அதிமுகவின் 44 வது ஆண்டு தொடக்க விழா: 3 நாள் கொண்டாட்டம்!

சென்னை: அதிமுகவின் 44 வது ஆண்டு வரும் 17- ம் தேதி தொடங்குவதையொட்டி, தொடர்ந்து 3 நாட்கள் பொதுக்கூட்டங்கள் நடத்தியும், கட்சிக் கொடி ஏற்றியும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாட வேண்டும் என்று ஜெயலலிதா கட்சித் தொண்டர்களைக் கேட்டுக் கொண்டுள்ளார். 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிக்கையில், "அ.தி.மு.க. தொடங்கி 43 ஆண்டுகள் நிறைவடைந்து, 17.10.2015 அன்று 44–வது ஆண்டு தொடங்குவதைக் கொண்டாடும் வகையில், 18–ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) முதல் 20–ம் தேதி (செவ்வாய்க்கிழமை) வரை மூன்று நாட்கள் 'அ.தி.மு.க. 44–வது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டங்கள்' கழக அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் ஒன்றியங்கள், நகரங்கள் மற்றும் மாநகராட்சிகளுக்கு உட்பட்ட பகுதிகளிலும், கழக அமைப்புகள் செயல்பட்டுக் கொண்டிருக்கும் புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா, மகாராஷ்டிரா, கேரளா, புதுடெல்லி மற்றும் அந்தமான் உள்ளிட்ட பிற மாநிலங்களிலும் நடைபெற உள்ளன.

பொதுக்கூட்டங்கள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ள இடங்களும், அவற்றில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுவோர் விபரங்கள் அடங்கிய பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது. கழக சட்டமன்ற உறுப்பினர்கள் ஆங்காங்கே நடைபெற உள்ள பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுவார்கள்.

தலைமைக் கழகத்தால் அறிவிக்கப்படாத மற்ற இடங்களிலும், புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா, மகாராஷ்டிரா, கேரளா, புதுடெல்லி மற்றும் அந்தமான் உள்ளிட்ட பிற மாநிலங்களிலும், 17–ம்  தேதியன்று ஆங்காங்கே கழகக் கொடியினை ஏற்றி வைத்து இனிப்பு வழங்கி, கழகத்தின் 44–வது ஆண்டு தொடக்க நாளை சிறப்பாகக் கொண்டாடுமாறு கேட்டுக் கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!