வெளியிடப்பட்ட நேரம்: 15:56 (31/10/2015)

கடைசி தொடர்பு:16:23 (31/10/2015)

கோவனின் அதே பாடலை பாடி ஜெயலலிதாவுக்கு சவால் விட்ட வைகோ!

திருச்சி: டாஸ்மாக் கடைகளை மூடக்கோரி பாடலை எழுதியதாக கைது செய்யப்பட்ட 'மக்கள் அதிகாரம்' அமைப்பின் பிரச்சார பாடகர் கோவனின் அதே பாடலை மேடையில் பாடிய வைகோ, தைரியமிருந்தால் இதற்காக தன் மீது தேசியபாதுகாப்பு சட்டத்தை பாய்ச்சுங்கள், பார்க்கலாம் என தமிழக அரசுக்கு பகிரங்க சவால் விடுத்துள்ளார்.

பாரதிய ஜனதா ஆட்சியின் தலித் மற்றும் சிறுபான்மை மக்கள் மீதான தாக்குதல் மற்றும் கருத்துரிமை மீதான தாக்குதல்களை கண்டிப்பதாகக் கூறி மதிமுக, விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளிட்ட  மக்கள் நல கூட்டியக்கம் சார்பில் இன்று  திருச்சியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில தலைவர் முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில தலைவர் ராமகிருஷ்ணன், டி.கே.ரெங்கராஜன் எம்.பி. உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டார்கள்.

ஹரியானாவில் தலித் சிறுவர்கள் எரித்துக் கொல்லப்பட்ட சம்பவத்தில், சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த மத்திய வெளியுறவுத் துறை இணை அமைச்சர் வி.கே. சிங்கை கண்டித்து பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில தலைவர் முத்தரசன், “உணவு முறை என்பது ஒவ்வொரு மனிதனின் அடிப்படை உரிமை. யார் என்ன உண்ண வேண்டும் என்பதை மற்றொருவர் தீர்மானிக்க கூடாது

மேலும் தமிழகத்திலும்,  தலித் மக்கள் மீது தொடர்ந்து பல வன்முறைகளும், அடக்கு முறையும் நீடித்து வருகிறது. இந்த ஆர்பாட்டத்தின் நோக்கம் தலித் மக்களுக்காக போராடுவோம் என்பதை உணர்த்தவே” என்றார்.

“மக்கள் நலக்கூட்டியக்கம் தேர்தல் கூட்டணியாக அமையும். வருகிற நவம்பர் 2 -ம் தேதி அதிகாரப்பூர்வமாக கூட்டியக்க தலைவர்கள் அறிவிப்பார்கள்  அதற்குண்டான வேலைகளை அந்தந்த கட்சிகள் செய்யும்" என்றார் திருமாவளவன்.

மேடையில் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பி தொண்டர்களை பின்பற்றச் செய்த மக்கள் நல கூட்டியக்கத்தின் ஒருங்கிணைப்பாளரும், ம.தி.மு.க. பொதுச்செயலாளருமான வைகோ,  "'ஊருக்கு ஊரு சாராயம்... தள்ளாடுது தமிழகம்' னு மது ஒழிப்புக்காக பாட்டுப்படியதற்காக கோவனை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் அரசு கைது செய்கிறது என்றால்,  அதே பாடலை நான் பாடுகிறேன்; நீங்கள் சொல்லுங்கள் தோழர்களே..!"  என சொல்லியபடி, " ஊருக்கு ஊர் சாராயம் தள்ளாடுது தமிழகம்” என பாட,  தொண்டர்களும் திரும்ப பாடினர்கள்.

பாடலை முடித்தபின் “இப்போது என்மீது  தேசிய பாதுகாப்பு சட்டம் போட்டு கைது செய்யுங்கள். பார்ப்போம்” என்று தமிழக அரசுக்கு சவால் விடுத்தார் வை

தொடர்ந்து பத்திரிகையாளர்களிடம் பேசிய அவர், “சங் பரிவார், இந்துத்துவா சக்திகள் இந்தியாவில் பெரிய அளவிலான நெருக்கடிகளை ஏற்படுத்தி வருகின்றார்கள். சங்பரிவார் அமைப்புகளால் சிறுபான்மையினர் மற்றும் தலித்துகள் மீது நடைபெறும் கொலைவெறி தாக்குதல்களால் இந்திய ஜனநாயகத்துக்கே பேராபத்து ஏற்பட்டுள்ளது. இதன் விளைவாக வரலாற்று சாதனையாளர்கள் தாங்கள் வாங்கிய சாகித்ய அகாடமி விருதுகளை திரும்ப கொடுத்து வருகிறார்கள்.

இந்த ஆபத்தை தடுக்க வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம். ஹரியானா சம்பவம், உத்தரபிரதேசத்தில் மாட்டிறைச்சி  வைத்திருப்பதாக இஸ்லாமிய முதியவரை அடித்துக்கொன்ற சம்பவம், காஷ்மீரில் சட்டசபையிலேயே மாட்டிறைச்சி பரிமாறியதாக எம்.எல்.ஏ. தாக்கப்பட்ட சம்பவம் உள்ளிட்டவை நாட்டையே பேராபத்துக்கு இழுத்து செல்லும் வகையில் நடந்தேறியுள்ளது. இதைக்கண்டிக்காத மத்திய அமைச்சர் வி.கே.சிங், 2 நாய்களை கொன்றால் கூட பிரதமர் பதில் சொல்ல வேண்டுமா என்று ஏளனமாக பேசுகிறார். இதை மோடி கண்டிக்கவில்லை. இப்படி பேசிய வி.கே.சிங்கை உடனடியாக வன்கொடுமை சட்டத்தில் கைது செய்ய வேண்டும்.

 டாஸ்மாக் கடைகளை மூட  வலியுறுத்தி ஊருக்கு ஊர் சாராயம், தள்ளாடுது தமிழகம், என பாடிய ம.க.இ.க.வை சேர்ந்த பாடகர் கோவன் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கு மற்றும் கைது நடவடிக்கை அக்கிரமமானது. கருத்துரிமை கூற முழு சுதந்திரம் உண்டு. எனவே கைது செய்யப்பட்ட கோவனை எந்த வித நிபந்தனையும் இன்றி உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். வழக்கையும் தள்ளுபடி செய்ய வேண்டும். இதை செய்வார்களா...? செய்யமாட்டார்கள்.

இந்த பாடலை நான் தற்போது பாடியுள்ளேன். முடிந்தால் என் மீது வழக்கு தொடரட்டும்.  தமிழகத்தில் உள்ள 4½ கோடி பெண்களும் இதைத்தான் சொல்கிறார்கள். அவர்கள் மீதும் வழக்கு போடுங்கள் பார்ப்போம். இந்த மக்கள் நல கூட்டியக்கம் தமிழக மக்கள் பிரச்சனைகளுக்கு தொடர்ந்து முதல் ஆளாக  குரல் கொடுக்கும்.

அதிமுக, திமுக ஆகிய  உள்ளிட்ட இரண்டு கட்சிகளும் தமிழகத்தை கெடுத்துள்ளன.  இந்த இரு கட்சிகளையும் வருகின்ற  சட்டமன்ற தேர்தலில் தூக்கி எறிய வேண்டும். அதற்காகவே இணைந்துள்ளோம்” என்றார்.

- சி.ஆனந்தகுமார்
படங்கள்:
தே.தீட்ஷித்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்