Published:Updated:

`நான் போகிறேன்... திரும்ப வர மாட்டேன்’ - நிறைவேறாத தமிழருவி மணியனின் அரை நூற்றாண்டுக் கனவு!

தமிழருவி மணியன், ரஜினிகாந்த்
தமிழருவி மணியன், ரஜினிகாந்த்

தமிழருவி மணியன், கடந்த 2016-ம் ஆண்டிலும் இப்படியோர் அறிவிப்பை வெளியிட்டார். பின்னர் எதற்காக அந்த முடிவிருந்து பின்வாங்கினார் என்று பார்ப்பதற்கு முன்பாக. தமிழருவி மணியன் குறித்த சில அடிப்படையான விஷயங்களைத் தெரிந்துகொள்வோம்.

``1967-ல் பெருந்தலைவர் காமராஜர் விருதுநகரில் தோற்கடிக்கப்பட்ட அன்று, தியாகராய நகரிலிருக்கிற திருமலைப் பிள்ளை வீதியில், கண்ணீரும் கம்பலையுமாகக் கூடிக்கிடந்த மக்களுக்கு நடுவே சென்று அவருடைய காலடியில் விழுந்து அரசியலைத் தொடங்கியவன் நான். இன்று ஐம்பது ஆண்டுகள் கடந்துவிட்டன. இந்த ஐம்பது ஆண்டுகளில் நான் நெஞ்சுக்குள் நேர்ந்துகொண்ட ஒரே தவம் என்ன தெரியுமா... பெருந்தலைவர் காமராஜர் மரணத்தைச் சந்திக்கிற இறுதிக் கணம் வரையிலும், அவர் சொன்னது தி.மு.க., அ.தி.மு.க ஆகிய இரு கட்சிகளும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள். இந்த இரண்டு திராவிடக் கட்சிகளையும் தமிழகத்து அரசியலிலிருந்து அப்புறப்படுத்த வேண்டும் என்பதே. பெருந்தலைவரின் உண்மையான தொண்டனாக அவரின் கனவை நிறைவேற்ற வேண்டிய சபதம் என்னிடம் இருக்கிறது.’’
தமிழருவி மணியன்.
2017-ம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம் திருச்சி தென்னூர் உழவர்சந்தை மைதானத்தில் காந்திய மக்கள் இயக்கம் சார்பில், `ரஜினியின் அரசியல் பிரவேசம் அவசியமா?’ என்கிற தலைப்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், தமிழருவி மணியன் பேசிய வார்த்தைகள் இவை.
தமிழருவி மணியன்
தமிழருவி மணியன்

தொடர்ந்து பேசிய அவர், ``காமராஜரின் கனவை நிறைவேற்ற, நான் பலரைப் பரிந்துரைத்தேன். ஆனால், என்னால் அதை நிறைவேற்ற முடியவில்லை. காலம் எனக்களித்திருக்கிற கடைசிக் கருணை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்’’ எனப் பேச, கூடியிருந்த ரஜினி ரசிகர்கள், கைதட்டியும் விசிலடித்தும் ஆர்ப்பரித்தனர். அப்படி காமராஜரின் சிஷ்யனாக, தான் ஏற்றுக்கொண்ட சபதத்தை ரஜினியை முதல்வராக்கி நிறைவேற்ற புறப்பட்ட தமிழருவி மணியன், கட்சி தொடங்கப்போவதில்லை என்கிற ரஜினியின் நேற்றைய அறிவிப்பால்,

``மாணிக்கத்துக்கும் கூழாங்கற்களுக்கும் பேதம் தெரியாத அரசியல் உலகில் இனி நான் சாதிக்க ஒன்றும் இல்லை. என் நேர்மையும், தூய்மையும், வாழ்வியல் ஒழுக்கமும் போற்றப்படாத அரசியல் களத்திலிருந்து முற்றாக நான் விலகி நிற்பதே விவேகமானது. எந்தக் கைமாறும் கருதாமல் சமூகநலனுக்காக என்னுடன் கைகோத்த காந்திய மக்கள் இயக்க நண்பர்களின் அடி தொழுது நான் விடைபெற்றுக்கொள்கிறேன். இறப்பு என்னைத் தழுவும் இறுதி நாள் வரை நான் அரசியலில் மீண்டும் அடியெடுத்துவைக்க மாட்டேன்.”
தமிழருவி மணியன்

என மிகவும் உருக்கமான அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். ஆனால், தமிழருவி மணியன் இப்படி பொது வாழ்க்கையைவிட்டு விலகிக்கொள்வேன் என அறிவித்திருப்பது இது முதன்முறை இல்லை. கடந்த 2016-ம் ஆண்டிலும் இப்படியோர் அறிவிப்பை வெளியிட்டார். பின்னர் எதற்காக அந்த முடிவிலிருந்து பின்வாங்கினார் என்று பார்ப்பதற்கு முன்பாக. தமிழருவி மணியன் குறித்த சில அடிப்படையான விஷயங்களைத் தெரிந்துகொள்வோம்.

