Published:Updated:

தீப்பிடிக்கும் குடிசைகள்...

தீப்பிடிக்கும் குடிசைகள்...

அ.மார்க்ஸ்
தீப்பிடிக்கும் குடிசைகள்... சந்தேகப்படும் மக்கள்!
தீப்பிடிக்கும் குடிசைகள்...
தீப்பிடிக்கும் குடிசைகள்...

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

சிங்காரச் சென்னை மாநகரின் பல பகுதிகளில் கடந்த இரண்டு மாதங்களுக்குள் 500-க்கும் மேற்பட்ட குடிசைகள் திடீர் திடீர் என எரிந்து சாம்பலா கியுள்ளன.

கண்ணெதிரே நெருப்புக்குத் தின்னக் கொடுத்துவிட்டு, கண்களில் நீர்பாய்ச்சி நிற்கிறார்கள் ஏழைகள். அவர்களுக்கு இரண்டு நாட்களுக்கு சாப்பாடும், இரண்டாயிரம் ரூபாய் இழப்பீடும் கொடுத்துவிட்டு, 'அக்கடா...' என மறந்துவிடுகிறது அரசாங்கம்!

ஏன் இந்தப் பாராமுகம்?

'எப்படியாவது இந்தக் குடிசைவாசிகளை இப்போதுள்ள இடங்களிலிருந்து வெளியேற்றிவிட வேண்டு'மென அரசு கடந்த ஓராண்டாக முயற்சித்துக் கொண்டிருக்கிறது. கொஞ்ச நாட்கள் கண்டுகொள்ளாமல் இருந்தால்... சென்னை

நகரிலிருந்து சுமார் 30 அல்லது 40 கிலோமீட்டர் தொலைவில் துரைப்பாக்கம் அல்லது காஞ்சிபுரம் சாலை என எங்காவது சொன்ன இடத்துக்குப் புலம் பெயர்ந்துவிடுவார்கள் என்பது தமிழக அரசின் திட்டம்.

சென்னையை அழகுபடுத்தி, போக்குவரத்தை விரை வாக்கி சிங்காரச் சென்னையாக மாற்றுவதற்கு அரசு பல திட்டங்களைத் தீட்டியுள்ளது. வியாசர்பாடி- பேசின்பிரிட்ஜ் சாலையை அகலப்படுத்துதல், வியாசர் பாடியில் மேம்பாலம் கட்டுதல், அடையாறு மலர் மருத்துவமனை தொடங்கி ஆற்றின் மேலும் கரையை ஒட்டியும் போரூர் நந்தம்பாக்கம் பாலம் வரை அதிவேக நெடுஞ்சாலை அமைத்தல், துறைமுகம் அருகிலுள்ள போர் நினைவுச் சின்னத்திலிருந்து கூவம் நதி மேலாக மதுரவாயில் வரை அதிவேக நெடுஞ்சாலை அமைத்தல், எண்ணூர்-பேசின்பிரிட்ஜ்-வால்டாக்ஸ் சாலை வழியாக பக்கிங்ஹாம் கால்வாய் மீது ஒரு அதிவேக நெடுஞ்சாலை, பறக்கும் ரயில் பாதைக்கு (MRTS) இணையாகச் சாலை அமைத்தல் என்பன சில முக்கியத் திட்டங்கள். இவற்றில் சில ஆலோசனைக் கட்டத்திலும், மற்றும் சில நடைமுறைப்படுத்தும் நிலையிலும் உள்ளன.

சென்னையை சிங்காரமாக்குவதாகச் சொல்லிக் கொண்டு அரசு செய்யும் சில மறைமுக வேலைகள், குடிசைகளைப் பிடிக்கும் தீயை விடக் கொடுமையாக இருக்கின்றன.

அந்த அதிர்ச்சி என்ன தெரியுமா? எங்கெல்லாம் அரசின் 'வளர்ச்சித் திட்டங்கள்' தீட்டப்பட்டுள்ளனவோ... அங்கெல்லாம்தான் பெரும்பாலும், இந்தத் தீவிபத்துகள் நடைபெற்றுள்ளன. எனவே, திட்டமிட்டு இந்தத் தீ வைப்புகள் நடந்திருக்கலாமோ என்கிற சந்தேகமும், பயமும் அந்த குடிசை மக்களிடையே நிலவுகின்றன. இது எங்கள் கவனத்துக்கு வந்ததை அடுத்து, சென்ற மாத இறுதியில் உண்மை அறியும் குழு ஒன்று அமைத்து, பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குச் சென்று விசாரித்தோம்.

