வெளியிடப்பட்ட நேரம்: 17:43 (18/09/2015)

கடைசி தொடர்பு:18:57 (18/09/2015)

ஜீவனாம்சம் பெறும் பெண் பாலியல் தூய்மையுடன் இருக்க வேண்டுமா? உ.வாசுகி பதில்!

மாவட்டந்தோறும் மதுவினால் சீரழிந்த பெண்களின் கோரிக்கை மாநாட்டினை நடத்தி, அதன் மூலம் அந்த மாவட்டத்திலுள்ள குடியினால் சீரழிந்த பெண்களின் மறுபக்கத்தினை அடையாளம் கண்டு, அந்த பிரச்னைகளிலிருந்து விடுபடுவதற்கான தீர்வுகளை சொல்லி வருகிறார் இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் தேசிய துணைத்தலைவர் உ.வாசுகி.

தேனி வந்திருந்தவரிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்...!

மதுவால் சீரழிந்த பெண்களின் கோரிக்கை மாநாட்டின் பணிகள் குறித்து சொல்லுங்கள்?

தமிழகம் முழுக்க கடந்த 15 மாதங்களுக்கு மேலாக டாஸ்மாக் கடைகளுக்கு பூட்டு போடும் போராட்டத்தை நடத்தி வருகிறோம். அத்தகைய இடங்களில் மதுவால் பாதிக்கப்பட்ட பெண்கள் தங்களுடைய கண்ணீர் கதைகளை சொன்ன போது, அதனை ஒழுங்குபடுத்தி குடியால் பாதிக்கப்பட்டவர்களின் கோரிக்கை மாநாட்டினை நடத்தினோம். அது அவர்களுடைய அனுபவங்களை சொல்ல ஒரு தளமாக அமைந்தது. இத்தகைய மாநாடுகளில் கலந்து கொண்டவர்களில் சிலர், பாதிக்கப்பட்ட பெண்களின் குழந்தைகளுக்கான படிப்பு செலவு, குடும்ப வன்முறை என்னும் போது உரிய முறையில் சட்டத்தின் கீழ் வழக்கு தொடுத்தல் ஆகிய பணிகளுக்கு ஆதரவாக இருந்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவியும் வருகின்றனர். ஒரு பக்கம் மதுபானக்கடைகளுக்கு எதிர்ப்பு, இன்னொரு பக்கம் பாதிப்புகளுக்கு நிவாரணம் என்ற ரீதியில் இந்த பிரச்னையை அணுகி வருகிறோம்.

கோவை மாவட்டத்தில் 108 குடும்பங்களில் நடத்திய ஆய்வில், ஒரு நாளைக்கு 300 ரூபாய் வீதம் மாதம் சராசரியாக 10,000 ரூபாய்க்கு குடிக்கிறார்கள். அனைத்து தொழிலாளிகளுக்கும் குறைந்தபட்ச சம்பளம் 15,000 என்ற கோரிக்கையே நிறைவேறாமல் உள்ளபோது, அதே அளவு பணத்தை குடிக்கிறார்கள் என்றால் எவ்வளவு வேதனையான விசயம். இப்படிப்பட்ட நிலையில், குடியை தாண்டிய தேவைகளுக்காக பிறரிடம் கடன் வாங்கவும், மனைவிகளின் வருமானத்தில் திருடவும், குழந்தைகளின் கல்விக்கட்டணத்தில் கை வைக்கவும் என எல்லாமே இயல்பாக நடக்கின்றன. அதனை மையமாக வைத்து டாஸ்மாக் கடைகளுக்கு பூட்டு போராட்டம் 2014 ஆம் வருடம் ஆரம்பித்தோம்.

இந்த போராட்டங்கள் வருகின்ற சட்டசபை தேர்தலை மையப்படுத்தி இருப்பதாக ஒரு பேச்சு உள்ளதே?

இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தை பொறுத்தவரை அப்போதிருந்து இப்போதுவரை மக்களின், பெண்களின் பிரச்னைக்கு ஆதரவாக போராடி வருகிறோம். தற்போது டாஸ்மாக் விவகாரம் பெரிதாக தலையெடுத்திருக்கிறது. இதில் இரண்டு திராவிட இயக்கங்களும் சளைத்தவர்கள் அல்ல. பொது மக்களுக்கு ஏற்படும் தீமைகளை காக்கவும், அதே நேரத்தில் அரசாங்கத்தின் ஒரே வருவாய் மூலத்தினை நிறுத்த சொல்வதுமான வேளையில், பெண்கள் மட்டும் போராடினால் போதாது. விவசாயிகள், ஆண்கள், சமூக ஆர்வலர்கள் மாணவர்கள் என அனைவரும் இணைந்து போராட வேண்டும்.

மதுவிலக்கு என்ற ஒரு வரியிலும் விஷயத்தை முடிக்க விரும்பவில்லை. மதுபான கடைகள் மூடப்பட வேண்டும், கள்ளச்சாராயம் தடுக்கப்பட வேண்டும், போதை ஒழிப்பு பிரசாரத்தில் அரசாங்கம் தீவிரமாக ஈடுபட வேண்டும், குடிநோயாளி மீட்பு மையங்களை அதிகப்படுத்த வேண்டும். இந்த வழிமுறைகளை பின்பற்றி தான் முழுமையாக மதுவிலக்கினை அமல்படுத்த முடியும் என, பிரச்னைகளை தீர்க்கும் முறையிலும் நாங்கள் உறுதியாக உள்ளோம்.

மதுவிலக்கு கோரி சட்டக்கல்லூரி மாணவி நந்தினி கடந்த பல வருடங்களாக போராடி வரும் நிலையில், இந்திய ஜனநாயக மாதர் சங்கம் எவ்விதமான ஆதரவையும் தரவில்லையே?

நந்தினி மட்டுமல்ல, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், மாணவர் சங்கம் போன்ற அமைப்புகளும் பல இடங்களில் தனிமனிதர்களாகவும், கூட்டமாகவும் சேர்ந்து போராடிக்கொண்டுதான் இருக்கிறார்கள். இத்தகைய போராட்டத்தில் ஈடுபடக்கூடியவர்களை ஒருங்கிணைக்கும் வேலையை செய்து போராட்டத்தினை விரிவுபடுத்தும் நடவடிக்கையில் உள்ளோம். அந்த நிகழ்வில் நிச்சயமாக நந்தினியின் முயற்சியையும் எடுத்துக்கொள்வோம்.

மோடி- ஜெயலலிதா சந்திப்பை விமர்சித்து பேசிய ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு எவ்விதமான கண்டனத்தினையும்  மாதர் சங்கம் தெரிவித்தது போன்று தெரியவில்லையே?

ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள  அறிக்கையில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மற்றும் காடுவெட்டி குருவின் பேச்சுக்களை கண்டித்து அறிக்கை வெளியிட்டிருந்தோம். அரசியலில் மாற்றுக்கருத்துக்கள் இருப்பது இயல்பு. அதனை வெளிப்படுத்தும் போது அரசியல் நாகரிகம், பண்பாடு தேவை. அனைத்து விமர்சனங்களும் அரசியல் நாகரித்துக்கு உட்பட்டதாகவே இருக்க வேண்டும். இன்றல்ல, 90ஆம் ஆண்டு கால கட்டத்திலேயே, ஜெயலலிதா முதலமைச்சாரன போது, அவர் பெண் என்பதாலேயே அவரை விமர்சித்தனர். அதேபோல் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ஒரு புடவையின் பின்னால் செல்வது போன்ற கார்ட்டூன் போட்டிருந்தார்கள். பெண் என்பதாலேயே அவரை தலைவராக ஏற்றுக்கொள்ள முடியாமல் இருந்த நாட்களும் உண்டு. இதனை கண்டித்து அப்போதும், இப்போதும் எங்களுடைய எதிர்ப்பை தெரிவித்து வருகிறோம்.

ஜீவனாம்சம் பெறக்கூடிய பெண், பாலியல் தூய்மையுடன் இருக்க வேண்டும் என்ற மதுரை உயர் நீதிமன்ற கிளையில் தீர்ப்பு பற்றி?

