சசிபெருமாள் குடும்பத்தினர் கைது அடக்குமுறையாகும்: வைகோ கண்டனம்! | Vaiko condemns for the arrest of sasiperumal family

வெளியிடப்பட்ட நேரம்: 11:24 (04/09/2015)

கடைசி தொடர்பு:12:23 (04/09/2015)

சசிபெருமாள் குடும்பத்தினர் கைது அடக்குமுறையாகும்: வைகோ கண்டனம்!

சென்னை: மது ஒழிப்புத் தியாகி சசிபெருமாள் குடும்பத்தினர் கைதுக்கு ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்து உள்ளார்.

இது குறித்து ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில், ''தமிழ்நாட்டில் முழு மதுவிலக்கை தமிழக அரசு அமல்படுத்தக் கோரி பல ஆண்டுகளாகப் போராடி வந்த காந்தியவாதி சசிபெருமாள், கன்னியாகுமரி மாவட்டம் உண்ணாமலைக் கடையில் ஜூலை 31 ஆம் தேதி அறப்போர் நடத்தியபோது, அரசு அதிகாரிகளின் அலட்சியத்தால் சாகடிக்கப்பட்டார்.

இந்நிலையில், நடைபெறும் சட்டமன்றக் கூட்டத் தொடரில் முழு மதுவிலக்கை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றக் கோரி சசிபெருமாள் குடும்பத்தினர், அவர்களின் கிராமத்துக்கு அருகே சித்தர்கோயிலில் காந்தி சிலை அருகில் உண்ணாவிரதம் மேற்கொண்டபோது, சசிபெருமாளின் அண்ணன் வெங்கடாசலம், அவரது தம்பி செல்வம், சசிபெருமாளின் புதல்வர்கள் விவேக், நவநீதன், செல்வத்தின் மகன் ராஜா ஆகிய ஐந்து பேரும் காவல்துறையால் கைது செய்யப்பட்ட செயல் அடக்குமுறை நடவடிக்கையாகும்.

ஜனநாயக உரிமைகளை மறுப்பதாகும். காவல்துறையின் அராஜகத்துக்கு கண்டனம் தெரிவிப்பதோடு, கைது செய்யப்பட்டவர்களை உடனே விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறேன்" என்று கூறி உள்ளார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்