Published:Updated:

கலக்கத்தில் கல்கி பகவான் கோட்டை..!

கலக்கத்தில் கல்கி பகவான் கோட்டை..!

அப்பா - மகன் சண்டை...
கலக்கத்தில் கல்கி பகவான் கோட்டை..!
கலக்கத்தில் கல்கி பகவான் கோட்டை..!

ல்கி பகவான் குறித்தும் அவரது ஆசிரமம் பற்றியும் அவ்வப்போது பல பரபரப்பு சர்ச்சைகள் எழுந்ததுண்டு! இப்போது கல்கி பகவானுக்கும் அவரது மகனுக்குமே விரிசல் என புது சர்ச்சை கிளம்பியுள்ளது!

கலக்கத்தில் கல்கி பகவான் கோட்டை..!

கல்கி பகவானுக்கு தென்னிந்தியா மட்டுமின்றி, கடல் கடந்தும் திரளான பக்தர்

கூட்டம் உண்டு. சில நாட்களுக்கு முன் இந்த கல்கி பகவானும், அவரது மகன் கிருஷ்ணாஜியும் மாறி மாறி அறிக்கை விட்டு மோதிக்கொண்டனர். இந்த திடீர் மோதல், கல்கி பக்தர்களை கடும் குழப்பத்தில் தள்ளியிருக்கிறது!

இந்நிலையில், தன் ஆதரவாளர்களுடன் தீவிரமாகக் கலந்தாலோசித்த கிருஷ்ணாஜி, ''நான் தனியாக ஒரு அமைப்பைத் தொடங்குகிறேன். விரைவில் அதன் பெயர் உள்ளிட்ட விவரங்களை முறைப்படி அறிவிப்பேன்!'' என சொல்லி, பக்தர்களிடையே மேலும் அதிர்வலைகளை ஏற்படுத்தினார்.

இதைத் தொடர்ந்து, கடந்த நவம்பர் 27-ம் தேதி பத்திரிகையாளர்களை சந்தித்த விஷ்வநாத் சுவாமி என்பவர், ''கல்கி பகவானிடம் இருந்து பிரிந்து தனி அமைப்பைத் தொடங்கப்போவதாக அவரது மகன் சொல்லியிருப்பது, முழுக்க முழுக்கப் பணத்துக்காக தந்தையும் மகனும் சேர்ந்து திட்டமிட்டு நடத்தும் ஒரு நாடகம்!'' என்று ஒரு குண்டை வீசியிருக்கிறார். ஒரு காலத்தில் கல்கி பகவானின் நெருங்கிய நண்பராக இருந்து, பின்னர் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, அவரிடம் இருந்து விலகிவந்தவர் இவர். பரபரப்பான குற்றச்சாட்டுகளை கல்கி பகவான் ஆசிரமம் நோக்கி வைத்ததன் மூலம், ஜூ.வி. வாசகர்களுக்கு ஏற்கெனவே இவர் அறிமுகமானவர்தான். விஷ்வநாத் சுவாமியை நாம் இம்முறையும் சந்தித்தோம்.

''கல்கி பகவானோட இயற்பெயர் விஜய குமார். நானும் அவரும் 80-களின் மத்தியில் எல்.ஐ.சி. ஏஜென்டா பணியாற்றினோம். தத்துவஞானி ஜே.கே-வின் கருத்துகளில் தீவிரப் பற்றுக் கொண்ட நாங்கள், அவரது தியானக் கூட்டங்களுக்குத் தொடர்ந்து செல்வோம். அப்போதுதான், ஆந்திராவில் இருந்த 'ரிஷி வேல்யூ

கலக்கத்தில் கல்கி பகவான் கோட்டை..!

ஸ்கூல் ஆஃப் ஜே.கே. ஃபவுண்டேஷ'னில் ஆசிரியராகப் பணி புரியும் வாய்ப்பு எங்கள் இருவருக்கும் வந்தது. சில ஆண்டுகள் அங்கே வேலை பார்த்தோம். திடீரென 1989-ல் விஜயகுமார், 'நான் விஷ்ணுவின் அவதாரம். என் பெயர் கல்கி பகவான்' என தனக்குத்தானே பறைசாற்றிக் கொண்டார். அதுவரை அவர் தொடர்பிலிருந்த இருந்த நான், அவரது பணத்தாசை கண்டு வெறுத்து ஒதுங்கிவிட்டேன். ஆனாலும் அவரது நடவடிக்கைகளை இந்த நிமிடம் வரை தீவிரமாகக் கண்காணித்து வருகிறேன்...'' என்றவர், தொடர்ந்து...

