'துயரத்தில் ஆழ்ந்துள்ள மரவள்ளிக் கிழங்கு விவசாயிகள்'!

சென்னை:  தமிழகத்தின் மரவள்ளிக் கிழங்கு விவசாயிகள், உரிய கொள்முதல் விலை கிடைக்காமல் கடும் துயரத்தில் ஆழ்ந்துள்ளனர்.

இதனால் மரவள்ளிக்கிழங்கு அதிகம் பயிரிடும் சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களின் விவசாயிகள் மத்தியில் கவலை நீடிக்கிறது.   

இது தொடர்பாக பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
" தமிழகத்தில் மரவள்ளி கிழங்குக்கான கொள்முதல் விலை குறைந்து விட்டதால் அப்பயிரை சாகுபடி செய்த விவசாயிகள் கடுமையான துயரத்தில் ஆழ்ந்துள்ளனர். அவர்களின் நெருக்கடிக்கு தீர்வு காண தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்க முன்வராதது கடுமையாக கண்டிக்கத்தக்கதாகும்.

கடந்த ஆண்டு வரையிலும் மரவள்ளிக் கிழங்குக்கு நல்ல விலை கிடைத்து வந்தது. கடந்த ஆண்டில் அதிகபட்சமாக ஒரு டன் மரவள்ளிக் கிழங்கு ரூ.15,000 வரை கொள்முதல் செய்யப்பட்டது. ஆனால், இந்த ஆண்டில் ஒரு டன் மரவள்ளிக் கிழங்கு ரூ.1,800 முதல் ரூ.2,500 வரை மட்டுமே கொள்முதல் செய்யப்படுகிறது.

ஒரு டன் மரவள்ளிக் கிழங்கு உற்பத்தி செய்வதற்கு ரூ.5,000 வரை சாகுபடி செலவு ஆவதாக விவசாயிகள் தரப்பில் கூறப்படுகிறது. கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் மூலம் இதை உறுதி செய்து சாகுபடி செலவுடன் 50% லாபம் சேர்த்து மரவள்ளி கிழங்குக்கு கொள்முதல் விலையை தமிழகஅரசு நிர்ணயிக்க வேண்டும்" என்று கூறியுள்ளார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!