லாலு நெருக்கடியில் பீகார் அரசு செயல்படுகிறது... பா.ஜ.க. கண்டனம்!

பாட்னா: லாலு பிரசாத் யாதவின் நெருக்கடிக்கு கட்டுப்பட்டு பீகார் அரசு செயல்படுகிறது என்று பா.ஜ.க. கண்டனம் தெரிவித்து உள்ளது.

பீகார் மாநிலத்தில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 27-ம் தேதி ராஷ்ட்ரீய ஜனதா தளம் சார்பில் நடைபெற்ற முழு அடைப்புப் போராட்டத்தின்போது, அரசு ஊழியர்களைப் பணிசெய்ய விடாமல் தடுத்ததாக லாலு பிரசாத் யாதவ், அவரது 2 மகன்கள் உள்ளிட்ட ஆர்.ஜே.டி. தலைவர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

இதுதொடர்பான வழக்கு, பாட்னா தலைமை ஜுடிசியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, லாலு பிரசாத் உள்ளிட்ட 262 ஆர்.ஜே.டி. தலைவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளை வாபஸ் பெறுவதாக பீகார் அரசு வழக்கறிஞர் மனு தாக்கல் செய்தார். அதை நீதிபதியும் ஏற்றுக் கொண்டார். இதற்கு, பா.ஜ.க. கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக பீகார் மாநில முன்னாள் துணை முதல்வரும், மாநில பா.ஜ.க.வின் மூத்த தலைவருமான சுஷில் குமார் மோடி வெளியிட்டுள்ள அறிக்கையில், ''லாலு பிரசாத்தின் நெருக்கடிக்கு கட்டுப்பட்டு மாநில அரசு செயல்பட்டு வருகிறது. அதனால்தான், ஆர்.ஜே.டி. தலைவர்கள் மீதான வழக்கை வாபஸ் பெற பீகார் அரசு முடிவு செய்துள்ளது. இதுதொடர்பான வழக்கை பாட்னா உயர் நீதிமன்றம் விசாரித்து வருகிறது.

இந்நிலையில், கீழமை நீதிமன்றத்தில் வழக்கை வாபஸ் பெறுவதற்கு உயர் நீதிமன்றத்திடம் பீகார் அரசு அனுமதி பெற்றதா? லாலுவுக்கு எதிரான வழக்கை வாபஸ் பெற முடிவு செய்ததுபோல, போராட்டத்தில் ஈடுபட்டதற்காக தொழிற்சங்கத்தினர் மற்றும் குடிமக்கள் மீது பதிவு செய்யப்பட்டுள்ள ஆயிரக்கணக்கான வழக்குகளையும் மாநில அரசு வாபஸ் பெறுமா?" என்று கேள்வி எழுப்பி உள்ளார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!