Published:Updated:

'உயர் நீதிமன்ற மதுரை கிளையை மூடி வைக்கலாம்!' - காட்டம் காட்டிய நீதிபதிகள்

விகடன் விமர்சனக்குழு
'உயர் நீதிமன்ற மதுரை கிளையை மூடி வைக்கலாம்!' - காட்டம் காட்டிய நீதிபதிகள்
'உயர் நீதிமன்ற மதுரை கிளையை மூடி வைக்கலாம்!' - காட்டம் காட்டிய நீதிபதிகள்
'உயர் நீதிமன்ற மதுரை கிளையை மூடி வைக்கலாம்!' - காட்டம் காட்டிய நீதிபதிகள்

சென்னை: உயர் நீதிமன்ற மதுரை கிளையை சிறிது காலம் மூடி வைக்கலாம் மதுரை வழக்கறிஞர்களுக்கு எதிரான வழக்கு விசாரணையின்போது சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் கடந்த ஜூலை 1ஆம் தேதி முதல் இருசக்கர வாகன ஓட்டிகள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மதுரை வழக்கறிஞர் சங்கம் சார்பில் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டது.

இதையடுத்து, மதுரை வழக்கறிஞர் சங்க தலைவர் தர்மராஜ், செயலாளர் ராமசாமி ஆகியோர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை இன்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் தமிழ்வாணன், செல்வம் ஆகியோர் முன்னிலையில் நடந்தது.

அப்போது ஹெல்மட் அணிவதற்கு எதிராக மதுரை வழக்கறிஞர்கள் நடத்திய போராட்டம் குறித்து கடும் அதிருப்தி வெளியிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணைக்கு ஆஜரான வழக்கறிஞர்களிடம் கடுமை காட்டினர்.

விசாரணையின்போது இந்த வழக்கு குறித்து கருத்து தெரிவித்த நீதிபதிகள், ''வழக்கறிஞர்களின் சட்டவிரோத போராட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

வழக்கறிஞர்களின் ஹெல்மெட்டுக்கு எதிரான போராட்டங்கள் குறித்து அதிக நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரிக்க வேண்டும். அதேபோல், உயர் நீதிமன்ற மதுரைக்கிளையை சிறிது காலத்திற்கு மூடி வைக்கலாம்'' என்றனர்.

இது வழக்கறிஞர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதையடுத்து, வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் பால்கனகராஜ் செய்தியாளர்களிடம் கூறுகையில், ''வழக்கறிஞர்கள் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை அதிக நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரிக்கும் என நீதிபதி தமிழ்வாணன் அறிவித்துள்ளார். எந்த அமர்வு வழக்கை விசாரிக்கும் என்பது பற்றி தலைமை நீதிபதி முடிவு செய்வார்'' என்றார்.