Published:Updated:

`ராஜ மாதாவை மதிக்காத மிஸ்ரா; சிந்தியாவைக் கண்டுக்கொள்ளாத கமல்நாத்!’ -திரும்புகிறதா 53 வருட வரலாறு?

ராஜ மாதா விஜய ராஜே
ராஜ மாதா விஜய ராஜே

ஜோதிர் ஆதித்யாவைப் போலவே தன் பேச்சுக்கு மதிப்பளிக்கத்தால், 1967ல் காங்கிரஸ் கட்சியை அலறவைத்தார், விஜயா ராஜே. 53 வருட வரலாறு, தற்போது மீண்டும் அவரது பேரன் மூலமாகவே நிகழ்ந்துள்ளது.

தேசிய அரசியலில் திடீர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார், ஜோதிர் ஆதித்யா சிந்தியா. காங்கிரஸ் கட்சியில் தனக்கு முக்கியத்துவம் தரவில்லை என்பதால் இந்த முடிவை அவர் எடுத்துள்ளார் என்கின்றனர். அதிருப்தியை வெளிப்படுத்தும் விதமாகவே, சோனியா காந்திக்கு கடிதம் எழுதிவிட்டு, பிரதமர் மோடி மற்றும் அமித் ஷாவை சந்தித்து, பா.ஜ.க-வில் இணைவதற்கு அச்சாரம் போட்டுள்ளார். இன்றோ அல்லது நாளையோ அவர் அதிகாரபூர்வமாக பா.ஜ.க-வில் இணைவார் என்கின்றன தேசிய அரசியல் வட்டாரங்கள்.

ஜோதிர் ஆதித்யா சிந்தியா
ஜோதிர் ஆதித்யா சிந்தியா

மத்தியப்பிரதேச அரசியலில் இதுபோன்ற திடீர் டுவிஸ்ட் நடப்பது முதல்முறையல்ல. இதற்கு முன்பும் நடந்துள்ளது. அதை நடத்தியவர், தற்போது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் ஜோதிர் ஆதித்யா சிந்தியாவின் பாட்டி விஜயா ராஜே எனப்படும் ராஜமாதா தான். ஜோதிர் ஆதித்யாவைப் போலவே, தன் பேச்சுக்கு மதிப்பளிக்காததால், 1967ல் காங்கிரஸ் கட்சியை அலறவைத்தார் விஜயா ராஜே. 53 வருட வரலாறு, தற்போது மீண்டும் அவரது பேரன் மூலமாகவே நிகழ்ந்துள்ளது.

`குவாலியர் சமஸ்தான அரசர்; நோ கட்சி பதவி!'- காங்கிரஸில் புயலைக் கிளப்பிய ஜோதிர்ஆதித்யா சிந்தியா யார்?

1967 ஃப்ளாஷ்பேக்!

மத்தியப்பிரதேசத்தின் குவாலியரை ஆட்சி செய்த சிந்தியா என்ற மராத்திய அரச குடும்ப ராணியாக வலம்வந்தவர், விஜய ராஜே. பிரிட்டிஷாரிடமிருந்து விடுதலை பெற்றபிறகும், குவாலியர் சமஸ்தானத்தில் மக்கள் செல்வாக்கிலும் சரி, சொத்து மதிப்பிலும் சரி, உண்மையான ராணியாகவே வலம்வந்தார். அந்தப் பகுதி மக்கள், அவரை பெயர் சொல்லி அழைப்பதற்குப் பதிலாக ராஜமாதா என்றே அழைத்துவந்தனர். அந்த அளவுக்கு மக்கள் செல்வாக்குடன் இருந்தவர். முதலில், காங்கிரஸ் கட்சியில் இணைந்து பணியாற்றிவந்தார். 1957ல் குணா தொகுதியிலும், அதற்கடுத்து குவாலியர் தொகுதியில் இருந்தும் எம்.பி-யாகத் தேர்வானார்.

விஜய ராஜே
விஜய ராஜே

இதற்கிடையே, தான் 1967ல் அப்போது காங்கிரஸ் முதல்வராக இருந்த டி.பி. மிஸ்ரா உடன் மாணவர் இயக்கம் தொடர்பாக முரண்பட்டார், விஜய ராஜே. 1967ல் நடந்த மாணவர் இயக்கத்தின் போராட்டத்தைக் கலைக்க போலீஸ் துப்பாக்கிச் சூடு நடத்தியது. இதைக் கண்டித்த அவர், குவாலியர் எஸ்.பி-யை நீக்கக் கோரி முதல்வர் டி.பி. மிஸ்ராவுக்குக் கடிதம் எழுதினார். ஆனால், முதல்வர் விஜய ராஜேவின் பேச்சை கண்டுகொள்ளவில்லை. இதிலிருந்தே இருவருக்கும் முரண்பாடு ஏற்பட்டுள்ளது.