''சில நாட்களுக்கு முன் கிருஷ்ணாஜி, 'நமது குடும்பத்தில் பிளவு ஏற்படும் சூழல் தெரிகிறது. அதிருப்தியாளர்கள், அமைதி காத்திடுங்கள். உங்களுக்காக நான் தந்தையிடம் பேசுகிறேன்.. என நியூயார்க்கில் இருந்தபடி ஒரு அறிக்கைவிட்டார். அங்கிருந்து கிளம்பி வந்து, ஒரு வார காலமாக தந்தையிடம் பல கட்டப் பேச்சுவார்த்தை நடத்துவது போல தோற்றம் காட்டினார். இறுதியாக, கல்கி பகவான் வெளியிட்ட ஓர் அறிக்கையில், 'எனது மகனும் இன்னும் சிலரும் எனது அனுமதி, ஆசீர்வாதம் இல்லாமல் தனியாகப் பிரிந்து வேறொரு அமைப்பை ஆரம்பித்திருக்கிறார்கள். நமது எண்ணங்களுக்கு மாறாகச் செயல்படுகிறார்கள்' என்றார். 'அனைத்து வகுப்புகளும் இனி இலவசமாக செயல்படும். செலவுகளுக்குத் தேவையான பணம் மட்டுமே கட்டணமாக வசூலிக்கப்படும்' என்றும் சொன்னார்.

இதுவரை பக்தர்களிடம் வசூலிக்கப்பட்ட கோடிக்கணக் காண பணம் பற்றி கல்கி பகவானுக்குத் தெரியாதா? இவருடைய ஒப்புதல் இல்லாமலா அதெல்லாம் வசூலித்தார்கள்? அவரை தனிப்பட்ட முறையில் பார்க்க வேண்டும் என்றாலே 50,000 ரூபாயும், அவரது மனைவி பத்மாவதியை (அம்மா பகவான்!) சந்திக்க வேண்டும் என்றால் 25,000 ரூபாயும் வசூலித்த பின்புதானே அனுமதியே கொடுத்தார்கள்?

'கல்கி டிரஸ்ட் ஃபார் ரூரல் சர்வீஸ்' என்று ஒரு டிரஸ்ட் வைத்துள்ளனர். ஏழைகளின் உதவிக்கு என டிரஸ்ட் மூலம் பல கோடி ரூபாய் நன்கொடை வசூலாகிறது! அதில் சொற்ப அளவே ஏழைகளுக்குப் போகிறது. மீதிப் பணத்தை கல்கி பகவானின் மகன், தன் கட்டுமான கம்பெனியான 'கோல்டன் ஷெல்டர் பிரைவேட் லிமிடெட்'டில் கொட்டி, கோடிகோடியாகச் சம்பாதிக்கிறார். இதற்கு பேர்தான் டிரஸ்ட்டா?! அதே போல 'காஸ்மிக் மியூசிக் கம்பெனி' என்ற பெயரில் 10-க்கும் மேற்பட்ட சினிமா படங்களுக்கு மறைமுக ஃபைனான்ஸ் போகிறது!

கலக்கத்தில் கல்கி பகவான் கோட்டை..!

இதெல்லாம் அறிந்து பல பக்தர்கள் அதிருப்தியடைந்தனர். அவர்களை மீண்டும் தக்க வைத்துக்கொள்ளவே இரண்டு அணியாகப் பிரிவதுபோல் இந்தப் பிளவு நாடகம்! வெளி உலகத்துக்கு 'மகன் என் பேச்சைக் கேட்கவில்லை. பிரிந்து போகிறான்' என்று சொல்லி விட்டு தன் மகனின் பிஸினஸ் வளர்ச்சியை ரசிக்கிறார் கல்கி பகவான்!'' என்று முடித்தார் விஷ்வநாத் சுவாமி.

