வெள்ளத்தால் வெற்றி வாய்ப்பாம்... அம்பத்தூர் தொகுதிக்காக திமுகவில் போட்டா போட்டி!

சென்னையை புரட்டிப் போட்ட வெள்ளத்தில்,  அம்பத்தூர் மற்றும் அதைச்சுற்றியுள்ள பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. குறிப்பாக அம்பத்தூர் தொழிற்பேட்டை முழுமையாக பாதிக்கப்பட்டது. இதை தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்த தி.மு.க.வினர் களம் இறங்கியுள்ளனர்.
 

அம்பத்தூர் தொகுதி தற்போது அ.தி.மு.க. வசம் உள்ளது. வெள்ளப்பாதிப்பின் போது அதிமுகவினர் தொகுதி மக்களை சந்திக்கவில்லை என்ற குற்றச்சாட்டு அதிகமாக தொகுதியில் கேட்கிறது. இதனால் தி.மு.க.வினர் அம்பத்தூர் தொகுதியில் எளிதில் வெற்றி வாகைச் சூடிக் கொள்ளலாம் என்ற நம்பிக்கையில் உள்ளனர். இதனால் அம்பத்தூர் தொகுதியில் உள்ள தி.மு.க.வினர்,  தலைமை கழகத்தில் போட்டியிட போட்டி போட்டு விருப்ப மனு தாக்கல் செய்துள்ளனர். இவர்களுக்கு இன்று நேர்காணல் நடக்கிறது.

தி.மு.க.வில் மாவட்ட வர்த்தக அணி இணைச் செயலாளர் செ.ஆஸ்டின், பகுதிச் செயலாளர் ஜோசப் சாமுவேல், மாவட்டட பிரநிதிநிதி குப்புசாமி மற்றும் ரமேஷ், திராவிடச்செல்வம் , ரங்கராஜன் என விருப்ப மனு தாக்கல் செய்தவர்களின் பட்டியல் நீள்கின்றன. இதில் செ.ஆஸ்டினுக்கும், ஜோசப் சாமுவேல் ஆகியோருக்கும் இடையே கடும் போட்டி நிலவுவதாக கட்சியினர் சொல்கிறார்கள்.

மக்களிடையே செல்வாக்கு அதிகமிருக்கும் செ.ஆஸ்டின் மீது பொது வாழ்க்கையில் களங்கமற்றவர் என்பதால் நிச்சயம் அம்பத்தூர் தொகுதி கிடைக்கும் என்று அவரது ஆதரவாளர்கள் எதிர்பார்க்கிறார்கள். அதே போல ஜோசப் சாமுவேல், அம்பத்தூர் மண்டலத் தலைவராக இருப்பதால் அவரும் ஆஸ்டினுக்கு ஈடுகொடுத்து வேட்பாளராக முயற்சித்து வருகிறார். தி.மு.க. தலைமை கழகம் சரியான நபரை தேர்ந்தெடுக்கும் போது  அம்பத்தூர் தொகுதியில் உதயசூரியன் உதிக்க அதிக வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

-எஸ்.மகேஷ்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!