அர்ஜுனமூர்த்தி
அர்ஜுனமூர்த்தி

தமிழருவி மணியன்!

பள்ளி ஆசிரியராக இருந்தவர், காமராஜரால் ஈர்க்கப்பட்டு அரசியலுக்கு வந்தார். காமராஜரின் மறைவுக்குப் பிறகு ஜனதா கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டார். தொடர்ந்து, லோக்சக்தி, தமிழ் மாநில காங்கிரஸ், காங்கிரஸ் ஆகிய கட்சிகளிலும் பயணித்துவந்தவர், 2009-ம் ஆண்டு, அக்டோபர் 2-ம் தேதி காந்தி பிறந்தநாளில், `காந்திய மக்கள் இயக்கம்’ எனும் இயக்கத்தைத் தொடங்கினார். பின்னர் அதை அரசியல் கட்சியாக மாற்றி, 2014 நாடாளுமன்றத் தேர்தலில், பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியை ஆதரித்துப் பிரசாரம் செய்தார். பின்னர், 2016 சட்டமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டார். அந்தத் தேர்தலில், 2,000 வாக்குகளுக்குக் கீழ் வாங்கினால் பொதுவாழ்க்கையைவிட்டு விலகுவதாக அறிவித்தார். முடிவுகள் எதிர்பார்த்தபடி இல்லாததால், சில காலம் பொது வாழ்விலிருந்து ஒதுங்கியிருந்தவர், ரஜினி தன்னைச் சந்திக்க விரும்பிய செய்தி அறிந்ததும், 2017-ம் ஆண்டு அவரை நேரில் சந்தித்தார்.

`மது வருமானத்துக்கு மாற்று வழி தேடச்சொன்ன ரஜினி!' `திட்ட அறிக்கை' தயாரித்த தமிழருவி மணியன்

தொடர்ச்சியாக தொலைக்காட்சி விவாதங்களிலும் பொதுக்கூட்டங்கள் நடத்தியும் ரஜினிக்கு ஆதரவாகப் பேசிவந்தார். ரஜினியையும் அடிக்கடி அவரது வீட்டில் சந்தித்துப் பேசிவந்தார். அவரின் அரசியல் ஆலோசகராகவே பார்க்கப்பட்டுவந்தார். தொடர்ந்து பலமுறை ரசிகர் மன்ற நிர்வாகிகள் சந்திப்புகள், ரஜினி வருவார், இல்லை வர மாட்டார் என்கிற மாறுபட்ட கருத்துகள் நிலவிவந்த நிலையில்,

``ஜனவரி மாதம் கட்சி தொடங்கப்படும் என்றும், அது தொடர்பான விவரங்கள் வரும் டிசம்பர் 31-ம் தேதி வெளியிடப்படும் என்றும் தன் ட்விட்டர் பக்கத்தில் டிசம்பர் 3-ம் தேதி காலை வெளியிட்டார் ரஜினி. தொடர்ந்து, பத்திரிகையாளர்களைச் சந்தித்த ரஜினி, கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக அர்ஜுனமூர்த்தி என்பவரையும், மேற்பார்வையாளராக தமிழருவி மணியனையும் நியமித்திருப்பதாக அறிவித்தார். இந்தநிலையில் நேற்று, கட்சி தொடங்கப்போவதில்லை என அறிவித்திருக்கிறார் நடிகர் ரஜினிகாந்த்.

தமிழருவி மணியனின் அறிக்கை
தமிழருவி மணியனின் அறிக்கை

இந்தநிலையில்தான், ``என் கல்லூரிப் பருவத்தில் நான் காமராஜர் காலடியில் என் அரசியல் வாழ்வைத் தொடங்கினேன். 50 ஆண்டுகளுக்கு மேல் நீண்ட என் அரசியல் வேள்வி அப்பழுக்கற்றது. இரண்டு திராவிடக் கட்சிகளால் தமிழகத்தின் அனைத்து மேலான பொதுவாழ்க்கைப் பண்புகளும் பாழடைந்துவிட்டன. அரசியல் ஊழல் மலிந்த சாக்கடையாகச் சரிந்துவிட்டது'' என்று தொடங்கி '' தி.மு.க-விலிருந்து விலகும்போது கண்ணதாசன் `போய் வருகிறேன்’ என்றார்; நான் போகிறேன், வர மாட்டேன்” என முடியும் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.

``தமிழ்நாட்டு மக்களுக்கு இவர் சொல்வதைப்போல அரசியலில் `மாணிக்கத்துக்கும் கூழாங்கற்களுக்கும் பேதம் தெரியாமல்’ இருக்கலாம். ஆனால், பாலுக்கும் நஞ்சுக்கும் இடையிலான பேதம் தெரியும். காந்தியைக் கொன்ற கோட்சேவைவிடக் கொடியது காந்தியின் பெயரால் கோட்சே அரசியலைப் பேசுவது'' என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் ரவிக்குமார் போன்றவர்கள் விமர்சனங்களை முன்வைத்துவருகின்றனர்.

அடுத்த கட்டுரைக்கு