலம், மேற்கு உள்வட்டச் சாலை மேம்பாலப் பணிகளுக்கு அனுமதி வழங்கப்படுகிறது.

3. ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் ஆழ்கடலுக்கு சென்று பலநாட்கள் மீன்பிடிக்க அனுமதிக்கப்படுவார்கள். தற்போது, ஒருநாள் மட்டும் ஆழ்கடலில் மீன்பிடிக்க அனுமதிக்கப்படுகிறது.

4. அரியலூர் மாவட்டத்தில் மிகவும் சேதமடைந்துள்ள 42 கிலோ மீட்டர் நீள சாலை சீரமைக்கப்படும்.

5. மாவட்டங்களில் அதிக வாகனங்கள் செல்லும் சாலைகளில், புதிய சாலைகளை வடிவமைப்பது பற்றி ஆய்வு மேற்கொள்ளப்படும்.

6. ஈரோட்டில் மாரியம்மன் கோவில் அருகே மேம்பாலம் கட்டப்படும்.

7. ஈரோட்டில் சி.எஸ்.ஐ. சர்ச் அருகில் உள்ள சாலை அகலப்படுத்தப்படும்.

8. ஊட்டிக்கு காரமடை வழியாக புதிய சாலையை திறப்பதற்கான வாய்ப்புகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படும்.

9. தூத்துக்குடி மாவட்டத்தில் சாலைகளில் நெரிசலைப் போக்குவதற்காக 'டிரக் டெர்மினல்' அமைக்கப்படும்.

10. பெரியகுளம்-கொடைக்கானல் இடையே சாலையை அகலப்படுத்தி அமைப்பது குறித்து ஆய்வு செய்யப்படும்.

11. மீன்வள பல்கலைக் கழகத்துடன் இணைந்த மீன்வள தொழில்நுட்ப நிறுவனம் நாகப்பட்டினத்தில் அமைக்கப்பட்டு வருகிறது. இதுபோன்ற நிறுவனம் திருவள்ளூர் மாவட்டத்திலும் அமைக்கப்படும். இந்த நிறுவனத்தில் மீனவர்களுக்கு மீன்பிடி தொழில் தொடர்பான பயிற்சி அளிக்கப்படும்.

12. திறமையான நிர்வாகத்திற்காகவும், சிறந்த சேவை ஆற்றுவதற்காகவும் பொன்னேரி வருவாய் கோட்டம் இரண்டாகப் பிரிக்கப்படுகிறது. அம்பத்தூரை தலைமை இடமாகக் கொண்டு அமைக்கப்படும் புதிய வருவாய் கோட்டத்தில், அம்பத்தூர், மாதவரம் தாலுகாக்கள் இடம்பெறும்.

13. சிவகாசி அரசு மருத்துவமனையில் தீக்காய சிகிச்சைப் பிரிவு மேம்படுத்தப்படும்.

14. திருவண்ணாமலையில் மகாதீபம் திருவிழா நடத்துவதற்காக, இந்து சமய அறநிலையத் துறை சார்பில் அளிக்கப்படும் நிதி 50 சதவீதத்தில் இருந்து 70 சதவீதமாக அதிகரிக்கப்படுகிறது.

15. சித்ரா பௌர்ணமி, மத திருவிழாவாக அறிவிக்கப்படுகிறது.

16. வேலூர் மாவட்டம், கிறிஸ்தவ மருத்துவ கல்லூரி சந்திப்பில் ஒரு மேம்பாலம் கட்ட அனுமதி அளிக்கப்படுகிறது.

17. வேலூரில் உள்வட்டச் சாலை அமைக்கப்படும்.

18. சிவகாசியில் தீப்பட்டி தொழிற்சாலையில் பணிபுரிவோருக்கு பயிற்சி அளிப்பதற்காக ஒரு பயிற்சி மையம் தொடங்கப்படும்.

19. நாமக்கல் புறநகரில் பொது-தனியார் பங்களிப்புடன் (பி.பி.பி. முறையில்) பஸ் பாடி கட்டும் மையம் கட்டப்படும்.

20. எப்போதெல்லாம் கடலில் மீனவர்கள் காணாமல் போகிறார்களோ, அப்போதெல்லாம் தேவைக்கேற்ப வாடகைக்கு ஹெலிகாப்டர் எடுத்து, மீனவர்களை தேடி, மீட்கும் பணி மேற்கொள்ளப்படும்.

21. மீனவர்களை தேடி, மீட்கும் பணிக்காக கடலோர காவல்படைக்கும், கடலோர போலீசாருக்கும் நவீன அதிவிரைவு படகுகள் வழங்கப்படும்.

23. தூத்துக்குடி நகருக்கு கூடுதல் தண்ணீர் சப்ளை செய்யப்படும்.

24. தூத்துக்குடியில் ஒருங்கிணைந்த பஸ் நிலையம் கட்டப்படும்.

25. தூத்துக்குடி, வி.வி.டி. சந்திப்பில் ஒரு மேம்பாலம் கட்டப்படும்.