இதுபோல் ஒரு பிற்போக்குத்தனமான தீர்ப்பு இருக்கவே முடியாது. இது மாதிரியான சட்டங்கள் எங்கே இருக்கிறது என நீதிபதிதான் சொல்ல வேண்டும். தற்போது நடைமுறையில் இருக்கும் சட்டத்தினை வைத்து, இங்கு ஏற்படும் வழக்குகளுக்கு தொடர்புடைய சட்டங்களை பயன்படுத்தி தீர்வு காணவேண்டுமே தவிர, எந்த சட்டப்பிரிவிலும் இல்லாத ஒன்றை ஜீவனாம்சம் கேட்பதற்கான தகுதியாக சொல்லியிருக்கிறார் நீதிபதி.

விவாகரத்திற்கு பின்பு அவர்கள் விரும்பும்  செயல்களை அவர்களே தீர்மானிக்கலாம். திருமண பந்தத்தில் கணவனும், மனைவியும் ஒருவித கட்டுப்பாட்டில் இருக்கும்படி எதிர்பார்க்கப்படுகிறார்கள். அந்த உறவில் ஒரு புரிதல் இருக்கவேண்டும் என்ற முறையில் அதனை பார்க்க வேண்டும். விவாகரத்திற்கு பிறகு எந்த ஒரு ஆணுடன் நட்பு, உறவு கொள்ளக்கூடாது. அப்படி இருந்தால் அது ஜீவனாம்சம் கேட்க தகுதியில்லை என்பது ஒரு ஆணாதிக்க பிற்போக்குத்தனமான விஷயம். இதேபோல் தமிழகத்தில் வந்திருக்கும் பிற்போக்குத்தனமான தீர்ப்புகளை கண்டித்து சென்னையில் ஒரு கூட்டம் நடத்தவிருக்கிறோம்.

டெல்லி மருத்துவ கல்லூரி மாணவி பலாத்காரம் செய்யப்பட்டது, ஈழத்தில் ஊடகவியலாளர் இசைப்பிரியா பலாத்காரம் செய்யப்பட்டது இந்த இரண்டு விவகாரத்திலும் முன்னதில் காட்டிய தீவிர எதிர்ப்பை, பின்னதில் காட்டவில்லையே? ஈழ விவகாரத்தில் மார்க்சிய நிலைபாடுகள் வேறுபடுகின்றனவா?

நிர்பயா விவகாரத்தை ‘பலாத்காரம் செய்யப்பட்டார்’ என்பதை விட, ‘பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டார்’ என்றே சொல்ல வேண்டும். நிர்பயா விவகாரம் இந்தியாவில் நடந்த ஒரு செயல். அந்த செயலுக்கு இந்திய அரசு பதில்சொல்ல கடமைப்பட்டிருக்கிறது என்ற ரீதியில் முழுமையாக போராட்டத்தை முன்னெடுத்தோம். இதுபோன்ற பாலியல் வல்லுறவுகள் இந்தியா மட்டுமல்ல, எங்கு நடந்தாலும் அதை கண்டிப்பாக ஜனநாயக மாதர் சங்கம் கண்டிக்கும். அதனை எதிர்த்து குரல் கொடுக்கும்.

ஈழப்பிரச்சனைக்கு மார்க்சியவாதிகள் குரல் கொடுப்பதில்லை என்பது தமிழ்தேசியவாதிகள் கட்டமைத்திருக்கும் ஒரு புனைவு. ஈழத்தில் நடக்கும் பிரச்னைகளுக்கு தனி ஈழம் தான் தீர்வு என சிலரும், ஒன்றுபட்ட இலங்கையில் அரசியல் தீர்வு தான் என சிலரும் தீர்வுகளை முன் வைக்கிறார்கள். இங்கே தீர்வுகள்தான் வேறு வேறே தவிர, தீர்க்கப்பட வேண்டியவை மக்களின் பிரச்னைகள்தான். இந்த போராட்டத்தில் ஜனநாயகம் எண்ணம் கொண்ட் சிங்களவர்களும் இணைக்கப்பட வேண்டும். சிங்களவர்கள் அனைவரும் நமக்கு விரோதிகள் கிடையாது.

உ.சிவராமன்

படங்கள் : வீ.சக்தி அருணகிரி

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்