Published:Updated:

திமுகவினர் நடத்தும் மது ஆலைகள் மூடப்படும்: கனிமொழி அதிரடி!

விகடன் விமர்சனக்குழு
திமுகவினர் நடத்தும் மது ஆலைகள் மூடப்படும்: கனிமொழி அதிரடி!
திமுகவினர் நடத்தும் மது ஆலைகள் மூடப்படும்: கனிமொழி அதிரடி!
திமுகவினர் நடத்தும் மது ஆலைகள் மூடப்படும்: கனிமொழி அதிரடி!

கோவை : ”தமிழகத்தில் மது விலக்கு அமலான உடனே திமுகவினர், அவர்களது உறவினர்கள் மது ஆலைகள் நடத்தி வந்தால் அதை மூடிவிடுவோம். தமிழகத்தில் மதுவிலக்கு என்பதற்காக வெளிமாநிலத்துக்காக உற்பத்தி செய்யமாட்டார்கள்,” என்று  கனிமொழி தெரிவித்துள்ளார்.

தி.மு.க. மகளிர் அணிச் செயலாளார் கனிமொழி நாளை சேலத்தில் தனது தேர்தல் பிரசாரத்தை துவக்குகிறார். இதற்காக சென்னையில் இருந்து கோவைக்கு விமானத்தில் வருகை தந்த கனிமொழி, கோவையில் இருந்து சேலத்துக்கு காரில் புறப்பட்டு சென்றார்.

முன்னதாக கோவை விமான நிலையத்தில் கனிமொழி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்," ஜெயலலிதா பிரசாரத்தில் வெயிலின் கொடுமை தாங்காமல் இருவர் இறந்தது என்பது நிச்சயம் ஏற்றுகொள்ள முடியாத ஒன்று. இது கோடை காலம் என்பதும், இந்த அளவு வெயில் இருக்கிறது என்பதும் இரண்டு பேர் உயிரிழந்த பின்னர்தான் முதல்வருக்கு தெரியவருகிறது என்றால்,  அவர் ஆளும் நாட்டின் நிலை, நாட்டு மக்களின் நிலையெல்லாம் என்னவென்று இதில் இருந்தே நீங்கள் தெரிந்து கொள்ள முடியும்.

வெயிலின் கொடுமை காரணமாக காலை 11 மணியில் இருந்து மதியம் 3 மணி வரை வெளியில் போகாதீர்கள் என அறிவுறுத்தியிருக்கிறார்கள். அதன்பிறகு ஹெலிகாப்டர் இறங்க வசதியாக இருக்க வேண்டும் என்பதற்காக இப்படி கொளுத்தும் வெயிலில் மக்களை அடைத்து வைக்கிறார்கள். இருவர் இறந்து, பலர் மயங்கி விழுந்த பின்னர்தான் அந்த நிலையை மாற்றுகிறார் என்றால்,  மக்கள் மேல் அவருக்கு இருக்கும் அக்கறை என்ன? மக்கள் வெயிலில் காய வேண்டும், ஆனால் ஹெலிகாப்டரில் வந்து செல்லும் ஜெயலலிதா இருக்கும் மேடையில் பல டன் 'ஏசி'க்கள் அமைக்கப்பட்டுள்ளது.

தேர்தல் ஆணையத்தில் பல முறை பல பிரச்னைகளுக்கு நாங்கள் (திமுக) அணுகி இருக்கிறோம். ஆனால் எந்த நடவடிக்கையும் இல்லை. ஜெயலலிதாவின் மேடை அமைப்பு, ஹெலிகாப்டர் செலவு, பொதுக்கூட்டத்தில் பங்கேற்கும் அனைவருக்கும் தொப்பி வழங்கப்படுவது, ஜெயலலிதா படம் பொறித்த ஃபேன் வைத்திருப்பது என இந்த செலவு எல்லாம் யாருடைய கணக்கு? வரும் சட்டமன்ற தேர்தலில் நிச்சயமாக திமுக வெற்றி பெறப்போகிறது. அதில் சந்தேகம் இல்லை.

மது ஆலைகளை திமுகவைச் சேர்ந்தவர்கள் நடத்துகிறார்கள் என்பது அரசியலுக்காக சொல்லப்படுகிறது. தலைவர் கலைஞர் ஒரு விஷயத்தை மிக தெளிவாக சொல்லி இருக்கிறார். தமிழகத்தில் மது விலக்கு அமலான உடனே திமுகவினர், அவர்களது உறவினர்கள் மது ஆலைகள் நடத்தி வந்தால் அதை மூடிவிடுவோம். தமிழகத்தில் மதுவிலக்கு என்பதற்காக வெளி மாநிலத்துக்காக உற்பத்தி செய்யமாட்டார்கள். அது மிக தெளிவாக சொல்லப்பட்டு விட்டது.

திமுக வேட்பாளர்கள் மிகச்சரியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள். அதிமுகவில் என்ன காரணத்துக்காக வேட்பாளரை நியமிக்கிறார்கள். ஏன் மாற்றுகிறார்கள் என்பதெல்லாம் தெரிவதில்லை. திமுக நல்ல வேட்பாளர்களை அறிவித்துள்ளதால், அதிமுகவுக்கு அச்சம் ஏற்பட்டுள்ளது. அதனால்தான் இன்னும் வேட்பாளரை மாற்றிக்கொண்டும், தேர்தல் அறிக்கை வெளியிடாமலும் இருக்கிறார்கள். திமுகவின் தேர்தல் அறிக்கை சிறப்பாக இருப்பதால் அதை காப்பி அடித்து ஜெயலலிதா அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்" என தெரிவித்தார்.
 
ச.ஜெ.ரவி