Published:Updated:

விற்பனையில் சாதனை படைக்கும் தெருவோர சிறுவர்கள் நடத்தும் பத்திரிகை!

Vikatan Correspondent
 விற்பனையில் சாதனை படைக்கும் தெருவோர சிறுவர்கள் நடத்தும் பத்திரிகை!
விற்பனையில் சாதனை படைக்கும் தெருவோர சிறுவர்கள் நடத்தும் பத்திரிகை!

டெல்லியில் தெருவோர குழந்தைகள் இணைந்து நடத்தும் பாலக்மாமா பத்திரிகை 5 ஆயிரம் பிரதிகளை தாண்டி விற்பனையாகி சாதனை படைத்துள்ளது.

 விற்பனையில் சாதனை படைக்கும் தெருவோர சிறுவர்கள் நடத்தும் பத்திரிகை!

டெல்லியில் 'சேத்னா' என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் ஆதரவுடன் நடந்து வரும் இந்த குழந்தைகள் பத்திரிகைக்கு சாந்தினி என்ற 18 வயது டீன் ஏஜ் பெண் ஆசிரியராக பொறுப்பேற்று நடத்தி வருகிறார். இந்த பத்திரிகையில் நிருபர்களாக, உதவி ஆசிரியர்களாக சிறுவர் சிறுமியரே பணியாற்றுகின்றனர். 15 நாட்களுக்கு ஒரு முறை வெளிவரும் இந்த பத்திரிகைக்கு, தினமும் எடிட்டோரியல் மீட்டிங்கும் நடைபெறும்.

'பாலக்மாமா ' பத்திரிகை முக்கியமாக குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் வன்கொடுமைகள்
பற்றியும், பாலியல் துன்புறுத்தலுக்குள்ளாகும் குழந்தைகளுக்கு ஆதரவாகவும் செய்தி வெளியிடுகிறது. இந்த பத்திரிகைக்கு உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம், ஹரியானா மாநிலங்களில் 14 செய்தியாளர்கள் பணியாற்றுகின்றனர்.

இந்த நிருபர்களின் சராசரி வயதும் 14 தான். இவர்கள் பள்ளியில் படித்து கொண்டே இங்கு செய்தி எழுதுகின்றனர். அனைவரும் தெருவோரத்தில் வசிப்பவர்கள்தான். இந்த பத்திரிகையின் தலைமை செய்தியாளரான சாம்பு , காலையில் கார்களை கழுவும் வேலை செய்கிறார். பின்னர் பள்ளிக்கு செல்கிறார். மாலை நேரங்களில் செய்தியாளராக மாறி விடுகிறார்.

இந்த பத்திரிகை ஆசிரியரான சாந்தினி, கடந்த சில  ஆண்டுகளுக்கு முன் டெல்லியில் வயிற்றுபாட்டுக்காக தந்தையுடன் சேர்ந்து தெருவில் பாட்டு பாடிக் கொண்டிருந்தவர். கடந்த 2008-ம் ஆண்டு சாந்தினியின் தந்தை இறந்து போனார். அனாதையான சாந்தினியை,  சேத்னா தொண்டு நிறுவனம் தத்தெடுத்து கொண்டது. அப்போது அவருக்கு வயது 11 தான் ஆகியிருந்தது. 

சாந்தினியின் உழைப்பையும் கடமை உணர்வையும் கண்ட சேத்னா தொண்டு நிறுவனம், 2014-ம் ஆண்டு அவரை 'பாலக்மாமா' பத்திரிகையின் ஆசிரியராக அமர்த்தியது. 'பாலக்மாமா' பத்திரிகையை மேம்படுத்துவதில் துணிச்சலாக சில முடிவுகள் எடுத்தார்.

தற்போது 10-ம் வகுப்பு படித்து வரும் சாந்தினி, சுய சிந்தனையுடன் தைரியமாக முடிவுகளை எடுத்து, பத்திரிகை லேஅவுட்டில் மாற்றம், செய்திகளை தேர்வு செய்து வெளியிடும் விதம், எளிய நடை போன்ற  விஷயங்களை பாலக்மாமாவில் புகுத்தினார். இதன் காரணமாக தற்போது 'பாலக்மாமா' பத்திரிகை 5,500 பிரதிகளை கடந்து விற்பனையாகிறது.

அண்மையில் பெங்களுருவில் நடந்த டெடக்ஸ் மாநாட்டில் பேச சாந்தினி அழைக்கப்பட்டார். அந்த மாநாட்டில் சாந்தினி 18 நிமிடங்கள் மட்டும்தான் பேசினார். அப்போது அவர் தனது பத்திரிகை வாழ்க்கையில் சந்தித்த சவால்களை பகிர்ந்து கொண்டார்.

'' நான் ஆசிரியராக பொறுப்பேற்ற பின், முதலில் பத்திரிகை லேஅவுட்டை கண்ணை கவரும் விதத்தில் மாற்றினேன். குழந்தைகள் கல்வி, பள்ளிக்கு செல்ல முடியாமல்  வீட்டு வேலைகளில் ஈடுபடுத்தப்படும் குழந்தைகள் குறித்து செய்திகள் வெளியிட்டோம். 4 பக்கங்களாக வந்து கொண்டிருந்த பாலக்மாமாவை 8 பக்கங்களாக கூட்டினேன். தற்போது விற்பனையும் அதிகரித்துள்ளது  '' என்றார்