`உறவினர்களுக்கு நோ பதவி; கடமை, கண்ணியம் அவசியம்!’ - அமைச்சர்களுக்கு மோடியின் 5 கட்டளைகள்

சில நாள்களில், குவாலியரில் தேர்தல் தொடர்பாக மாணவர்கள் இயக்கத்தின் கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்திரா காந்தி தொடங்கிவைத்த அந்தக் கூட்டத்தில், மிஸ்ராவை சந்திக்கச் சென்றுள்ளார் விஜய ராஜே. ஆனால், அவரை வேண்டும் என்றே மிஸ்ரா 15 நிமிடம் காத்திருக்க வைத்ததாகக் கூறப்படுகிறது. இந்த காத்திருப்பை ரசிக்காத ராஜே, தனக்கு இருக்கும் செல்வாக்கை மிஸ்ராவுக்கு உணர்த்த வேண்டும் எனத் தீர்மானித்து, காங்கிரஸிலிருந்து வெளியேறினார். அந்த வருடத்தில் நடந்த தேர்தலில், சுயேட்சையாக குணா தொகுதியில் போட்டியிட்டு எம்.பி-யாக வெற்றிபெற்றார்.

சிந்தியா - கமல்நாத்
சிந்தியா - கமல்நாத்

தேர்தலுக்குப் பிறகு, 36 எம்.எல்.ஏ-க்கள் காங்கிரஸை விட்டு வெளியேறி, விஜய ராஜேவுக்கு ஆதரவு தெரிவிக்க, டி.பி. மிஸ்ரா ராஜினாமா செய்தார். பின்னர், 36 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவோடு, சத்னாவின் கோவிந்தநாராயண் சிங்கை முதல்வராக அமர்த்தி, மீண்டும் ராஜ மாதா என்பதை நிரூபித்தார் விஜய ராஜே. மத்தியப் பிரதேச அரசியல் வரலாற்றில், காங்கிரஸ் அல்லாத அரசு அமைக்கப்பட்டது அதுவே முதல்முறை. 53 வருடங்களுக்குப் பிறகு, இதே வரலாற்றை மீண்டும் நிகழ்த்தியுள்ளார், அவரது பேரன் சிந்தியா.

அலிபாபா சாம்ராஜ்ஜியத்தின் - அடுத்த அரசர் டேனியல் ஜாங்க்!

2018ல் காங்கிரஸ் ஆட்சி பீடத்தில் அமரும்போதே, கமல்நாத்துடன் சிந்தியாதான் முதல்வர் ரேஸில் இருந்தார். ஆனால், சிந்தியாவை சமரசம் செய்த ராகுல் காந்தி, கமல்நாத்துக்கு முதல்வர் பதவியைக் கொடுத்தார். அப்போதிருந்தே இருவருக்குமான முட்டல்மோதல் தொடங்கிவிட்டது. மாநில அரசும், கட்சித் தலைமையும் பா.ஜ.க கொண்டுவந்த 370 சட்டப்பிரிவு நீக்கத்தை எதிர்க்க, சிந்தியாவோ மத்திய அரசின் நடவடிக்கையை ஆதரித்தார். போன மாதம் அரசு கொடுத்த வாக்குறுதிகள் தொடர்பாக கமல்நாத் அரசை எச்சரித்தார் சிந்தியா. அப்போது இதுதொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்ப, அதற்கு `முடிந்ததைப் பார்த்துக்கொள்ளட்டும்' என்கிற ரீதியில் பதில் கொடுத்தார் கமல்நாத்.

சிந்தியா - கமல்நாத்
சிந்தியா - கமல்நாத்

நேற்று, மாநிலங்களவைத் தேர்தல் வேட்பாளர்களைத் தேர்வு செய்வது தொடர்பாக டெல்லியில் சோனியா காந்தியை சந்தித்தார். கூட்டத்திற்குப் பிறகு, சிந்தியாவை ராஜ்யசபாவுக்கு அனுப்புவது குறித்து ஏதாவது பேசினீர்களா என்று ஊடகங்கள் கேள்வி எழுப்பின. அப்படி எதுவும் பேசவில்லை என்று கமல்நாத் கூறினார். கமல்நாத்தின் இந்தப் பதில் வெளியான சில மணி நேரங்களுக்குப் பிறகு, 6 ​​அமைச்சர்கள் உட்பட, தனது ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் 17 பேருடன் பெங்களூருக்கு சென்றார் சிந்தியா.

முதல்வர் பதவி கிடைக்காவிட்டாலும், மாநிலத் தலைமை கிடைக்கும் என்று சிந்தியா கணக்கு போட்டதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால், காங்கிரஸ் தலைமை சம்மதித்தாலும் அதற்கு கமல்நாத் சம்மதிக்கவில்லை என்பதால்தான், அவருக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும் என்பதற்காகவே கட்சி மாறுகிறார் என்று கூறியுள்ளனர்.

Vikatan
அடுத்த கட்டுரைக்கு