Published:Updated:

கப்சிப் மதுரை ஆதீனம்... காரணம் என்ன?

கப்சிப் மதுரை ஆதீனம்... காரணம் என்ன?
கப்சிப் மதுரை ஆதீனம்... காரணம் என்ன?

கப்சிப் மதுரை ஆதீனம்... காரணம் என்ன?

ர்ச்சைகளை சோறு போட்டு வளர்த்து வந்து சமீபகாலமாக அ.தி.மு.க.வின் ஸ்டார் பேச்சாளர்கள் வரிசையில் முதலிடத்தில் வலம் வந்து கொண்டிருந்த மதுரை ஆதீனம் அருணகிரிநாதர், தேர்தல் பரபரப்பு தகித்துக் கொண்டிருக்கும் நேரத்தில் சத்தமில்லாமல் இருக்கிறார். ஏன் என்னாச்சு அவருக்கு?

ஜெயலலிதாதான் அடுத்த பிரதமர் என்று சிவன் தன் கனவில் வந்து சொன்னதாக கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது ஊர் ஊராக பிரசாரம் செய்த மதுரை ஆதீனம், இந்த சட்டமன்ற தேர்தலில் ஜெயலலிதா மீண்டும் முதல்வர் ஆவார் என்று பிரசாரம் செய்யாமல் மடத்துக்குள் முடங்கி கிடப்பதற்கு என்ன காரணம் என்று அவரை க்ளோசாக கவனித்து வரும் சில ஆன்மீக அன்பர்களிடம் பேசினோம்.

"பாண்டிய மன்னரின் ஆதரவோடு, திருஞானசம்பந்தரால் சைவநெறி வளர்ச்சிக்காக உருவாக்கப்பட்டது மதுரை ஆதீன மடம். பண்பாட்டையும், பக்தியையும் அனைத்து மக்களிடமும் கொண்டு சென்று தமிழ் தழைத்தோங்க வேண்டும் என்பதற்காகதான் மன்னர்களும், பல செல்வந்தர்களும் பொன்னையும் பொருளையும் அள்ளி வழங்கினார்கள்.

தமிழகத்தின் பல மாவட்டங்களில் ஆதீன மடத்துக்கு வயல்களும், சொத்துக்களும் உள்ளன. மதுரையில் மட்டும் முன்னூறு கடைகளும் பல கட்டடங்களும் மடத்தின் கட்டுப்பாட்டில் உள்ளன. இதில் வரும் வருமானம் அனைத்தும் இந்து மக்களுக்கு பயன்பட வேண்டுமென்பது விதி.

ஆனால், 289வது ஆதினமாக அருணகிரிநாதர் எப்போது பொறுப்பேற்றாரோ, அன்றிலிருந்து எல்லாமும் மாறிபோச்சு. எந்த கணக்கு வழக்கும் கிடையாது. திடீர் திடீரென்று யார் யாரோ வந்து மடத்தை நிர்வாகம் செய்வார்கள் போவார்கள். இதெல்லாம் ஊர் அறிந்த விஷயம்தான்.

மாலை பத்திரிகை ஒன்றில் சினிமா நிருபராக சிலகாலம் பணியாற்றிய நம்ம ஆதீனத்துக்கு, ஏதோ ஒரு தொடர்பில் மதுரை ஆதீன மடத்தில் தம்பிரானாக பணியில் சேர்ந்து, உடனே ஆதீனமாகவும் ஆகும் யோகம் முப்பது வருடங்களுக்குமுன் அடித்தது. அப்போதிருந்தே அவர் ஆன்மீக பணிகளை புறம்தள்ளி அரசியல்வாதிகளுடனும், சினிமாக்காரர்களுடனும் நெருங்கி பழக ஆரம்பித்தார்.

ஆட்சிக்கு தகுந்தாற்போல் தி.மு.க.விடமும், அ.தி.மு.க.விடமும் நெருக்கம் காட்டினார். அதன் பின் எம்.நடராஜனின் நண்பரானார். அதுவரை பிரச்னை இல்லாமல் போய்க் கொண்டிருந்த அவரின் ஆன்மீக வாழ்க்கையில், நித்யானந்தவுடன் ஏற்பட்ட தொடர்பு என்னவெல்லாம் ஆனது என்பது எல்லோருக்கும் தெரியும்.

