வெளியிடப்பட்ட நேரம்: 13:01 (23/04/2016)

கடைசி தொடர்பு:14:10 (23/04/2016)

திமுக கூட்டணியில் முதல் கலகக் குரல்! - 'கராத்தே'வை ஒதுக்குகிறாரா ஸ்டாலின் ?

முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்ற பொன்மொழியை அரசியல்வாதிகள் தேர்தல் சமயத்தில்தான் உணர ஆரம்பிக்கின்றனர்.

சென்னை மயிலாப்பூர் தொகுதியின் அதிமுக வேட்பாளராக களத்தில் இருப்பவர் முன்னாள் போலீஸ் டி.ஜி.பி ஆர். நட்ராஜ். இவரை எதிர்த்து  திமுக கூட்டணி சார்பாக தொடை தட்டுபவர் முன்னாள் துணைமேயர் 'கராத்தே' ஆர்.தியாகராஜன்.

அதிமுக வேட்பாளரான நட்ராஜ், காவல்துறை பணிக் காலத்தில் கற்காத (?) பயிற்சிமுறைகளையெல்லாம் தற்போது மயிலாப்பூர் தொகுதி ரத்தத்தின் ரத்தங்கள் மூலமாக கற்றுவருகிறார்.

வாக்கு சேகரிக்கப் போகும் முன்னதாக, ஒவ்வொரு நாளும் அதற்கான செய்முறை விளக்கங்கள் அவருக்கு திறம்பட சொல்லிக் கொடுக்கப்படுகிறது கட்சி நிர்வாகிகளால். 

எந்தத் தெருவில் எப்படி நடந்து வரவேண்டும், எங்கே பாதி அளவிலும் எங்கே முக்கால் மற்றும் முழு அளவிலும் குனிந்து வளைந்து கும்பிடு போட வேண்டும்... எங்கே கொஞ்சம் விறைப்பாக ரிலாக்ஸ் செய்து கொள்ளலாம் என்பதை கட்டணம் இல்லாமல் தெளிவாக வகுப்பெடுக்கிறார்கள் கட்சிக்காரர்கள். கடந்த காலங்களில் மீசையை முறுக்கி விறைப்பாக, நெஞ்சை நிமி்ர்த்தி, சமூகவிரோதிகளை பதம் பார்த்தவர் இப்போது ஒன்றியம், நகரம் வட்டம் என யார் சொன்னாலும் செய்திடுவேம்னே என பவ்யம் காட்டி, பக்கா அரசியல்வாதியாக அவதாரம் எடுத்துக்கொண்டிருக்கிறார்.

நம்மிடம் பேசிய மயிலாப்பூர் தொகுதி அதிமுக பொறுப்பாளர் ஒருவர்,  'டி.ஜி.பி.சார்,  சொல்லிக் கொடுக்கறத அப்படியே, டக்கு டக்குன்னு  புடிச்சுக்கறாரு' என்று பாராட்டு சான்றிதழ் வாசித்தார்.

"அடிப்படையில நட்ராஜ் சார் அரசியல்வாதியாக இல்லாத காரணத்தால் பூத் கமிட்டி, டேபிள் வொர்க், பேட்டா,  தொண்டர் படையின்  ரவுண்ட்ஸ் இப்படிப் பல விஷயங்கள் அவருக்கு ஆரம்பத்தில் புரியவில்லை. இதுக்கெல்லாம் 'பைசா ' செலவு பண்ணியே ஆகணும்கறதை சொல்லிச் சொல்லிப் புரிய வெச்சோம். இப்போ கொஞ்சம் கொஞ்சமா செட் ஆகிட்டாரு.  டி.ஜி.பி அய்யாவை 50 ஆயிரம் வாக்கு குறையாத வித்தியாசத்துல  ஜெயிக்க வைக்கணும்கறது அம்மாவோட உத்தரவு. அதனால, காலையிலேயே  கேன்வாசுக்கு கிளம்பிடறோம்" என்றனர் அதிமுக நிர்வாகிகள்.

சரி, கராத்தே தியாகராஜனின் கதை என்ன, அவருடைய நிலை எப்படி இருக்கிறது என காங்கிரஸ் ஏரியாவில் விசாரித்தேன்.

