Published:Updated:

'இந்தமுறை இளங்கோவனை டெல்லிக்கு கூப்பிட்டால் கதை முடிந்து விட்டது!'- வரிந்து கட்டும் விஜயதாரணி தரப்பு

விகடன் விமர்சனக்குழு
'இந்தமுறை இளங்கோவனை டெல்லிக்கு கூப்பிட்டால் கதை முடிந்து விட்டது!'-  வரிந்து கட்டும் விஜயதாரணி தரப்பு
'இந்தமுறை இளங்கோவனை டெல்லிக்கு கூப்பிட்டால் கதை முடிந்து விட்டது!'- வரிந்து கட்டும் விஜயதாரணி தரப்பு

டுத்தடுத்து புதுப்புது பிரச்னைகளை எதிர்கொண்டு வருகிறார், தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன். முதல்வர் ஜெயலலிதா மீதான விமர்சனம், வர்த்தக காங்கிரஸ் தலைவர் வசந்தகுமார் நீக்கம், சிதம்பரம் அணியினரை குறிவைத்து பதவி பறிப்பு செய்வதாக குற்றச்சாட்டு என அவர் சந்தித்துக் கொண்டிருக்கும் பிரச்னைகள் ஏராளம்.

இதைத்தொடர்ந்து, தற்போது காங்கிரஸ் எம்.எல்.ஏ.வும் மகிளா காங்கிரசின் தலைவியுமான விஜயதாரணியுடன் ஏற்பட்டிருக்கும் மோதல். மோதலைத் தொடர்ந்து விஜயதாரணியின் ஆதரவாளர்கள் சென்னை அண்ணா சாலை காவல் நிலையத்தில், பெண் வன்கொடுமை சட்டத்தின் கீழ்  இளங்கோவன் மீது நடவடிக்கை கேட்டு, புகார் ஒன்றை கொடுத்திருக்கின்றனர்.

'இந்தமுறை இளங்கோவனை டெல்லிக்கு கூப்பிட்டால் கதை முடிந்து விட்டது!'-  வரிந்து கட்டும் விஜயதாரணி தரப்பு

இது குறித்துப் பேச விஜயதாரணி, இளங்கோவன் இருவரையும் தொடர்பு கொள்ள முயன்றோம். இருவருமே இதுபற்றி பேச விரும்பாமல் 'தவிர்த்தல்' போக்கை கடைபிடித்தனர். இளங்கோவன் மட்டும் ஓப்பன் பிரஸ் மீட்டில் 'நான் அந்த மாதிரி எப்போதுமே பேசுகிற ஆள் இல்லை' என்று ஒற்றை வரியில் முடித்துக் கொண்டார்.

நடந்தது என்ன?

இந்திராகாந்தியின் பிறந்தநாள் விழா தொடர்பான போஸ்டர் ஒன்றை, காங்கிரஸ் கட்சியினர் தமிழ்நாடு முழுவதும் கடந்த 19-ம்தேதி அன்று ஒட்டினர். அதேபோல், தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவரான எம்.எல்.ஏ. விஜயதாரணியின் சார்பில், மகிளா காங்கிரசார் சென்னையில் போஸ்டர்களை ஒட்டியிருந்தனர். அந்த பேனரில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் படத்துக்கு இணையாக விஜயதாரணியின் படத்தையும் மகிளா காங்கிரசார் போட்டிருந்தனர்.

இது, இளங்கோவன் ஆதரவாளர்கள் தரப்பை கோபத்தில் ஆழ்த்தியது. போஸ்டரில் இருந்த விஜயதாரணியின் முகத்தை மட்டும் கிழித்தும், மை பூசியும் தங்கள் எதிர்ப்பை காட்டினர். ஓரிரு இடங்களில் போஸ்டரையே கிழித்துப் போட ஆரம்பித்தனர்.

இதுபற்றி 19-ம்தேதியே இளங்கோவன் தரப்பிடம் விஜயதாரணி தெரியப்படுத்தியுள்ளார். இந்நிலையில், இன்று இளங்கோவனை சந்தித்து அதுபற்றி பேசிக் கொண்டிருந்தார். அப்போது அவர் விஜயதாரணிக்கு பொறுப்பற்ற முறையில் பதிலை சொன்னதோடு, விஜயதாரணியையும் ஒருமையில் திட்டியதாகக் கூறப்படுகிறது.

இந்த தகவல் மகிளா காங்கிரசார் மத்தியில் பரவ, மகிளா காங்கிரஸ் துணைத் தலைவர் சாந்தா ஶ்ரீ தலைமையில் பதினோரு பெண்கள் போலீசில் புகார் கொடுத்துள்ளனர்.

போலீசில் புகார் கொடுத்திருந்த சாந்தா ஶ்ரீயிடம் கேட்டபோது "பெண்களுக்கு  உரிய பாதுகாப்பு தேவை. மேலே கை வைத்து தள்ளியும், தாக்கியும் பெண்களை அவமானப்படுத்துகின்றனர். உரிய நடவடிக்கை தேவை என்று சொல்லியிருக்கிறோம். மேலும், சத்தியமூர்த்தி பவனில் எங்கள் தலைவர் விஜயதாரணிக்கு நடந்த கொடுமையை நாங்கள் நேரிலேயே பார்த்தோம். மிக மோசமான அணுகுமுறையை இளங்கோவனும், அவருடைய ஆதரவாளர்களும் கையாண்டனர்" என்றார்.

மகிளா காங்கிரசின் மானஷாவிடம் கேட்டபோது, "இளங்கோவனின் ஆதரவாளரான பிராங்ளின் என்பவர் என் சேலையை பிடித்து இழுத்து அவமானப்படுத்தி விட்டார், அதையும் புகாரில் குறிப்பிட்டு இருக்கிறோம்" என்றார்.

காங்கிரஸ் ஏரியாவில் பேசியபோது, ''விஜயதாரணியும், புகார் கொடுத்திருந்த சாந்தா ஶ்ரீயும் காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தியை நேரில் சந்தித்து மனு கொடுக்க உள்ளனர். குஷ்புவின் தீவிர ஆதரவால் இளங்கோவன் மீது இதுவரை இருந்த அத்தனை குற்றச்சாட்டுகளும் சாதாரண விஷயமாகப் போய்விட்டது. இப்போது நிலைமை மாறி விட்டது, குஷ்புவுக்கே அங்கு கொஞ்சம் பிரச்னைதான்.. இந்தமுறை இளங்கோவனை டெல்லிக்கு கூப்பிட்டால் கதை முடிந்து விட்டது என்றுதான் அர்த்தம்'' என்கின்றனர்.

ந.பா.சேதுராமன்