Published:Updated:

'எல்லாம் உன் கண் அசைவில்': ஆதங்கத்தோடு காத்திருக்கும் ரஜினி ரசிகர்கள்!

Vikatan Correspondent
'எல்லாம் உன் கண் அசைவில்': ஆதங்கத்தோடு காத்திருக்கும் ரஜினி ரசிகர்கள்!
'எல்லாம் உன் கண் அசைவில்': ஆதங்கத்தோடு காத்திருக்கும் ரஜினி ரசிகர்கள்!

கன்னியாகுமரி: தமிழக சட்டமன்ற தேர்தலில் ரஜினிகாந்த் குரல் கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி அவரது ரசிகர்கள் ஆதங்கத்தோடு கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் போஸ்டர்கள் ஒட்டியுள்ளனர்.

அந்த போஸ்டரில், "எல்லாம் உன் கண் அசைவில், தமிழக மக்களின் அன்பு தலைவர் திரு.ரஜினிகாந்த் அவர்களே, 1996 அன்று உம் கண் அசைவில் தமிழக அரசியலை மாற்றி அமைத்தாய்..!, 2016 இன்று அதே நிலைதான். கட்சிகளுக்குள் கலகம் நமக்கு வேண்டாம் இந்த தொந்தரவு. மாற்றத்தை விரும்பி 7 கோடி தமிழக மக்கள், தமிழக மக்களின் மனசாட்சியே காலம் உன் கையில், கோடிக்கணக்கான தமிழக மக்களின் ஆதங்கத்தோடு கலுங்காடி சதிஷ் பாபு" என்று அச்சிடப்பட்டுள்ளது.

'எல்லாம் உன் கண் அசைவில்': ஆதங்கத்தோடு காத்திருக்கும் ரஜினி ரசிகர்கள்!

இதுகுறித்து, போஸ்டர் ஒட்டிய ரஜினிகாந்த் ரசிகர் மன்ற மாநில இளைஞர் அணி செயற்குழு உறுப்பினரும், மாவட்ட இளைஞர் அணி தலைவருமான கலுங்கடி சதிஷ் பாபுவிடம் பேசினோம். ''தமிழ்நாட்டில் 1996-ல் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் ரஜினிகாந்த் கொடுத்த வாய்ஸ் மிக பெரிய மாற்றத்தை உருவாக்கியது. அதன் பிறகு தலைவர் எந்த அரசியல் கட்சிகளுக்கும் தனது ஆதரவை தெரிவிக்கவில்லை.

'எல்லாம் உன் கண் அசைவில்': ஆதங்கத்தோடு காத்திருக்கும் ரஜினி ரசிகர்கள்!

கடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது பிரதமர் மோடி, ரஜினி வீட்டிற்கு நேரிலே சென்று சந்தித்தார். அப்போது தலைவர், 'எனது வாழ்த்துக்கள் எப்போதும் தங்களுக்கு உண்டு' என்று மோடியிடம் தெரிவித்தார். தலைவர் அரசியலுக்கு வரமாட்டாரா, அரசியலுக்காக குரல் கொடுக்க மாட்டாரா என்று காத்திருந்த எங்களுக்கு இது எனர்ஜி டானிக்காக இருந்தது. ஆகையால், நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வுக்கு நாங்கள் ஆதரவளிக்க வேண்டும் என்று முடிவெடுத்து, கன்னியாகுமரி மாவட்டத்தில் பா.ஜ.க. வேட்பாளராக நின்ற பொன்.ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவளித்து, அவர் வெற்றி பெற பணியாற்றினோம்.

இதனையறிந்து ரஜினிகாந்த் ரசிகர் மன்ற மாநில தலைவர் சுதாகர் எங்களிடம், தலைவர் எந்த கட்சிக்கும் குரல் கொடுக்காத நிலையில் நீங்கள் ஏன் ஆதரவளித்துள்ளீர்கள் என்று விளக்கம் கேட்டார். நாங்களும் விளக்கம் கொடுத்தோம். பின்னர் அவர் நீங்கள் ஆதரவு அளிக்கும் கட்சி வேட்பாளர் வெற்றி பெற்றால் தலைவருக்கு பெருமை, இல்லையேல் தலைவர் பெயருக்கு களங்கமாகிவிடும் என்று மட்டும் தெரிவித்தார். அதற்கு நாங்கள் தலைவர் பெயருக்கு அவ்வாறு களங்கம் ஏற்படுத்த விடமாட்டோம், நாங்கள் ஆதரவளிக்கும் வேட்பாளரை வெற்றி பெற செய்வோம் என்று உறுதியளித்தோம். அதன்படி, பொன்.ராதாகிருஷ்ணனை வெற்றி பெற செய்தோம். தலைவரிடம் ஆசி வாங்கியதால் மத்தியிலும் பா.ஜ.க ஆட்சி அமைத்து, மோடியும் பிரதமரானார்.  

தற்போது தமிழ்நாட்டில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலிலும் 1996 நிலைமையே இருக்கின்றது. எந்த அரசியல் கட்சிகளும் மக்கள் நலனை விரும்பாமல், கூட்டணியைத் தேடி அலைந்து கொண்டிருக்கின்றன. இந்த நிலை தமிழக அரசியலுக்கும், மக்களுக்கும் உகந்தது அல்ல. ஆகையால், நாங்கள் மட்டுமல்ல, 7 கோடி தமிழக மக்களின் மனசாட்சியும், ஆதங்கமும் தலைவரின் கண் அசைவை எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கின்றது.

1996 தேர்தலில் மக்கள் விரும்பிய அரசியல் மாற்றத்தை தலைவர் கொடுத்தார். அதேபோல் தற்போதும் மக்கள் நல்லதொரு அரசியல் மாற்றத்தை எதிர்நோக்கி இருக்கின்றனர். ஆகையால், இதன் மூலம் தலைவருக்கு எங்கள் ஆதங்கத்தை தெரியப்படுத்தி அவருடைய  குரலுக்காக காத்திருக்கின்றோம்" என்று எதிர்பார்ப்புடன் கூறினார். 

ஆதங்கத்தோடு காத்திருக்கும் ரசிகர்களின் குரல் ரஜினிகாந்துக்கு கேட்குமா..!!?

செய்தி, படங்கள்: ரா.ராம்குமார்