கோ.சுகுமாரன், வி.கிருஷ்ணா ஆனந்த், பேராசிரியர்கள் மதுமிதா தத்தா, நித்யாராமன், சேரன், சீனிவாசன், பெர்னார்ட் டி சாமி, பத்திரிகையாளர் பீர் முஹம்மது, மருத்துவர்கள் அரவிந்தன், குருமூர்த்தி வழக்குரைஞர் ஜெயக்குமார் ஆகியோர் பங்குபெற்ற இந்த குழு, இரண்டாகப் பிரிந்து ஆராய்ந்தது. அதாவது ஒரு குழு தீப்பற்றி எரிந்த பகுதிகளுக்கும், மற்றது ஏற்கெனவே குடிசைவாசிகள் இடம் பெயர்த்துக் குடியமர்த்தப்பட்ட பகுதிகளுக்கும் சென்றது.

வியாசர்பாடி மூர்த்தி நகர், பி.கல்யாணபுரம், புது நகர் சேத்துப்பட்டு அவ்வைபுரம், நந்தம்பாக்கம் எம்.ஜி.ஆர். நகர் மற்றும் எம்.ஜி.ஆர். நகர் விரிவு ஆகிய பகுதிகளில் தீ விபத்து நடைபெற்ற இடங்களை நாங்கள் பார்வையிட்டுக் கொண்டிருந்தபோதே கொருக்குப்பேட்டை ஜே.ஜே நகரிலும், பெரம்பூர் பொன்னுசாமி நகர் அருகிலும் குடிசைகள் தீப்பற்றி எரிந்தன! கடைசி இரண்டு தீ விபத்துகளில் ஆறு பேர் இறந்துள்ளனர்.

தீப்பிடிக்கும் குடிசைகள்...

மூர்த்தி நகர், அவ்வைபுரம், பி.கல்யாணபுரம், எம்.ஜி.ஆர். நகர் உட்பட எல்லா இடங்களிலும் முன்ன தாகவே அரசு அதிகாரிகள் சென்று, 'இங்கே விரிவாக்கத் திட்டங்கள் வரப் போகிறது. அதனால் குடிசைகளை காலி பண்ணுங்கள்!' என கூறியிருக்கிறார்கள். புது நகரிலும், எம்.ஜி.ஆர். நகரிலும் விரிவாக்கத் திட்டங்களுக்காக அளந்து, குறியிட்டு சில இடங்களில் கல்லும் நட்டுவிட்டுச் சென்றுள்ளனர்.

அடையாறு பூங்கா டிரஸ்ட் சார்பாக இரண்டு மாதங்களுக்கு முன்னதாக எம்.ஜி.ஆர். நகர் மக்களை எல்லாம் கோட்டூர்புரத்துக்கு அழைத்துச் சென்றனர். அங்கே கூட்டம் நடத்தி நகர விரிவாக்கத் திட்டம் பற்றிச் சொல்லியுள்ளனர். மூர்த்தி நகரில் சென்ற மாதம் 13-ம் தேதி அரசு அதிகாரிகள் நடத்திய கூட்டத்தில், 'சாலை விரிவாக்கத்துக்காக ஒரு சில நாட்களுக்குள் குடிசைகளைக் காலி செய்யவேண்டும்' எனக் கூறியுள்ளனர். அடுத்த மூன்றாம் நாளான 16-ம் தேதியே, அங்கே குடிசைகள் தீப்பற்றி எரிந்துள்ளன. அவ்வை புரத்திலும் இப்படி எச்சரிக்கை செய்த நான்கு நாட்களில் தீ விபத்து (?) நடந்துள்ளது.

