Published:Updated:

மேகங்கள் விழுங்கும் முதல்வர்கள்!

ராஜசேகர ரெட்டியை அடுத்து டோர்ஜி காண்ட்டு..

மேகங்கள் விழுங்கும் முதல்வர்கள்!

ராஜசேகர ரெட்டியை அடுத்து டோர்ஜி காண்ட்டு..

Published:Updated:

ந்தியாவில் தொடர்ந்து முதல்வர் பதவி வகித்தவர்கள் உண்டு! என்றாலும், 'போட்டியின்றி தேர்ந்​தெடுக்கப்பட்டவர்’ என்ற பெருமை பெற்றவர், அருணாச்சல் பிரதேச முதல்வர்! அந்த மாநில மக்கள், தொடர்ந்து மூன்றாவது முறையாகவும் போட்டி​யின்றித் தேர்ந்தெடுத்த முதல்வர் டோர்ஜி காண்ட்டூ! அவரை 'மக்கள் நாயகன்’ என்று சொன்னாலும் அது தகும்!  

மேகங்கள் விழுங்கும் முதல்வர்கள்!

அப்படிப்பட்டவர், 'ஹெலிகாப்டரில் சென்று... திடீரென மாயமானார்’ என்பதுதான் கடந்த சில

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

##~##
நாட்களாக இந்திய மீடியாக்களின் ஹாட் நியூஸ்! 'என்ன ஆச்சோ... ஏது ஆச்சோ’ என்று ஒட்டுமொத்த இந்தியாவும் பதறித் தவிக்க... தீவிரத் தேடுதல் வேட்டையும் நடக்க... ஐந்து நாட்​களுக்குப் பிறகு, அவருடைய சடலம்தான் கிடைத்தது!

சீன எல்லையை ஒட்டி இருக்கும் தவாங் நகரில் இருந்து, 200 கி.மீ. தொலைவில் உள்ள தலைநகரான இட்டா நகருக்கு கடந்த 30-ம் தேதி ஹெலிகாப்டரில் கிளம்பினார் டோர்ஜி. காலை 9.56-க்குக் கிளம்பிய அந்த ஹெலிகாப்டர், 11.30-க்கு இட்டா நகரை அடைந்து இருக்கவேண்டும். ஆனால், அது புறப்​பட்ட 20 நிமிடங்களில் ஏர் டிராஃபிக் கன்ட்ரோல் அறையின் தொடர்பு முற்றிலுமாகத் துண்டிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, பரபரப்பான மத்திய-மாநில அரசு அதிகாரிகள், டோர்ஜி பயணம் செய்த ஹெலி​காப்டரை தங்களால் முடிந்த திசைகளில் எல்லாம் தேடத் தொடங்கினர்.

உடனடியாக, ராணுவத்தின் சீட்டா வகை எம்-17 போர் ஹெலி​காப்டர்கள் தேடுதல் வேட்டையில் முடுக்கி​​ விடப்பட்டன. மோசமான வானிலையின் காரணமாக, சில மணி நேரங்களில் அவை ஏமாற்றத்துடன் திரும்பின. திங்கள் கிழமை காலை, தேடுதல் வேட்டை மீண்டும் முழுத் தீவிரத்தில் தொடங்கியது. ராணுவம், சாஸ்த்ரா சீமா பல் (எஸ்.எஸ்.பி.), இந்தோ திபெத் எல்லைப் பாதுகாப்பு படை வீரர்கள், பொதுமக்கள் என 4,000-க்கும் மேற்​பட்டோர் பல குழுக்களாகப் பிரிந்து தேடுதல் வேட்டை நடத்தினர்!

இஸ்ரோ எடுத்த சாட்டிலைட் படங்களில் எல்லாம், கருமேகங்கள் மட்டும்தான் கண்ணுக்குத் தெரிந்​தன. ஆனால், 3-ம் தேதி செவ்வாய்க் கிழமை எடுத்த ஒரு படத்தில் மட்டும் 'சேலா பாஸ்’ மலைத் தொடரில் 'லோப்தாங்’ பகுதியின் நீர்வீழ்ச்சிக்கு அருகே ஹெலிகாப்டரின் உடைந்த துண்டுகள் சில

மேகங்கள் விழுங்கும் முதல்வர்கள்!

