வெளியிடப்பட்ட நேரம்: 15:17 (06/08/2015)

கடைசி தொடர்பு:16:07 (06/08/2015)

நமக்கு நாமே: 234 தொகுதிகளில் மு.க.ஸ்டாலின் சூறாவளி சுற்றுப்பயணம்!

சென்னை: அடுத்த ஆண்டு நடக்கவுள்ள தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்கு தயாராகியுள்ளது  திமுக. அதன் ஒரு பகுதியாக அக்கட்சியின் பொருளாளர் மு.க.ஸ்டாலின் தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் பொதுமக்களைச் சந்திக்கும் சூறாவளி சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார். 

இது தொடர்பாக திமுக சார்பில் வெளியிட்டுள்ள பத்திரிகை செய்திக் குறிப்பில்,

" தமிழக வரலாற்றில் இதுவரை காணாத மாபெரும் மக்கள் சந்திப்பு இயக்கமாக தளபதி மு.க.ஸ்டாலின் 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் பயணம் மேற்கொள்கிறார்.

தமிழக மக்களின் வாழ்வில் ஒளியேற்ற, தொலைநோக்குப் பார்வையுடன் கூடிய மாநில வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் அயராது பாடுபடக்கூடிய ஆக்கபூர்வமான ஓர் அரசை உருவாக்கும் எண்ணத்துடன் தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் "நமக்கு நாமே" என்ற இந்தப் "பயணம்" மாநிலம் முழுவதும் மேற்கொள்ள விருக்கிறார்.

அனைத்துத் தரப்பு மக்களையும் சந்தித்து அவர்களது பிரச்னைகளையும், எதிர்பார்ப்புகளையும் அறிந்து கொள்ள இந்த பயணத்தைத் மு.க.ஸ்டாலின் வருகின்ற 25.9.2015 அன்று தொடங்குகிறார். குமரி முனையிலிருந்து அவரது பயணம் தொடங்கி அண்ணா பிறந்த மாவட்டமான காஞ்சியில் நிறைவு பெறும்.

பயணத்தின் போது விவசாயிகள், தொழிலாளர்கள், மீனவர்கள், நெசவாளர்கள், மகளிர், மாணவர்கள், மகளிர் சுயஉதவிக் குழுவைச் சேர்ந்தவர்கள், தொழில் புரிவோர், பொறியாளர்கள், டாக்டர்கள், ஆசிரியர்கள், வழக்கறிஞர்கள் மற்றும் அரசு பணியாளர்கள் என்று சமுதாயத்தின் அங்கங்களாகத் திகழும் அனைவரையும் சந்தித்து அவர்களுடன் தனித்தனியே கலந்துரையாடல் நடத்துகிறார்.

அப்போது மக்களின் விருப்பங்களையும், ஆலோசனைகளையும் கேட்டறிவது மட்டுமின்றி, தமிழக மக்கள் ஒவ்வொருவரும் மாற்றத்திற்கான உந்து சக்தியாகச் செயல்பட வேண்டும் என்பதையும் மு.க.ஸ்டாலின் விளக்கி உரையாற்றுவார்.

234 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் செல்லும் வகையில் மூன்று கட்டங்களாகப் பயணத் திட்டங்கள் வகுக்கப்பட்டு, இந்த "நமக்கு நாமே" பயணம் இரண்டு மாதங்கள் சிறப்பாக நடைபெறும். இறுதியில் 8.11.2015 அன்று காஞ்சிபுரத்தில் மாபெரும் பேரணியுடன் இந்த "பயணம்" நிறைவு பெறும்.

இதுவரை எந்தப் பயணத்திலும் இல்லாத அளவிற்கு ஏறக்குறைய 4 கோடி மக்களை சந்திப்பதற்கு ஏற்ற விதத்தில் இப்பயணத்தின் நிகழ்ச்சி நிரல்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

பயணத்தின் போது மு.க.ஸ்டாலின் நகரங்களில் "டவுன் ஹால் கூட்டங்கள்" "திறந்த வெளிக் கூட்டங்கள்" நடத்தி பல்வேறு தரப்பு மக்கள், பொதுநலச் சங்கங்கள், ஈடுபாடுள்ள அமைப்பினர் ஆகியோரைச் சந்தித்து மாநில நலன் மற்றும் முன்னேற்றம் தொடர்பான பல்வேறு விஷயங்கள் பற்றியும், பிரச்சனைகளுக்கான தீர்வுகள் பற்றியும் அவர்களுடைய கருத்துக்களை நேரடியாக அறிவார்.

இப்படி நடைபெறும் ஒவ்வொரு கூட்டங்களிலும் தெரியவரும் மக்கள் பிரச்சனைகள் மற்றும் மக்களின் ஆலோசனைகள் அடங்கிய அறிக்கை ஒன்று தொகுக்கப்பட்டு அவை வருகின்ற சட்டமன்றத் தேர்தலுக்கான திராவிட முன்னேற்றக் கழகத்தின் தேர்தல் அறிக்கையில் சேர்க்கப்படும்.

திராவிட முன்னேற்றக் கழகம் தலைவர் கலைஞர் தலைமையில் அளித்த நல்லாட்சி பற்றியும், ஆட்சியின் சாதனைகள் பற்றியும் மக்களிடம் எடுத்துக் கூறி, இனி 2016ல் திராவிட முன்னேற்றக் கழக அரசு அமையும் போது என்ன மாதிரியான செயல்பாடுகளை மக்கள் எதிர்பார்க்கிறார்கள் என்பது பற்றிய கருத்துக்கள் பெறப்படுவதுடன், எவ்வகையான திட்டங்கள் நிறைவேற்றப்பட வேண்டும் என கருதுகிறார்கள் என்பது பற்றியும் மக்களின் ஆலோசனைகளைப் பெறும் வகையில் இந்த எழுச்சிப் பயணம் அமையும்.

திராவிட முன்னேற்றக் கழகத் தோழர்கள் அனைவரும் இந்த "நமக்கு நாமே" பயணத்தை மாபெரும் வெற்றிப் பயணமாக மாற்றுவதற்கு உணர்வொன்றி உழைப்பார்கள். இந்த பிரம்மாண்டப் பயணத்திற்குச் செயல் வடிவம் கொடுக்கும் அனைத்து ஏற்பாடுகளையும் அதற்கென்று அர்ப்பணிப்புடன் செயல்படும் குழுவும், கட்சி நிர்வாகிகளும் மேற்கொள்வார்கள். இந்தச் சீர்மிகு பயணத்திற்கு இடையிடையே அதுவரை மேற்கொள்ளப்பட்ட பயணத்தின் சிறப்பம்சங்கள் வெளியிடப்படும்.

அ.தி.மு.க. ஆட்சியினால் இழந்துவிட்ட தமிழகத்தின் அருமை பெருமைகளை மீட்டெடுக்க வருகின்ற செப்டம்பர் 25ஆம் தேதியன்று கன்னியாகுமரியிலிருந்து மு.க.ஸ்டாலின் "நமக்கு நாமே" பயணம் தொடங்குகிறார்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க