26. பிளாஸ்டிக் கழிவுகளை தனியாகப் பிரித்தெடுத்து, சிறிய உருண்டையாக உருவாக்குவதற்கு சுய உதவிக் குழுக்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். அந்த உருண்டைகள் பிளாஸ்டிக்கும் தாரும் கலந்த ரோடு போடுவதற்கு பயன்படுத்தப்படும்.

27. அனைத்து மாவட்டங்களிலும் பள்ளிக்கூட ஆசிரியர்களின் வருகையை பதிவு செய்வதற்கு எஸ்.எம்.எஸ். (குறுஞ்செய்தி) அடிப்படையிலான வருகைப் பதிவு முறை அறிமுகப்படுத்தப்படும்.

28. புதிதாக தொடங்கப்படும் அரசு விடுதிகளில் சூரியஒளி மின்சக்தி பயன்படுத்தப்படும்.

29. மேட்டூர் அணையில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் ஜுன் மாதம் தண்ணீர் திறப்பதற்கு முன்பு, பாசன வாய்க்கால்களை தூர் வாருவதற்கு இனிமேல் ஜனவரி மாதமே நிர்வாக அனுமதி அளிக்கப்படும். இதுவரை மே மாதம்தான் நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

30. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பாசன வாய்க்கால்களில் தங்கு தடையின்றி தண்ணீர் செல்வதற்காக ஒருங்கிணைந்த தூர் வாரும் பணியும், ஆகாயத் தாமரைகளை அகற்றும் பணியும் மேற்கொள்ளப்படும்.

31. 'தாய்' திட்டத்தின் கீழ் தர்மபுரி மாவட்டம், வத்தல் மலையில் 12 கிலோ மீட்டர் தூரத்திற்கு இணைப்பு சாலை அமைக்கப்படும். சுற்றுலா துறையால் இந்த இடம், சுற்றுலா தலமாக மேம்படுத்தப்படும்.

32. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தோட்டக்கலை விவசாயிகளுக்கு உதவும் வகையில், அந்தப் பகுதியில் கூடுதலாக விளையும் மாம்பழங்களை கொள்முதல் செய்து, அவற்றை பதப்படுத்தி, மாம்பழ மில்க் ஷேக்காக தயாரித்து சத்துணவு மையங்களுக்கு கொடுப்பது பற்றி ஆவின் நிறுவனம் ஆய்வு மேற்கொள்ளும்.

33. அரியலூர் மாவட்டத்தில் மருதயாற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம் கட்டுவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

34. மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டதும், ஜனவரி மாதத்தில் அனைத்து குளங்கள், பாசன வாய்க்கால்களை பராமரிக்கும் பணி மேற்கொள்ளப்படும். அப்போதுதான் மேட்டூர் அணையில் இருந்து ஜுன் மாதம் தண்ணீர் திறந்துவிடும்போது அனைத்து குளங்களும், பாசன வாய்க்கால்களும் நல்ல நிலையில் இருக்கும்.

35. சிறிய வெங்காயம் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு உதவும் வகையில், தேசிய தோட்டக்கலை திட்டத்தில் சிறிய வெங்காயத்தை சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்.

36. கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்து, பெரம்பலூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் பலப்படுத்தப்படும்.

37. திருவள்ளூரில் உள்ள மாவட்ட அரசு மருத்துவமனை, விபத்து சிகிச்சைப் பிரிவுடன் மேம்படுத்தப்படும். இதனால், விபத்தில் காயமடைந்தவர்களை கூடுதல் சிகிச்சைக்காக அங்கிருந்து 60 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்ப வேண்டிய அவசியம் இருக்காது.

38. மாற்றுத்திறனாளிகள் ஓய்வூதியம் பெறுவதற்கு குறைந்தபட்ச வயது தகுதி 45 என்று நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இது, 18 வயதாக குறைக்கப்படுகிறது.

39. அனைத்து மாவட்டங்களிலும் சட்ட விஷயங்களை மேற்கொள்வதற்காக கலெக்டரின் நேர்முக உதவியாளர் என்ற புதிய பணியிடம் உருவாக்கப்படும்.

40. பொதுமக்களுக்கு சிறந்த சேவை அளிப்பதற்காக அனைத்து கிராம நிர்வாக அதிகாரிகளுக்கும் (வி.ஏ.ஓ.) பிரிண்டருடன் கூடிய லேப்-டாப் வழங்கப்படும்.

41. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோரம்பள்ளம் குளம் தூர் வாரப்பட்டு, அதன் கரைகள் பலப்படுத்தப்படும்.

42. கன்னியாகுமரி மாவட்டத்தில் சில வருவாய் கிராமங்கள் பெரியதாக இருப்பதால், அந்த கிராமங்கள் மாற்றி அமைக்கப்படும்.

43. கன்னியாகுமரி மாவட்டத்தில் கடல் அரிப்பை தடுப்பதற்கான பணிகளை மேற்கொள்வது பற்றி பொதுப்பணித் துறை ஆய்வு நடத்தும்.