வெளியிடப்பட்ட நேரம்: 15:36 (17/10/2015)

கடைசி தொடர்பு:16:06 (17/10/2015)

பருப்பு விலை உயர்வுக்கு தமிழக அரசு காரணமா?

சென்னை:  தமிழக அரசு ஒரே சமயத்தில் திடீரென அதிக அளவு துவரம் பருப்பையும், உளுத்தம் பருப்பையும் கொள்முதல் செய்ய ஒப்பந்தம் கோரியதும் விலை உயர்விற்கு ஒரு காரணமாக கூறப்படுவதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
 
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், " பொதுமக்கள் அன்றாடம் பயன்படுத்தும் அத்தியாவசிய பொருட்களான, உணவுப் பொருட்களின் விலை ராக்கெட் வேகத்தில், விண்ணை முட்டும் வகையில் உயர்ந்து கொண்டே செல்கிறது. ஆனால் அதை மத்திய, மாநில அரசுகள் தடுத்து நிறுத்த தேவையான நடவடிக்கைகளை எடுத்ததாக தெரியவில்லை. பொதுவாகவே உணவுப் பொருட்கள் அறுவடை காலங்களில் விலை குறைவாகவும், அதன்பின் சற்று விலை உயர்ந்து காணப்படுவதும் வழக்கமான ஒன்று. ஆனால் தற்போது பருப்பு, எண்ணெய், புளி, மிளகாய், அரிசி, காய்கறிகள் என அனைத்து உணவுப் பொருட்களின் விலையும் மிகக் கடுமையாக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் கடந்த ஆண்டு ஒரு கிலோ 90 ரூபாய்க்கு விற்ற துவரம் பருப்பு, 180 ரூபாய் என்ற அளவில் உயர்ந்து, தற்போது 210 ரூபாய் என்ற அளவிற்கு விலை மிகக் கடுமையாக உயர்ந்துள்ளது. இதுபோலத் தான் அனைத்து உணவுப்பொருட்களும் மிகக் கடுமையாக உயர்ந்துள்ளது. அதனால் உணவகங்களில் உணவு பொருட்களின் விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது.

பண்டிகைகள் வரும் நிலையில் இந்த விலை உயர்வு பொதுமக்களை மிகவும் பாதித்துள்ளது. அதனால் ஏழை, நடுத்தர மக்கள் என்ன செய்வதென தெரியாமல் விழி பிதுங்கிப்போய் உள்ளனர்.

ஆன்லைன் வர்த்தகம் என்ற பெயரில் உணவுப் பொருட்களை ஒட்டு மொத்தமாக பதுக்கி வைப்பதே விலைவாசி உயர்வுக்கு காரணமென வியாபாரிகள் புகார் தெரிவிக்கின்றனர்.

மேலும் தமிழக அரசு ஒரே சமயத்தில் திடீரென அதிக அளவு துவரம் பருப்பையும், உளுத்தம் பருப்பையும் கொள்முதல் செய்ய ஒப்பந்தம் கோரியதும் விலை உயர்விற்கு ஒரு காரணமாக கூறப்படுகிறது. எனவே உடனடியாக இப்பிரச்சனையில் மத்திய, மாநில அரசுகள் தலையிட்டு, விலை வாசி உயர்வை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்" என்று கூறியுள்ளார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்