நந்தம்பாக்கம் எம்.ஜி.ஆர் நகரில் தீ விபத்து நடந்த அடுத்த நாளே, அந்தப் பகுதி சுத்தம் செய்யப்பட்டு, முள்வேலி அமைக்கப்பட்டிருக்கிறது. 'யாரும் அத்துமீறி நுழையக் கூடாது' என போர்டு வைக்கப்பட்டுள்ளது. அங்கிருந்த மக்கள் கட்டாயமாக வெளியேற்றப்பட்டு தாம்பரத்தைத் தாண்டி, ஆள் நடமாட்டமில்லாத கன்னட பாளையம் என்கிற பகுதியில், குடும்பம் ஒன்றுக்கு 1 சென்ட் (சுமார் 460 சதுர அடி) நிலம் கொடுத்து குடியேற்றப்பட்டுள்ளனர். அங்கு தண்ணீர், மின்சாரம் உட்பட எந்த வசதியும் கிடையாது!

இந்த விபத்துகள் தொடர்பாக தீயணைப்புப் படையினரிடம் விசாரித்தால்... ''காரணம் தெரியவில்லை. காவல் துறை புலனாய்வில் உள்ளது என்ற குறிப்புதான் பதிவேடுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. மின்கசிவு, காஸ் சிலிண்டர் விபத்து என்பது போன்று காரணம் எதுவும் சொல்ல இயலவில்லை!'' என்றார் ஓர் அதிகாரி.

காவல் துறை ஆவணங்களைப் பார்த்தால் 'தீ விபத்து!' (Accidental Fire) எனக் குறிப்பிட்டு எந்த விசாரணையும் இல்லாமல் கோப்புகள் முடிக்கப்பட்டு விடுகின்றன. 'இந்த விபத்துகளில் ஏதும் சதி இருக்கலாம் என மக்கள் சந்தேகப்படுகிறார்களே?' என என நாங்கள் வினவியபோது, ''பாதிக்கப்பட்டவங்க அப்படித்தான் சொல்வாங்க!'' என சாதாரணமாகக் கூறினார் பி.கல்யாணபுரம் காவல் நிலைய ஆய்வாளர்.

இத்தகைய விபத்துகளில் அதிகம் பாதிக்கப்படுவது குழந்தைகளும் பெண்களும் தான். தீ விபத்து, வீடுகளை மட்டுமின்றி குடியிருந்தோரின் அடிப்படை ஆவணங்கள், குழந்தைகளின் பாடப் புத்தகங்கள், சீருடைகள் என எல்லாவற்றையும் அழித்துவிடுகிறது. கட்டிய துண்டுடன் பள்ளி செல்லாமல் நின்றிருக்கும் குழந்தைகள், கிழிந்த ஃப்ளெக்ஸ் போர்டுகளைக் கூரைகளாகக் கவிழ்த்துக் கொண்டு வெயிலில் அமர்ந்துள்ள பெண்கள்... இன்னும் சில நாட்களில் மழைக் காலம்... என்ன செய்யப் போகிறார்களோ தெரியவில்லை!

ஏற்கெனவே இடம் பெயர்க்கப்பட்டுக் குடியமர்த்தப் பட்ட துரைப்பாக்கம் கண்ணகி நகர், குன்றத்தூர் அருகிலுள்ள நல்லூர், தாம்பரம் அருகிலுள்ள கன்னட பாளையம் ஆகிய பகுதிகளில் எந்த அடிப்படை வசதிகளும் இன்னும் செய்து கொடுக்கப்படவில்லை. தினசரி சராசரியாக ஒருவருக்குத் தேவைப்படும் 10 லிட்டர் தண்ணீர் கூட, எப்போதாவது வரும் தண்ணீர் லாரிகள் மூலம் கிடைப்பதில்லை. மூன்று நான்கு மைல் சென்று தண்ணீர் சுமந்து வருகின்றனர். இது தவிர மின்சாரம், தண்ணீர் சப்ளை ஆகியவற்றில் இடைத்தரகர்கள் புகுந்து அடிக்கும் கொள்ளைகள் வேறு. அத்துடன் இங்கு பள்ளி, மருத்துவமனை வசதிகள் இல்லை. இவ்வளவுக்கும் நடுவில் நாங்கள் வேலைக்காக மீண்டும் நகரத்துக்குள்தான் வரவேண்டும். இதனால் போக்குவரத்துச் செலவே 50 ரூபாய் வரை ஆகிறது. இத்தகைய சிக்கல்களால் படிப்பைப் பாதியில் நிறுத்தும் குழந்தைகளின் எண்ணிக்கை மிக அதிகமாக உள்ளது. வீட்டு வேலை செய்யும் பெண்களுக்கு இப்போது வேலையில்லை. கண்ணகி நகரில் மாதத்துக்கு 5 தற்கொலைகள் நடக்கின்றன என்கிறது காவல் துறை. இத்தகைய பகுதிகளில், கந்துவட்டி என்ற பெயரில் ஒரு நாளைக்கு சுமார் 10 லட்சம் ரூபாய் வரை புரள்கிறது என்கிறார்கள். எல்லாவற்றுக்கும் மேலாக இவ்வாறு குடியமர்த்தப்பட்ட பகுதிகள் அனைத்தும் நீர் தேங்கும் பகுதிகள். இதனால் வரவிருக்கும் மழைக் காலத்தில் இங்குள்ளவர்களுக்கு வெள்ள அபாயமும் உண்டு.