அந்த காலகட்டத்தில், ஆதீன மடத்தின் முன்பு தினமொரு போராட்டம் நடக்கும். அப்போது மடத்தை அரசு ஏற்று நடத்தும்படி பல்வேறு அமைப்பினரால் பல வழக்குகள் பதிவாகியது. இதில் மடத்தைவிட்டு போனாலும், நித்யானந்தாதான் இளைய ஆதீனம் என்று தாக்கல் செய்த வழக்கும், தற்போது நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

இதிலிருந்து விடுபடத்தான் இரண்டு வருடங்களுக்கு முன்பு ஜெயலலிதாவை சந்தித்து நாடாளுமன்றத் தேர்தலில் பிரசாரம் செய்ய உத்தரவு வாங்கினார். அதற்கு தகுந்தாற்போல் பல ஊர்களில் பிரசாரம் செய்தார். ஜெயலலிதா சிறையில் இருந்தபோது அதை கண்டித்து அ.தி.மு.க.வினர் நடத்திய பல போராட்டங்களில் கலந்து கொண்டார்.

ஜெயலலிதா விடுதலைக்காக நடந்த பல யாகங்கள், பூஜைகளில் முன்னிலை வகித்தார். அதை தொடர்ந்து நடிகர் சங்க தேர்தலில் சரத்குமார் அணிக்காக தன்னுடைய மடத்திலயே பிரசாரம் செய்தார். இப்படி தன்னை ஒரு அ.தி.மு.க. நிர்வாகிபோல் மாறி, வேலை திட்டத்தை அமைத்து செயல்பட்டுக் கொண்டிருந்த ஆதீனம், சமீபகாலமாக திடீரென்று சைலண்ட் ஆனது ஏன் என்பதுதான் தற்போது எல்லோருடைய கேள்வியுமாக உள்ளது.

அடுத்து அ.தி.மு.க. ஆட்சியை பிடிக்குமென்று உறுதியாக சொல்ல முடியாது. தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் உங்களுக்கு சிக்கல் வரலாம். அதனால், வாயை திறக்காமல் அடக்கி வாசிப்பது நல்லது என்று சில நலன் விரும்பிகள் ஆதினத்திடம் எடுத்து சொல்லியிருக்கிறார்கள். உங்க போக்கு சரியில்லை என்று தி.மு.க.வின் முக்கிய புள்ளிகள் சிலரும் அவரிடம் பேசியிருக்கிறார்கள்.

அது மட்டுமில்லாமல், இந்து அமைப்பொன்று கொடுத்த புகாரில் வருமான வரி ஏய்ப்பு சம்பந்தாமாக விசாரணை துவங்கியுள்ளதாம். உயர் நீதி மன்றத்தில் நிலுவையிலிருந்த வழக்குகள் வேறு அவரை பயமுறுத்த, ஆதீன சொத்து ஒன்றை இனாமாக கேட்டு மதுரை அ.தி.மு.க. புள்ளி ஒருவர் நெருக்கடி கொடுக்கிறாராம்.

ஒரு மனிதன், ஒரு பிரச்னையை சமாளிப்பதே பெரிய விஷயம். ஆதினத்துக்கோ ஏகப்பட்ட பிரச்னைகள். பாவம் அவர்தான் என்ன செய்வார்... சிவபெருமான் கனவில் வந்து இதற்கு ஏதாவது தீர்வு சொல்ல மாட்டாரா என்று மடத்துக்குள்ளேயே சயனத்தில் மூழ்கிக்கிடக்கிறார். அதனால், இந்த தேர்தல் முடியும்வரை ஆதீனம் வாயை திறக்கமாட்டார்" என்றார்கள்.

இது சம்பந்தமாக விசாரிக்க மடத்துக்கு சென்றபோது, ஆதீனம் ஊரில் இல்லையென்று பதில் சொல்கிறார்கள் மடத்தில் உள்ளவர்கள். சரி செல்போனில் தொடர்பு கொண்டு விசாரிக்க பலமுறை முற்பட்டபோதும், ''இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி... எங்கெங்கோ அலைகின்றாய் ஞானதங்கமே..." என்ற பாடல்தான் ஒலிக்கிறது.

- செ.சல்மான்

அடுத்த கட்டுரைக்கு