Published:Updated:

இலங்கை கடற்படையினர் தாக்கியதில் மீனவர் படுகாயம்

விகடன் விமர்சனக்குழு

ராமேஸ்வரம்: கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்களை இலங்கை கடற்படையினர் கடுமையாக தாக்கினர். இதில், ஒரு மீனவர் படுகாயம் அடைந்தார்.

ராமேஸ்வரத்தில் இருந்து 650-க்கும் மேற்பட்ட படகுகளில் மீனவர்கள் திங்கட்கிழமை அதிகாலை மீன்பிடிக்கச் சென்றுள்ளனர்.

தனுஷ்கோடிக்கும், கச்சத்தீவுக்கும் இடையே அவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது 16க்கும் மேற்பட்ட அதிநவீன படகுகளில் வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களை தாக்கிவிட்டு அவர்களிடம் இருந்த மீன்களையும், வலைகள், கருவிகளையும் பறித்துச் சென்றனர்.

கடற்படை தாக்கியதில் செல்வராஜ் என்ற மீனவரின் தலைப்பகுதியில் பலத்த காயம் அடைந்தது. இதனால் அச்சமடைந்த மீனவர்கள் கரை திரும்பும்போது மீண்டும் வந்த இலங்கை கடற்படையினர், படகுகளின் மீது கற்களை வீசி சேதப்படுத்தினர். இதில், நூற்றுக்கும் மேற்பட்ட படகுகள் சேதமடைந்தன. நூற்றுக்கும் மேற்பட்ட மீனவர்கள் பாதிக்கப்பட்டனர்.

கரை திரும்பிய மீனவர்கள் இலங்கை கடற்படையினரின் மூர்க்கத்தனமான தாக்குதலினால் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இலங்கை கடற்படையினர் தாக்குதலை தடுத்து நிறுத்த மத்திய, மாநில அரசுகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை என்று ராமேஸ்வரம் மீனவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

மீனவர்களின் தாக்குதலினால் படுகாயமடைந்த செல்வராஜ் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.