தெலுங்குதேச கட்சியினர் மிரட்டலுக்கு பயப்படமாட்டேன்: ரோஜா ஆவேசம்!

நகரி: தெலுங்குதேசம் கட்சியினர் மிரட்டலுக்கு நான் பயப்படமாட்டேன் என்று நடிகை ரோஜா ஆவேசமாக தெரிவித்து உள்ளார்.

ஆந்திர மாநிலம் நகரி தொகுதி ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.வும், நடிகையுமான ரோஜா, இன்று தனது 46–வது பிறந்தநாளை கொண்டாடினார். இதையொட்டி அவர், நகரியில் மெகா மருத்துவ முகாமுக்கும், வேலைவாய்ப்பு முகாமுக்கும் ஏற்பாடு செய்திருந்தார்.

இந்நிகழ்ச்சியின்போது செய்தியாளர்களிடம் பேசிய நடிகை ரோஜா, ''முதல்வர் சந்திரபாபு நாயுடு தெலுங்கு தேசம் எம்.எல்.ஏ. தொகுதிகளுக்குத்தான் நிதி ஒதுக்குகிறார். அதனால், எனது தொகுதி மக்களுக்கு என்னால் முடிந்த சேவையை செய்து வருகிறேன்.

ராஜசேகர் ரெட்டி போல அவரது மகன் ஜெகன்மோகன் ரெட்டியும் மக்களுக்கு சிறப்பான சேவையை செய்து வருகிறார். அடுத்தது அவரது ஆட்சிதான் ஆந்திராவில் மலரும். என் உயிர் மூச்சு உள்ள வரை நான் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியில்தான் இருப்பேன்.

ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியில் உள்ளவர்களை, தெலுங்கு தேச கட்சியினர் மிரட்டி தங்களுக்கு பணிய வைக்க முயற்சிக்கிறார்கள். என்னையும் மிரட்டி ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகச் செய்ய நினைக்கிறார்கள். அவர்களது கனவு பலிக்காது. அவர்களது மிரட்டலுக்கு நான் பயப்படமாட்டேன்" என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!