தென்பட... அதிர்ந்துபோய், 'முதல்வர் பயணம் செய்த ஹெலிகாப்டர்தானா அது!’ என்பதை உறுதி செய்ய, ராணுவ ஹெலிகாப்டர் மூலம் அந்த பாகங்​களை மீண்டும் படம் எடுத்துப் பார்த்தனர். அப்போதுதான் மூன்று உடல்கள் கிடப்பதும் கண்டுபிடிக்கப்பட... வாகனங்கள் செல்ல முடியாத அந்த இடத்துக்கு ராணுவ வீரர்கள், சுஜாலா என்ற இடத்தில் இருந்து ஆறு கி.மீ. நடந்து சென்றனர். புதன் கிழமை மதியம், உடல்களை மீட்டனர். ஐந்து நாட்கள் ஆகிவிட்டதால், உடல்கள் மிக மோசமாக அழுகியிருந்தன. இந்தக் கோர விபத்தைக் கேள்விப்​பட்டதும் ஒட்டுமொத்த அருணாச்சலப் பிரதேச மாநிலமே சோகத்தில் மூழ்கியது.

ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கிய அந்த இடம்... 3,500 மீட்டர்  உயரத்துக்கும் மேலாகப் பரந்துவிரிந்த அடர்ந்த மலைப் பகுதியான 'சேலா பாஸ்’ காட்டுப் பிரதேசம். இமயமலையின் ஓர் அங்கம். இங்கு வானிலை, எப்போது, எப்படி மாறும் எனக் கணிப்பது கஷ்டமாம். வானம் தெளிவாக இருந்ததால், ஹெலிகாப்டர் கிளம்பி இருக்கிறது. கவுகாத்தி வானிலை மையத்தில் வானிலை அறிக்கை கேட்டுவிட்டுத்தான் புறப்பட்டு இருக்கவேண்டும். செல்லத் திட்டமிட்டுள்ள பாதை குறித்தும் வானிலை மையத்துக்குத் தகவல் தெரிவித்தாக வேண்டும். ஆனால், இது எதுவுமே அன்று பின்பற்றப்படவில்லை என்பதுதான் துரதிர்ஷ்டம்! ''வானிலை மோசமாகி, கருமையான மேக மூட்டத்தால்தான் ஹெலிகாப்டர் தடுமாறி, பாறையில் மோதி விழுந்து இருக்கும்!'' என்று கூறப்படுகிறது.  

வட கிழக்குப் பகுதியில் ராணுவத்தில் பைலட்டாகப் பணியாற்றி ஓய்வு பெற்ற பிரதீப் ஸ்ரீவாத்சவாவிடம் இந்த விபத்து குறித்து விவரம் கேட்டபோது,

''சேலா பாஸ், மிகவும் குறுகலான, தாழ்வான ஒரு மலைத்தொடர். இங்கு அடர்ந்த காடுகளில் அதிகமான ஈரப் பதம் நிலவும்! அதனுள் வீசும் காற்று, திடீர் என மேகங்களை உருவாக்கி உடனடி மழை பொழியச் செய்யும். இந்த வகைத் தட்பவெட்பத்தில் ஹெலிகாப்டர் பறப்பதே ஆபத்தான ஒரு விஷயம்! அதுவும், மழை வந்தால் அவ்வளவுதான்... 100 மீட்டருக்கும் குறைவான இடைவெளியிலேயே வானம் இருட்டாகத்தான் தெரியும். எவ்வளவு அனுபவம் மிக்க பைலட்டுகளையும் அது ஏமாற்றிவிடும். அதுதான் இந்த விபத்துக்குக் காரணமாக இருக்கும்!'' என்றார் உறுதியாக.

விபத்து நடந்த ஹெலிகாப்டருக்கு சொந்தமான பவன் ஹன்ஸ் நிறுவனம், கடந்த ஒன்பது வருடங்களாக வட கிழக்கு மாநிலங்களில் விமான சேவை செய்து வருகிறது. இதே நிறுவனத்தின் ஒரு ஹெலிகாப்டர், அருணாச்சலப் பிரதேசத்தில் கடந்த மாதம் 19-ம் தேதி விபத்துக்கு உள்ளாகி 17 பேர் இறந்தனர். அதனால், இப்போது அந்த மாநில மக்களின் மொத்த ஆத்திரமும் இந்த விமான சேவை நிறுவனத்தை நோக்கித் திரும்பி உள்ளது.

- ஆர்.ஷஃபி முன்னா

ஹாட்ரிக் முதல்வர்!

52 வயதான டோர்ஜிக்கு, நான்கு மகன்கள், இரண்டு மகள்கள். இந்திய ராணுவ உளவுத் துறை அதிகாரி​யாக இருந்தவர். பங்களாதேஷ் போரில் சிறப்பாகப் பணியாற்றியதற்காக விருது பெற்றவர். 1980-ல் ஒய்வு பெற்று, கூட்டுறவு சங்கங்களைத் தொடங்கி, மக்கள் சேவையில் இறங்கினார். அப்படியே அரசியலில் நுழைந்து... அமைச்சராகி, திங்பு முக்தோ தொகுதியில் மூன்றாவது முறையாக வாக்கெடுப்பு இன்றி ஏகமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, முதல்வர் ஆனவர்.