Published:Updated:

மாட்டு வண்டியில் மனு கொடுக்க வந்த எம்எல்ஏ... அலட்சியமாக நடந்துகொண்ட கலெக்டர்!

Vikatan Correspondent
மாட்டு வண்டியில் மனு கொடுக்க வந்த எம்எல்ஏ... அலட்சியமாக நடந்துகொண்ட கலெக்டர்!
மாட்டு வண்டியில் மனு கொடுக்க வந்த எம்எல்ஏ... அலட்சியமாக நடந்துகொண்ட கலெக்டர்!

அரியலூர்: மக்கள் பிரச்னைக்காக மாட்டு வண்டியில் மனுகொடுக்க வந்த எம்.எம்.எல்-வை அலட்சியப்படுத்தும் விதத்தில், கலெக்டர் வாட்ஸ்-அப் பார்த்துக்கொண்டிருந்த சம்பவம் அரியலூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

மாட்டு வண்டியில் மனு கொடுக்க வந்த எம்எல்ஏ... அலட்சியமாக நடந்துகொண்ட கலெக்டர்!

மாட்டு வண்டிகளில் மணல் அள்ள அனுமதி வழங்க வேண்டும் என வலியுறுத்தி, திமுக எம்எல்ஏ சிவசங்கர் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் அரியலூர் மாவட்ட ஆட்சியரிடம் இன்று மனு கொடுத்தனர். அப்போது, கலெக்டர் அலட்சியமாக பதிலளித்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த தி.மு.க.வினர், 'மணல் அள்ளுவதில் பெரிய முதலாளிகளுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை, ஏழை விவசாயிகளுக்கு மாவட்ட நிர்வாகம் கொடுக்க மறுக்கிறது' என்று குற்றஞ்சாட்டி, கலெக்டரை  முற்றுகையிட்டனர். அப்போது, எம்.எல்.ஏ-வுக்கும், கலெக்டருக்கும் வாக்குவாதம் முற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது.

முற்றுகையிட்ட சில தி.மு.க-வினரிடம் பேசியபோது, "அ.தி.மு.க-வின் மாவட்டச் செயலாளராக அரியலூர் கலெக்டர் செயல்படுகிறார். அ.தி.மு.க-வின் எம்.எல்.ஏ, எம்.பி என யார் வந்திருந்தாலும் சிவப்புக் கம்பள வரவேற்பு கொடுத்திருப்பார் கலெக்டர். மக்கள் பிரச்னைக்காக வந்த தி.மு.க. எம்.எல்.ஏ-விடம் அலட்சியமாக பேசுவதோடு, வாட்ஸ்-அப் பார்ப்பது, பிறகு பேசுவது என நடந்துகொண்ட  நிகழ்வைதான் எங்களால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை.
 

மாட்டு வண்டியில் மனு கொடுக்க வந்த எம்எல்ஏ... அலட்சியமாக நடந்துகொண்ட கலெக்டர்!

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ளது வெள்ளாறு. அரியலூர் மற்றும் கடலூர் மாவட்டங்களை பிரிக்கும் வகையில் அமைந்துள்ள வெள்ளாற்றில், 200 ரூபாய் கொடுத்தால் ரசீதோடு மணல் அள்ள மாட்டுவண்டிகளுக்கு அனுமதி வழங்குகின்றனர் கடலூர் வருவாய் துறையினர். அரியலூர் மாவட்டத்தில் மண் அள்ள அனுமதி மறுக்கிறார்கள். இதனால் விவசாயிகள் கடலூர் எல்லையில் உள்ள வெள்ளாற்றில் அனுமதி பெற்று ரசீது வாங்கி மணல் அள்ளி வருகின்றனர். மணல் ஏற்றிவரும்போது செந்துறை வருவாய் துறை மற்றும் காவல்துறையினர் வண்டிகளை பறிமுதல் செய்தும் அபராதம் விதித்தும் வருகின்றனர். கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு மண்ணே இல்லாத பத்து வண்டிகளை சிறைபிடித்து வழக்கு போட்டார்கள்.

இதே நிலைமை தொடர்ந்துகொண்டேதான் இருக்கிறது. இதனால் ஏழ்மை நிலையில் உள்ள மாட்டு வண்டி விவசாயிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் தங்களுக்கு வெள்ளாற்றில் மணல் அள்ள அனுமதி வழங்க வேண்டும் என பலமுறை வலியுறுத்தியும், மாவட்ட நிர்வாகம் செவிசாய்க்கவில்லை. இதுகுறித்து குன்னம் சட்டமன்ற உறுப்பினர் சிவசங்கரிடம் விவசாயிகள் முறையிட்டனர். இதனையடுத்து எம்எல்ஏ சிவசங்கர் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட மாட்டு வண்டி விவசாயிகள், மாட்டு வண்டிகளுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மாவட்ட ஆட்சியர் சரவணவேல்ராஜிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
 

மாட்டு வண்டியில் மனு கொடுக்க வந்த எம்எல்ஏ... அலட்சியமாக நடந்துகொண்ட கலெக்டர்!

அப்போது, எம்எல்ஏ சிவசங்கர் வெள்ளாற்றில் மணல் அள்ள மாட்டு வண்டி விவசாயிகளுக்கு அனுமதி வழங்க வேண்டும் என கலெக்டரிடம் கோரிக்கை வைத்தார். 'அதற்கெல்லாம் சட்டத்தில் இடமில்லை' என்று கலெக்டர் கூறுகிறார். 'அப்படியானால், கடலூர் மாவட்டத்தில் மட்டும் எப்படி மாட்டு வண்டியில் மணல் அனுமதி வழங்கி உள்ளனர்' என்று கேட்டதற்கு சரியான பதில் கூறவில்லை.

'இரவு நேரங்களில் அனுமதியில்லாமல் லாரிகளில் மணல் கொண்டுசெல்லப்படுகிறது. அவர்கள் மீது ஏன் வழக்கு போடவில்லை' என்று கேட்டதற்கு, 'அதுபோல எதுவும் நடக்கவில்லை' என்றார் கலெக்டர். 'அந்த வண்டிகளை நாங்கள் பிடித்து தரட்டுமா?' எனக் கேட்டதற்கு, 'பிடியுங்கள்... பிறகு பார்ப்போம்' என்று அலட்சியமாக பேசுகிறார். கட்சியினர் மீது காழ்ப்புணர்ச்சி பார்க்காமல் மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து விவசாயிகள், வெள்ளாற்றில் மாட்டு வண்டியில் மணல் அள்ள அனுமதி வழங்க வேண்டும்" என்று கூறினர்.

ஆளுங்கட்சியினருக்கு சாதமாகவும், மக்களுக்கு எதிராகவும் செயல்படும் மாவட்ட ஆட்சியரை எதிர்த்து போர்க்கொடி தூக்கியுள்ளனர் அரியலூர் பொதுமக்கள்.

- எம்.திலீபன்