இடம் பெயர்த்துக் குடியமர்த்தல் என்பது பாதிக்கப் படும் மக்களுக்குப் பேரிடரை ஏற்படுத்தும் ஒரு அனுபவம். (Araumatic experience) நகரை அழகுபடுத்துதல் என்பதை, குடிசைகளைத் துடைத்தெறிதல் என்பதாகவே அரசு பொருள் கொள்கிறது. அதனால், இவ்வாறு இடம் பெயர்க்கப்பட்டவர்களது பிரச்னைகளை அணுவளவும் அரசு புரிந்து கொள்வதில்லை.

'புதிய குடியமர்த்தல் மற்றும் புதிய வாழ்வு அமைத்தல்' என்றொரு கொள்கையை தேசிய அளவில் உருவாக்குவது பற்றி, மத்திய அரசு பேசி வருகிறது. அறிவிக்கப்பட்டுள்ள நகர் கொள்கையில் பல குறைகள் உள்ளன. தவிரவும், இப்படியான ஒரு சட்டத்தை இயற்றுவதன் மூலம் மக்களை இடம்பெயர்க்கும் உரிமையை அரசு எடுத்துக்கொள்கிறது. 'பொது நலன்' என்று சொன்னால், யாருடைய இடத்தையும் அரசு கைப்பற்றிக் கொள்ளலாம் என்கிற காலனிய கால சட்டமே இன்றும் அமலில் உள்ளது. இதனால், அறிவிக்கப்படும் இழப்பீட்டுத் தொகை போதாது என்று வேண்டுமானால்... பாதிக்கப்பட்டவர்கள் நீதிமன்றம் போகலாமேயழிய, இடப்பெயர்வே தவறு எனச் சொல்ல முடியாது.

இடப் பெயர்வைக் கேள்வி கேட்கும் உரிமையை மக்களுக்கு வழங்கும் வண்ணம் புதிய சட்டம் உருவாக்கப்பட வேண்டும்.

சென்னையில் செயல்படுத்தப்படும் விரிவாக்கத் திட்டத்தால் எத்தனை பேர் பாதிக்கப்படுவார்கள், எத்தனை குடிசைப் பகுதிகள் காலி செய்யப்படப் போகின்றன, என்ன மாற்றுத் திட்டங்களை அரசு வைத்துள்ளது என்பது பற்றி அரசு உடனே ஒரு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். அது வரை, சென்னை நகரில் குடிசைவாசிகள் யாரையும் வெளி இடங்களுக்கு இடம் பெயர்க்கக் கூடாது என அவசர சட்டம் இயற்ற வேண்டும். மேலும், குறிப்பிட்ட இடைவெளிகளில் ஆங்காங்கே குடிசைகளில் நிகழும் 'திடீர் தீப்பற்றுதல்கள்' குறித்த மக்களின் ஐயங்களைப் போக்க, அரசு நீதி விசாரணை நடத்த வேண்டும்.

'ரோம் நகர் தீப்பிடித்து எரிகையில் பிடில் வாசித்தான் நீரோ மன்னன்...' என நாம் படித்திருக்கிறோம். அவனாவது பிடில் வாசித்தான். ஆனால், இன்றைய மக்களாட்சி மன்னர்கள்... குடிசைகளை அப்புறப்படுத்தத் தாங்களே தீ வைக்கும் வேலையைச் செய்கிறார்களோ என்ற ஐயம் கொழுந்துவிட்டு எரிகிறது!