''உலகம் முழுக்க கல்கி பகவான் மேல் ஏற்பட்ட ஈர்ப்பால், எத்தனையோ பிரபலங்கள் பக்தர்களாக உள்ளனர். கல்கி பகவானின் மகனே தனி அமைப்பாகப் பிரிவதால், 'இனி யாரைப் பின்பற்றுவது..?' என்ற குழப்பம் அவர்களுக்கு ஏற்பட்டுள்ளது...'' என்று சொல்லும் சிலர், கல்கி பகவான் தொடர்புடைய பாலிவுட் சங்கதிகளையும் நம்மிடம் பகிர்ந்துகொண்டனர்.

''இந்த பிளவு பாலிவுட்டிலும் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது. ஒரு முறை நடிகை மனீஷா கொய்ராலா, மிகுந்த மனநெருக்கடியில் இருந்தபோது கல்கி பகவானை கேள்விப்பட்டு, போய் பார்த்திருக்கிறார். அதன்பிறகே அத்தனை கஷ்டங்களும் தீர்ந்து, புதுப் பிறவி எடுத்ததுபோல் உணர்ந்தாராம். ஹிருத்திக் ரோஷன், ஷில்பா ஷெட்டியும்கூட பக்தர்கள் பட்டியலில் அடக்கம். சமீபத்தில் திருமணம் முடிந்த கையோடு ஷில்பா ஷெட்டி, நேராகச் சென்று கால்பதித்தது கல்கி பகவானின் இருப்பிடத்தில்தான். இவரது திருமண நாளை குறித்துக் கொடுத்ததும் கல்கி பகவான்தானாம்!'' என்றார்கள்.

கல்கி பகவானின் வெளிநாட்டு ஆசிரம விவகாரங்களை இதுவரை கவனித்து வந்ததே அவரது மகன் கிருஷ்ணாஜிதான். அவரது பிளவால் அங்கும் நிர்வாகச் சிக்கல் என்று கல்கி வட்டாரத்தில் பேசுகிறார்கள்!

கிருஷ்ணாஜியின் நெருங்கிய நட்பு வட்டத்திடம், புது அமைப்பு தொடங்கப்படுவதன் அவசியம் குறித்துக் கேட்டோம்.

''துரதிர்ஷ்டவசமாக சில கொள்கைரீதியான வேறுபாடுகள் குடும்பத்திலும் ஆசிரம நிர்வாகிகளி டையேயும் ஏற்பட்டுவிட்டது. அதை சரிசெய்யும் நல்லலெண்ணத்தில்தான் ஸ்ரீகிருஷ்ணாஜி தனி அமைப்பு தொடங்குகிறார். கல்கி பகவானின் ஆசியுடன்தான் இந்த தனி அமைப்பைத் துவங்குவதாக பக்தர்களுக்கு தெளிவாகவே சொல்லியுமிருக்கிறார். கல்கி பகவானையும், அம்மா பகவானையும் மானசீக வழிகாட்டிகளாகக் கொண்டே செயல்படுவோம். புதிய அமைப்பின் மூலம் புத்துணர்வுடன் செயல்பட்டு, பலரது வாழ்வில் ஒளி ஏற்றவேண்டும் என்பதே எங்கள் நோக்கம். விரைவில் அதற்கான அறிவிப்பை கிருஷ்ணாஜி வெளியிடுவார். மற்றபடி, வியாபாரத்தில் ட்ரஸ்ட் பணத்தை இறக்கினார் என சொல்லப்படும் குற்றச்சாட்டுகள் எதிலும் உண்மை கிடையாது! இப்படி அவதூறு பரப்புகிறவர்க ளுக்கும் அன்பு காட்டும் குணம் கொண்டவர் கிருஷ்ணாஜி!'' என்றனர்.

'ஒன்னெஸ் குடும்பம்' என்ற பெயரில் தங்களை அழைத்துக்கொண்டு, எல்லாம் ஒன்றே என போதிப்பவர்களே, தங்கள் சொந்த குடும்பத்துக்குள்ளேயே ஒன்றுபட்டு இருக்க முடியாமல் ரெண்டாகப் பிளந்துகொண்டால்... ஆன்மிகமாக ஆட்டிப் படைக்கும் அந்த சக்தியைத்தான் என்னவென்று சொல்ல!

- தி.கோபி விஜய்
படங்கள் கே.கார்த்திகேயன்