Published:Updated:

`8 வழிச் சாலைத் திட்டம்... முதல்வர்தான் பிடிவாதமாக இருக்கிறார்!’ - 6 எம்.பிக்கள் போராட்டம்

போராட்டத்தில் 6 எம்.பிக்கள்
போராட்டத்தில் 6 எம்.பிக்கள்

`` `எட்டு வழிச் சாலையை மாற்றுப் பாதையில் கொண்டு செல்ல வேண்டும்’ என மத்திய அமைச்சர் நிதின் கட்கரியைச் சந்தித்து கோரிக்கை வைத்தோம். ஆனால், `இந்தப் பாதையில்தான் கொண்டு செல்ல வேண்டும்’ எனப் பிடிவாதமாக முதல்வர் இருக்கிறார்'' என்கின்றனர் ஆறு எம்.பி-க்கள்.

`சேலம் டு சென்னை எட்டு வழி பசுமைச் சாலைத் திட்ட’த்தை எதிர்த்து சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் பார்த்திபன், கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற உறுப்பினர் கெளதமசிகாமணி, தருமபுரி நாடாளுமன்ற் உறுப்பினர் செந்தில்குமார், கிருஷ்ணகிரி நாடாளுமன்ற உறுப்பினர் செல்லக்குமார், ஆரணி நாடாளுமன்ற உறுப்பினர் விஷ்ணுபிரசாத், காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் என ஆறு நாடாளுமன்ற உறுப்பினர்கள் சேலம் அயோத்தியாப்பட்டணத்தை அடுத்த குள்ளம்பட்டியில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில், திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணாதுரை கலந்துகொள்வதாக இருந்தது.

கோரிக்கை மனு
கோரிக்கை மனு

கடைசி நேரத்தில் அவர் வரவில்லை. தூறல் மழையையும் பொருட்படுத்தாமல் இந்தப் போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்துகொண்டார்கள். கூட்டத்தில் பேசிய சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் பார்த்திபன், ``விவசாயத்தைப் பாதுகாப்பதற்கும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உறுதி செய்வதற்கும் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்குத் தொடர்ந்து குரல் கொடுத்துக் கொண்டிருக்கும் விவசாயத் தோழர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

தொடர்ந்து எட்டு வழிச் சாலை விவசாயிகளுக்கு மட்டுமல்ல, தமிழகத்தில் வாழக்கூடிய ஒட்டுமொத்த விவசாயிகளின் சமூகத்தையும் பாதுகாக்கும் ஒரு தலைவராக விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உறுதி செய்யும் தலைவராக முன்னாள் முதல்வர் கருணாநிதி விளங்கினார் என்பதை இங்குள்ள விவசாயிகள் நன்கு அறிவார்கள். அதைத் தொடர்ந்து தி.மு.க தலைவர் ஸ்டாலின் விவசாயிகளின் வாளாக, கேடயமாக தொடர்ந்து போராடிக்கொண்டிருக்கிறார். அதிகாரத்தில் இருக்கும்போதெல்லாம் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உறுதி செய்தும், அதிகாரத்தில் இல்லையென்றபோதும் ஏழை தினக்கூலி விவசாயிகளின் குரலாகத் தொடர்ந்து சட்டமன்றத்தில் பேசியும், மக்கள் மன்றத்தில் போராடிக்கொண்டிருக்கிறார்.

சேலம்
சேலம்

அந்த வழியில் வளர்ந்துவரும் உதயநிதி ஸ்டாலினை எட்டு வழிச் சாலையால் பாதித்த விவசாயிகள் சந்தித்தனர். அவர்கள் கண்ணீர்விட்டுப் பேசிய போது `எங்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களை அனுப்பிவைக்கிறேன். எங்களிடம் ஆட்சி அதிகாரம் இருந்திருந்தால் எட்டு வழிச் சாலையை மாற்றுப் பாதையில் அமைத்திருப்போம்' என்று ஆறுதல் கூறி அனுப்பிவைத்தார். அவருடைய வழிகாட்டுதல்படியும், எட்டு வழிச் சாலை எதிர்ப்பு இயக்கத்தின் கோரிக்கையை ஏற்றும் நாடாளுமன்றத்தில் பேசி எப்படியாவது மாற்றுப் பாதையில் இதை அமைக்க முயல்வோம்.

மத்திய போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரியை எங்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சந்தித்துப் பேசினோம். எட்டு வழிச் சாலையை, விவசாயிகள் பாதிக்கப்படாமல் மாற்றுப் பாதையில் கொண்டு செல்ல வேண்டும் என கோரிக்கை வைத்தோம். ஆனால் என்ன காரணமென்றே தெரியவில்லை இங்கிருக்கும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இந்தப் பாதையில்தான் கொண்டு செல்ல வேண்டும் எனப் பிடிவாதமாக இருக்கிறார். தொடர்ந்து ஐந்து மாவட்ட விவசாயிகள் தெருவில் இறங்கிப் போராடிவருகிறார்கள்.

போராட்டத்தில் கலந்துகொண்ட விவசாயிகள்
போராட்டத்தில் கலந்துகொண்ட விவசாயிகள்

விவசாயத்தைத் தவிர வேறு தொழில் இவர்களுக்குத் தெரியாது. கோடிக்கணக்கான மக்களுக்கு உணவளிக்கும் விவசாயிகள் தெருவில் இறங்கிப் போராடுவது எந்தவிதத்தில் நியாயம்? விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள் கண்ணீரும் கம்பலையுமாக அழுதுவருகிறார்கள்'' என்றார். தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்குமார், ``மக்களே, `இந்த எட்டு வழிச் சாலைத் திட்டம் வேண்டாம்’ என்று தீர்மானம் நிறைவேற்றும்போது யாருக்காக இந்த எட்டு வழிச் சாலைத் திட்டத்தை நிறைவேற்றத் துடிக்கிறீர்கள்... இங்கிருக்கும் கனிம வளங்களை அழிப்பதற்காகவே இந்தத் திட்டத்தை நிறைவேற்ற இருக்கிறார்கள். சேலம் டு சென்னை செல்வதற்கு ஏற்கெனவே உள்ள சாலைகளை விரிவாக்கம் செய்ய வேண்டும்'' என்றார்.

அடுத்த கட்டுரைக்கு