Published:Updated:

`ரஜினிக்கு ஆதரவாக 5,000 வழக்கறிஞர்கள் ரெடி!' - பரபரப்பாகும் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு ஆணையம்

ரஜினிகாந்த்
ரஜினிகாந்த்

தூத்துக்குடியிலுள்ள அருணா ஜெகதீசன் ஆணையத்தில் ரஜினி ஆஜராகும் போது, அவருக்கு ஆதரவாக நிற்க ஒரு வழக்கறிஞர் படையே தயாராகி வருகிறது.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தின்போது, போராட்டக்காரர்களுக்கும் போலீஸாருக்கும் இடையே மே 22, 2018-ல் கலவரம் வெடித்தது. போலீஸார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர். இதுதொடர்பான வழக்குகளை சிபிஐ விசாரித்துவரும் நிலையில், ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில், ஒருநபர் விசாரணை ஆணையத்தை தமிழக அரசு அமைத்தது. 18 கட்ட விசாரணையை முடித்துள்ள அருணா ஜெகதீசன் விசாரணை ஆணையம், இதுவரை 704 பேருக்கு சம்மன் அனுப்பி, 445 பேரை சாட்சிகளாக விசாரித்துள்ளது. 630 ஆவணங்கள் குறியீடு செய்யப்பட்டுள்ளன.

தூத்துக்குடியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் சொல்லும் ரஜினி
தூத்துக்குடியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் சொல்லும் ரஜினி

துப்பாக்கிச்சூடு நடைபெற்ற பிறகு, பாதிக்கப்பட்டவர்களுக்கு நேரில் ஆறுதல் சொல்ல தூத்துக்குடி சென்ற ரஜினிகாந்த், ``மக்கள் போராட்டத்தில் சமூக விரோதிகள் ஊடுருவியதே கலவரத்துக்குக் காரணம். அவர்கள் யார் என்பதை உலகிற்கு அடையாளம் காட்ட வேண்டும். மக்களுக்கு பாதுகாப்பு அளிப்பதே போலீஸ்தான். போலீஸை மட்டும் குறை கூறுவது தவறு” என்றார். ரஜினிகாந்த்தின் இந்தக் கருத்து, பல்வேறு விமர்சனங்களை உருவாக்கியது. இந்த நிலையில், வரும் 25-ம் தேதி தனது 19-வது கட்ட விசாரணையை தொடங்கும் அருணா ஜெகதீசன் விசாரணை ஆணையம், நடிகர் ரஜினிகாந்த் நேரில் ஆஜராகி தனக்குத் தெரிந்த தகவல்களைத் தெரிவிக்குமாறு சம்மன் அனுப்பியுள்ளது. `சம்மன் கிடைத்தால் நேரில் ஆஜராகத் தயார்’ என ரஜினிகாந்த்தும் தன் முடிவில் உறுதியாக உள்ளார்.

`25ம் தேதி நேரில் ஆஜராகுங்கள்!' தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு விவகாரத்தில் ரஜினிக்கு சம்மன்

விசாரணை ஆணையத்தில் ரஜினி ஆஜராகும்பட்சத்தில், அவருக்கு ஆதரவாக 5,000 வழக்கறிஞர்களைத் திரட்டப் போவதாக சென்னை மற்றும் தூத்துக்குடியைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் அணி கூறியுள்ளது. இதுகுறித்து நம்மிடம் பேசிய சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞரும் இந்த அணியைச் சேர்ந்தவருமான கண்ணன், ``துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த ரஜினி, போராட்டத்தில் சமூக விரோதிகள் புகுந்துவிட்டதாகக் கூறியதில் எந்த உள்நோக்கமும் இல்லை. அ.தி.மு.க அரசுதான் அவரைத் தேவையில்லாமல் சீண்டி, ஒரு தலைவராக்க முயல்கிறது.

வழக்கறிஞர் கண்ணன்
வழக்கறிஞர் கண்ணன்

போலீஸார் அத்துமீறிவிட்டதாக ஸ்டாலின், திருமாவளவன் போன்றவர்கள் கூறினார்கள். அவர்களுக்கெல்லாம் சம்மன் அனுப்பாமல் ரஜினியை மட்டும் டார்க்கெட் செய்வது ஏன்? டிஎன்பிஎஸ்சி விவகாரத்தில் சிபிஐ விசாரணை வேண்டும் என்று அனைத்துக் கட்சி தலைவர்களும் வலியுறுத்துகிறார்கள். இதற்காக, அவர்களுக்கு சிபிசிஐடி சம்மன் அனுப்பி, ஆதாரங்களைக் கொடுக்குமாறு சொல்ல முடியுமா? போலீஸாரைத் தாக்குபவர்கள் சமூக விரோதிகள் என்கிற பொதுவான கண்ணோட்டத்தில்தான் ரஜினி சொன்னார்'' என்றார்.

`போலீஸ் எப்போது எப்படியிருப்பார்கள் எனக் கூற முடியாது!'- மாணவர்களின் சிஏஏ போராட்டம் குறித்து ரஜினி

தூத்துக்குடியிலுள்ள விசாரணை ஆணையத்தில் ரஜினி நேரில் ஆஜராக வரும்போது, அவருக்கு ஆதரவாக நிற்க தமிழகம் முழுவதும் வழக்கறிஞர்கள் படையைத் திரட்டிக் கொண்டிருக்கிறோம். ரஜினிக்குத் துணையாக 3000 வழக்கறிஞர்கள் நிற்போம். பிரச்சனைகள் ஏற்படும் பொழுதெல்லாம் அவர் நழுவுகிற மீன் என்று விமர்சித்துவந்தனர். இப்போது, பிரச்னையிலிருந்து ஒதுங்காமல், நேரில் ஆஜராவதாகக் கூறியுள்ளார். அவர் ஒரு திமிங்கிலம் என்பதை தமிழக அரசியல் பார்க்கத்தான்போகிறது” என்றார் சூடாக.

ரஜினி செய்தியாளர் சந்திப்பு
ரஜினி செய்தியாளர் சந்திப்பு

ரஜினி மக்கள் மன்றத்தின் சார்பாகவும் வழக்கறிஞர்களை ஒன்றுதிரட்டி, தூத்துக்குடிக்கு ரஜினி வரும்போது ஆதரவளிக்க அவர் ரசிகர்கள் ஆயத்தமாகிவருகின்றனர். மொத்தமாக 5000 வழக்கறிஞர்கள் ரஜினிக்கு ஆதரவாக தூத்துக்குடியில் கூடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்று காலை ரஜினி பேட்டியளித்தபோதே உஷாரான மாநில உளவுத்துறை அதிகாரிகள், தூத்துக்குடி மாவட்ட உளவுத்துறையை உஷார்படுத்தியுள்ளனர்.

பின் செல்ல