Published:Updated:

லஞ்சம் மட்டும்தான் வாங்கினார் உம்மன்சாண்டி; 'அந்த மாதிரி' ஆளில்லை! - சரிதா நாயர் பேட்டி

விகடன் விமர்சனக்குழு
லஞ்சம் மட்டும்தான் வாங்கினார் உம்மன்சாண்டி; 'அந்த மாதிரி' ஆளில்லை! - சரிதா நாயர் பேட்டி
லஞ்சம் மட்டும்தான் வாங்கினார் உம்மன்சாண்டி; 'அந்த மாதிரி' ஆளில்லை! - சரிதா நாயர் பேட்டி
லஞ்சம் மட்டும்தான் வாங்கினார் உம்மன்சாண்டி; 'அந்த மாதிரி' ஆளில்லை! - சரிதா நாயர் பேட்டி

கோவை : "உம்மன்சாண்டியும் நானும் இருப்பது போன்ற வீடியோ சிடிக்கள் உள்ளதாக பிஜூ சொல்லும் தகவல் உண்மைக்கு மாறானது. உம்மன்சாண்டி அந்த மாதிரியான ஆள் இல்லை. என்னுடைய குற்றச்சாட்டு, உம்மன் சாண்டி லஞ்சமாக பணத்தை பெற்றுக் கொண்டு, எங்கள் கோரிக்கையை ஏற்கவில்லை என்பது தான்" என கோவையில் செய்தியாளரிடம் பேசிய சரிதா நாயர் தெரிவித்தார்.

சூரிய ஒளி மின்சார உற்பத்திக்கான சோலார் பேனல்களை அமைத்து தருவதாக கூறி,  பல்லாயிரம் கோடி ரூபாய் மோசடி செய்தததாக கேரளா பெண் தொழிலதிபர் சரிதா நாயரும், அவரது கணவர் பிஜூ ராதாகிருஷ்ணனும் குற்றம் சாட்டப்பட்டு,  கைதாகி பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

இந்த மோசடியில் கேரளா முதல்வர், அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் சரிதாநாயருக்கு ஆதரவாக செயல்பட்டதாகவும் புகார் கூறப்பட்டதையடுத்து, நீதிபதி சிவராஜன் தலைமையிலான கமிஷன் இது குறித்து விசாரணை நடத்தி வருகிறது.

இக்கமிஷன் முன்பு நேரில் ஆஜராகி, சரிதா நாயர் அளித்து வரும் வாக்குமூலங்கள் கேரளா அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. கேரளா முதல்வர் உம்மன்சாண்டி,  தன்னிடம் இருந்து ரூ.1.90 கோடி லஞ்சம் பெற்றதாக அவர் அளித்துள்ள வாக்குமூலம், உம்மன்சாண்டி பதவிக்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில் வழக்கொன்றில் ஆஜராக கோவை நீதிமன்றம் வந்த சரிதா நாயர்,  செய்தியாளர்களிடம் கூறியதாவது:

" கேரளாவில் ஒரு கம்பெனி நடத்திட்டு வந்தேன். அதற்காக உம்மன்சாண்டிக்கு 1.90 கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்தேன். ஆனால் அதற்கான எந்த வேலையும் நடக்கவில்லை. நான் உம்மன் சாண்டிக்கு ஆதரவாகத்தான் இருந்தேன். இரு வருடங்களாக அவரை பாதுகாத்து வந்தேன். உண்மையை மறைத்து பேசிக்கொண்டிருந்தேன்.

லஞ்சப்பணத்தை எனக்கு திருப்பிக்கொடுப்பதாக சொன்னார்கள். ஆனால் பணத்தை திருப்பித்தராமல் என்னை ஏமாற்றினார்.  அதனால் அதை விசாரணை கமிஷனிடம் சொன்னேன். சோலார் பேனல் மோசடி தொடர்பான சிடி, பென் டிரைவ் உள்ளிட்ட ஆதாரங்கள் மற்றும் இந்த மோசடியில் தொடர்புடையவர்களின் பெயர் பட்டியல் ஆகியவற்றை 'கொச்சின் சோலார் மோசடி' தொடர்பான நீதி விசாரணை ஆணையத்திடம் ஒப்படைக்கவுள்ளேன்.

எல்லா காலத்திலும் எனக்கு மிரட்டல்கள் இருக்கத்தான் செய்கின்றன. சமீபகாலங்களில் எனக்கு நிறைய மிரட்டல்கள் வருகின்றன. ஆனால் சாதாரண பாதுகாப்போடுதான் நான் இருக்கிறேன்.
உம்மன்சாண்டியும் நானும் இருப்பது போன்ற வீடியோ சிடிக்கள் உள்ளதாக பிஜூ சொல்லும் தகவல் உண்மைக்கு மாறானது.

உம்மன்சாண்டி அந்த மாதிரியான ஆள் இல்லை. என்னுடைய குற்றச்சாட்டு வேறு. உம்மன் சாண்டி லஞ்சமாக பணத்தை பெற்றுக்கொண்டு, எங்கள் கோரிக்கையை ஏற்கவில்லை என்பதுதான்.
உம்மன்சாண்டி மகனுக்கும் மற்றொரு பெண்ணுக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பது குறித்து ஆணையத்தில் தெரிவித்துள்ளேன். எனக்கு கிடைத்த தகவலை அப்படியே தெரிவித்துள்ளேன். அதை வெளியில் பேச நான் விரும்பவில்லை." இவ்வாறு சரிதா நாயர் தெரிவித்தார்.

கோவை வடவள்ளியை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வந்த 'சர்வதேச ஆலோசனை மற்றும் மேலாண்மை சேவை'  என்ற நிறுவனத்தின் பெயரில்,  காற்றாலை அமைத்துத் தருவதாக கூறி சுமார் ரூ.26லட்சம் மோசடி செய்ததாக கடந்த 2009-ம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட வழக்கில் சரிதா நாயர், பிஜு ராதாகிருஷ்ணன், ரவி ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

இன்று இந்த வழக்கு தொடர்பான விசாரணையின்போது, சரிதா நாயர் ஆஜாரானர். வழக்கை வரும் 17-ம் தேதி ஒத்திவைத்துடன், அடுத்த வழக்கு விசாரணைக்கு,  இந்த வழக்கில் கைதான பிஜு ராதாகிருஷ்ணன் கண்டிப்பாக ஆஜராகும்படி நீதிபதி ராஜவேல் உத்தரவிட்டார். இந்த வழக்கு தொடர்பாக சரிதா நாயரின் கையெழுத்து கேட்டு போலீசார் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவிற்கு, கையெழுத்து தேவையில்லை என்று சரிதா நாயர் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
 
-ச.ஜெ.ரவி