வெளியிடப்பட்ட நேரம்: 09:09 (28/03/2016)

கடைசி தொடர்பு:09:09 (28/03/2016)

கன்னியாகுமரி தொகுதியை எனக்கு தாங்க... சுரேஷ் ராஜனை சுற்றும் சாய்ராம்!

தேர்தல் நெருங்கினாலே கட்சிகாரர்களுக்கு கொண்டாட்டம் தான். காலைப் பிடிப்பதும், காலை வாறுவதும் என அமைதிப்படை திரைப்படத்தில் வருவது போன்ற வேலைகள் தொடங்கி விடும். வேட்பாளர் பட்டியலில் தங்கள் பெயர்களை ஏற வைக்க அவர்கள் செய்யும் கூத்தே தனி தான்.

திராவிட கொள்கை பிடிப்பு உள்ளவர்களும் இந்த நேரத்தில் கோயில், கோயிலாக செல்வதும் வாடிக்கை தான். அதுபோல, கன்னியாகுமரி மாவட்டம் மையிலாடி பேரூராட்சி தலைவர் சாய்ராமும், கோயில் கோயிலாகவும், சோதிடம், ஜாதகம் என சாஸ்திர சம்பர்தாயங்களை பார்த்தபடி உள்ளாராம்.

இதுகுறித்து குமரி மாவட்ட தி.மு.க.வினர் சிலர் நம்மிடம் கூறிய விஷயங்களை கேட்டபோது நமக்கு அதிர்ச்சியையும், சிரிப்பையும் தான் கொடுத்தது. அவர்கள் சொன்ன விஷயங்கள் இது தான், ''அது ஒன்னுமில்லிங்க தொடர்ச்சியா சாய்ராம் மூனு தடவையா மைலாடி பிரசிடன்டா இருந்துட்டாரு.

இனி அவருக்கு எம்.எல்.ஏ.ஆக ஆசை வந்துடுச்சு. அதுனால தான் இப்போ பழனிக்கும், திருவண்ணாமலைக்கும் போறாரு. இதுபோதாதுன்னு, நான் தான் தி.மு.க. வேட்பாளருனு தன்னை பார்க்கும் பலருகிட்டையும் அவர் சொல்லிட்டு திரியுறாரு" என்கிறது ஒரு தரப்பு.

''இல்லைங்க ஆரம்பத்துல மாவட்ட செயலாளர் சுரேஷ் ராஜன்கூட நெருக்கமாக இருந்தவருதான் இந்த சாய்ராம். கல்குவாரிக்கு அனுமதி இருந்தப்போ மையிலாடி சாய்ராமும், சுரேஷ் ராஜனும், தாமரை பாரதியும் போட்ட ஆட்டமே தனி.

பண மூட்டையாக தான் கல்குவாரிகள் அவர்களுக்கு தெரிந்தது. அதன்பின் மாவட்ட செயலாளர் சுரேஷ் ராஜனுக்கும், சாய்ராமுக்கும் விரிசல் ஏற்பட்டது.

அப்போது, தலைமை கழக பேச்சாளாரான தாமரை பாரதி, சுரேஷ் ராஜனோடு நெருக்கமாகி அகஸ்தீஸ்வரம் ஒன்றிய செயலாளராகிட்டார். முட்டலும், மோதலுமாக சாய்ராம், சுரேஷ் ராஜனுடன் இருந்த காலகட்டத்தில், அவரது மகளுக்கு பூப்புனித நீராட்டு விழாவுக்கு முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமியை அழைத்தார் சாய்ராம். அவரும் வருவதாக ஒப்புக் கொண்டு கடைசி நேரத்தில் வருகையை ரத்து செய்தார் பெரியசாமி.

இதற்கு காரணம் சுரேஷ் ராஜன் தான் என தனக்கு நெருக்கமான நட்புகளிடம் சொல்லி வந்தார் சாய்ராம். கடந்த தி.மு.க. உள்கட்சி தேர்தலில் அகஸ்தீஸ்வரம் வடக்கு ஒன்றிய தேர்தலில் சாய்ராமுக்கு எதிராக வழக்கறிஞர் மதியழகனை நிற்க வைத்து சாய்ராமை தோற்கடித்தார் சுரேஷ் ராஜன். அதன்பின் செயற்குழு உறுப்பினராக வந்தார் சாய்ராம். பின்னர் படிபடியாக சுரேஷ் ராஜனை நெருங்கி, தாமரை பாரதியை கட் பண்ணிவிட்டார். தற்போது, கன்னியாகுமரி தொகுதியில் சீட்டுக்கு துண்டையும் போட்டுவிட்டார் சாய்ராம்.

நாலு தடவை கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட்ட சுரேஷ் ராஜன், தற்போது நாகர்கோவிலுக்கு நகர, கன்னியாகுமரி தொகுதியை தனக்கு தாங்க என்று சுரேஷ் ராஜனை சுற்றி சுற்றி வருகிறார் சாய்ராம். அதுமட்டுமல்லாமல், அவர் கோயிலுக்கு போவதே ''சாமி..., சுரேஷ் ராஜன் கன்னியாகுமரியில நிற்க கூடாது. நான் நிற்க எனக்கு ஆசி தா..." என வேண்ட தான். ஆண்டவன் அருளால் சாய்ராமுக்கு தற்போது சீட் கிட்ட தட்ட உறுதியாகி விட்டது. இனி திரும்பவும் இவர்கள் கீரியும், பாம்புமாக மாறும் காலம் தூரத்தில் இல்லை" என்கிறார்கள் இன்னொரு தரப்பு.

தேர்தல் நெருங்க நெருங்க... இன்னும் என்னவெல்லாம் நடக்க போகிறதோ?

- த.ராம்

படங்கள்: ரா.ராம்குமார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்