வெளியிடப்பட்ட நேரம்: 11:29 (27/03/2016)

கடைசி தொடர்பு:11:40 (27/03/2016)

வேட்பாளர் அறிவிப்புக்கு முன்பே வெற்றி வேட்பாளரான சுரேஷ் ராஜன்: -இது குமரி கூத்து!

ருகின்ற சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி அமைத்துள்ளது. இந்த கட்சிகளிடையே இன்னும் தொகுதி பங்கீடு எட்டப்பட வில்லை. தி.மு.க.வில் வேட்பாளர் நேர்க்காணல் மட்டும் நடத்தப்பட்டுள்ளது.

தொகுதி பங்கீடு முடிவடைந்தபின் தான் யாருக்கு எந்தெந்த தொகுதி என வேட்பாளர்கள் பட்டியல் அறிவிக்கப்படும். இப்படி, தொகுதி பங்கீடே முடிவடையாத நிலையில், ஃபேஸ்புக்கில் நாகர்கோவில் தொகுதி வேட்பாளர் என முன்னாள் அமைச்சர் சுரேஷ் ராஜனின் பெயரை அவரின் ஆதரவளார்களால் போட்டு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

கடந்த 1996 முதல் இதுவரை கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட்டு வருகிறார் சுரேஷ்ராஜன். கடந்த தேர்தலுக்கு முன் நடந்த தொகுதி சீரமைப்பில் பெருவாரியான நாடார் ஓட்டுகள் கன்னியாகுமரிக்கு சென்றுவிட்டது. .அதனால், கடந்த தேர்தலில் அ.தி.மு.க.வின் பச்சைமாலிடம் சுரேஷ்ராஜன் தோற்றார். அதன்பின், 5 ஆண்டுகளாக நாகர்கோவிலை குறிவைத்து காய்நகர்த்தி வந்தார் சுரேஷ்ராஜன்/

ஒரு தரப்பில் அவர் மேல் சொத்துக் குவிப்பு வழக்கு உள்ளது அதனால், அவர் தேர்தலில் நிற்கமாட்டார் என்கிறார்கள். இன்னொரு தரப்போ, ஏற்கெனவே கலைஞர் மாவட்ட செயலாளர்களுக்கு சீட் கிடையாது என்று சொல்லிவிட்டர். கலைஞர் சொன்னதை செய்வார், அதனால் சுரேஷ் ராஜனுக்கு இந்த முறை சீட் கிடைக்காது என்கின்றனர். மு.க.ஸ்டாலினின் ஆதரவு இவருக்கு இருப்பதால், கண்டிப்பாக இந்த முறை இவருக்கு சீட் கிடைக்கும் என்கிற உடன்பிறப்புகளும் உண்டு.

வருகின்ற மார்ச் 31-ம் தேதி சுரேஷ் ராஜனுக்கு பிறந்தநாள். அதற்காக, இப்போதில் இருந்தே அவருக்கு ஃபேஸ்புக்கில் வாழ்த்து ஸ்டேட்டஸ்கள் வலம் வரத் தொடங்கி விட்டன. அதில் ஹைலைட்டாக அவரது ஆதரவாளர்கள், நாகர்கோவிலின் வெற்றி வேட்பாளர் சுரேஷ் ராஜன், கன்னியாகுமரியின் தளபதியார் என்றெல்லாம் பதிவை போட்டு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இதுகுறித்து மூத்த தி.மு.க. உடன்பிறப்புகளிடம் பேசியபோது, ''கண்டிப்பாக இது தவறான செயல். கட்சி தலைமை முடிவு எடுக்கும் முன் இவர்கள் தானாக முடிவு எடுக்க கூடாது. தலைவர் கலைஞர், பேராசிரியர் போன்றவர்கள் வேட்பாளரை அறிவித்த பின் தான் வெற்றி வேட்பாளர் என்று போட முடியும். ஜனநாயகம் உள்ள கட்சி தி.மு.க. தலைமையின் அறிவிப்பு இல்லாமல் ஸ்டாலின் கூட தன்னை வேட்பாளர் என்று போட முடியாது.

தலைமை சுரேஷ் ராஜனை வேட்பாளராக இன்னும் அறிவிக்காத நிலையில், வாழ்த்து தெரிவிக்கிறேன் என்று சிலர் அவரை வம்பில் மாட்டிவிடுகிறார்கள். தங்கள் சுயநலத்துக்காக சிலர் இப்படி செய்கிறார்கள். வருங்கால வேட்பாளர் என்று போட்டிருந்தாலும் பரவாயில்லை. வெற்றி வேட்பாளர் என போட்டது தவறு. இது கட்சியின் சட்டத்திட்டங்களை மீறிய செயல். அதனால், தி.மு.க. தலைமை கண்டிப்பாக இப்படி பதிவு போட்டவர்கள் மீது நடவடிக்கை எடுத்து, தி.மு.க.வில் கண்ணியம், கட்டுபாடு உண்டு என்பதை நிருபிக்க வேண்டும்" என்றனர்.

பிறந்த நாள் வாழ்த்து சொல்கிற ஆர்வத்தில் குமரி மாவட்ட உடன்பிறப்புகள், சுரேஷ் ராஜனுக்கு சீட்டுக்கு பாதிப்பு ஏற்படுத்தாமல் இருந்தால் சரி!

- த.ராம்

படம்: ரா.ராம்குமார்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்