Published:Updated:

ஒரே நாளில் வெளுத்தது இலங்கை சாயம்; தமிழீழம் தான் ஒரே தீர்வு என்கிறார் ராமதாஸ்!

விகடன் விமர்சனக்குழு
ஒரே நாளில் வெளுத்தது இலங்கை சாயம்; தமிழீழம் தான் ஒரே தீர்வு என்கிறார் ராமதாஸ்!
ஒரே நாளில் வெளுத்தது இலங்கை சாயம்; தமிழீழம் தான் ஒரே தீர்வு என்கிறார் ராமதாஸ்!
ஒரே நாளில் வெளுத்தது இலங்கை சாயம்; தமிழீழம் தான் ஒரே தீர்வு என்கிறார் ராமதாஸ்!

சென்னை: போர்க்குற்ற விசாரணை தொடர்பான விவகாரத்தில் இலங்கை அரசின் சாயம் ஒரே நாளில் அப்பட்டமாக வெளுத்துவிட்டது. தனித் தமிழீழம் அமைப்பது தான் ஒரே தீர்வு என்று ராமதாஸ் தெரிவித்து உள்ளார்.

இது குறித்து பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளைக்கு என்பார்கள்... ஆனால், போர்க்குற்ற விசாரணை தொடர்பான  விவகாரத்தில் இலங்கையின் சாயம் ஒரே நாளில் அப்பட்டமாக வெளுத்துவிட்டது. போர்க்குற்றங்கள் பற்றி பன்னாட்டு நீதிபதிகளைக் கொண்டு இலங்கை நீதிமன்றம் விசாரணை நடத்த வேண்டும் என ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், அத்தகைய விசாரணை நடத்த முடியாது; உள்நாட்டு விசாரணைதான் நடத்த முடியும் என அதிபர் சிறிசேனா கூறியுள்ளார். இந்த விசாரணையில் பன்னாட்டு வழக்கறிஞர்களை அனுமதிக்க முடியாது என இலங்கை கூறியுள்ளது.

ஜெனிவாவில் உள்ள ஐ.நா. மனித உரிமை பேரவையில் இலங்கை மீதான தீர்மானம் நிறைவேற்றப்பட்ட அதே நேரத்தில் நியூயார்க்கில், நியூயார்க் டைம்ஸ் நாளிதழுக்கு அளித்த நேர்காணலில்தான் இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனா அவரது உண்மையான முகத்தை காட்டியுள்ளார். 

அதுமட்டுமின்றி, போர்க்குற்ற விசாரணை என்பது இலங்கையின் சட்டத்திற்கு உட்பட்டதாகத்தான் இருக்கும். விசாரணை அமைப்பு எத்தகைய தன்மை கொண்டதாக இருக்கும் என்பதை இலங்கையின் ராணுவ அதிகாரிகள், பௌத்த மதத் தலைவர்கள் ஆகியோருடன் கலந்து பேசி முடிவு எடுப்போம் என்று அவர் கூறியிருப்பதிலிருந்தே இலங்கை நிர்வாகத்தில் ஆதிக்கம் செலுத்துபவது யார் என்பதையும் அறிய முடியும். ஒன்றரை லட்சம் அப்பாவித் தமிழர் படுகொலை செய்யப்பட்டது குறித்த விசாரணையில் இலங்கை நீதி வழங்கும் என உரக்கக் கூறிவந்த இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் இப்போது என்ன பதில் சொல்லப்போகின்றன? என்பது தான் உலககெங்கும் உள்ள தமிழர்கள் எழுப்பும் வினா.

இப்போதுதான் என்றில்லை.... 50 ஆண்டுகளுக்கு முன்பு ஈழத்தமிழர் பிரச்னை உருவெடுத்த நாளில் இருந்தே இலங்கை அரசு அளித்த எந்த வாக்குறுதியும் நிறைவேற்றப்பட்டதில்லை.

ஒரு வேளை நேர்மையான போர்க்குற்ற விசாரணைக்கு இலங்கை ஒத்துழைக்க வில்லை என்றால், அந்நாடு இன்னும் திருந்தவில்லை என்பதை உலக சமுதாயம் புரிந்துகொள்ள வேண்டும். இப்படிப்பட்ட நாட்டில் தமிழர்கள் நிம்மதியாகவும், கண்ணியமாகவும் வாழ முடியாது என்பதால், அவர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில், உலகெங்கும் உள்ள ஈழத்தமிழர்களிடையே ஐ.நா. மூலம் பொது வாக்கெடுப்பு நடத்தி வடக்கு, கிழக்கு மாநிலங்களை தனித் தமிழீழமாக அறிவிக்க வேண்டும்" என்று தெரிவித்து உள்ளார்.