"கைக்கு எட்டியது வாய்க்கு எட்டுமா என்பதுபோல் 'கராத்தேவின் வெற்றி,  இப்போது  தளபதி ஸ்டாலின் கையில்தான் இருக்கிறது. தளபதி சென்னை மேயராக இருந்தபோது, துணை மேயராக இருந்தவர் கராத்தே. அப்போது ஜெயலலிதாவிடம் நல்ல பெயரை வாங்குவதற்காக,  மேயரான தளபதியை ஒரு வழி பண்ணி விட்டார். ஒருகட்டத்தில் மாநகராட்சிக்குள் நுழையவே முடியாத அளவிற்கெல்லாம் அவருக்கு தொல்லைகளை கொடுத்தார்.

இன்று காங்கிரஸ் சார்பாக திமுக கூட்டணியில் களம் இறங்கியிருக்கிறார். பழைய சம்பவங்கள் எல்லாம் அவருக்கு நினைவில் வந்துபோகவே கொஞ்சம் அச்சத்தில் இருக்கிறார்" என்கிறார்கள்.

'மறப்போம், மன்னிப்போம்' என்பது அரசியலில் கருணாநிதியின் பாணி. ஆனால் அதை தளபதியிடம் 100 சதவீதம் எதிர்பார்க்க முடியாது. கராத்தே தியாகராஜனுக்கும் இது தெரியும். அதனால் நேற்று அவரிடமே போனில் சமாதானமாக பேசி ஆதரவு கேட்டிருக்கிறார் கராத்தே. கலைஞரை, ஈவிகேஎஸ் இளங்கோவனுடன் வீட்டில் போய்ப் பார்த்துப் பேசினார். இன்று காலை தளபதியை அவர் வீட்டிற்கே நேரில் போய்ப் பார்த்து, "பழசையெல்லாம் மறந்துடுங்க தளபதி, கட்சிக்காரங்களை வேலை செய்யச் சொல்லுங்கன்னு' கேட்டிருக்காரு" என்கிறார் அப்பகுதி காங்கிரஸ் பொறுப்பாளர்களில் ஒருவர்

திமுகவின் சீனியர்கள் சிலரிடம் பேசினோம். “1996-2001 திமுக பீரியடில்  தளபதிதான் சென்னை மேயர்.  2001-ல் தளபதி, அவர்கள் அதிமுக பீரியடிலேயே சென்னை மேயராக வெற்றி பெற்றார்.  எம்.எல்.ஏ.வாகவும் வெற்றி கண்டார். 'ஒருவருக்கு ஒரு பதவிதான்' என்று இதை எதிர்த்து அன்றைய ஜெயலலிதா அரசாங்கம்,  தொல்லை கொடுத்தது. அப்போது அதிமுகவின் தென்சென்னை மாவட்டச் செயலாளராக இருந்த இதே கராத்தே தியாகராஜன்தான் சென்னையின்  துணை மேயர்.

அந்தம்மாவிடம் நல்லபெயரை எடுக்கவேண்டும் என்பதற்காக இதே கராத்தே தியாகராஜன்தான், எங்கள் தளபதியை ரிப்பன் மாளிகைக்குள்ளேயே நுழைய விடாமல் பார்த்துக் கொண்டார். இவர் தொல்லையால் தான் தளபதி தன் பதவியையே ராஜினாமா செய்தார். அதன் பின்னர் 2006 வரையில் துணை மேயரே, மேயராக இருந்து மாநகராட்சியை வழிநடத்தினார்.

இப்போது இருக்கும் சூழ்நிலையில் தளபதி  'கராத்தே'வுக்கு என்ன பதில்  சொன்னாருன்னு தெரியலை. இன்னும் எங்களுக்கு எந்த சிக்னலும் கிடைக்கலை. தளபதிக்கிட்டே இருந்து எங்களுக்கு சிக்னல் கிடைச்சாலும் எங்கள் தளபதியை 'கராத்தே' படுத்திய பாட்டை எங்களால் முழுசா மறக்க முடியாது' என்கின்றனர், பழைய நினைவுகளில் மூழ்கியவர்களாக...

திமுக கூட்டணியில் முதல் கலகக்குரல் !

- ந.பா.சேதுராமன்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்