Published:Updated:

கோவையில் மதுக்கடையைப் பற்றி பேச முயன்ற மாவோயிஸ்டை மடக்கிய போலீஸ்!

Vikatan Correspondent
கோவையில் மதுக்கடையைப் பற்றி பேச முயன்ற மாவோயிஸ்டை மடக்கிய போலீஸ்!
கோவையில் மதுக்கடையைப் பற்றி பேச முயன்ற மாவோயிஸ்டை மடக்கிய போலீஸ்!
கோவையில் மதுக்கடையைப் பற்றி பேச முயன்ற மாவோயிஸ்டை மடக்கிய போலீஸ்!

கோவை: தமிழக எல்லையான ஆனைகட்டியில் உள்ள மதுக்கடை தொடர்பாக பேசமுயன்ற மாவோயிஸ்ட் இயக்க நிர்வாகிகளை காவல் துறையினர் வாயை பொத்தி பேசவிடாமல் தடுத்ததால் பரபரப்பு நிலவியது.

கோவையில் கடந்த ஆண்டு கைது செய்யப்பட்ட மாவோயிஸ்ட்கள் 5 பேரும், கோவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படும் போது, பொதுப்பிரச்னைகளை பற்றி பேசுவதை வாடிக்கையாக வைத்துள்ளனர். சிம்புவின் பீப் பாடல் துவங்கி, ஆந்திராவில் தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்டது வரை பல்வேறு பிரச்னைகளைப்பற்றி இவர்கள் முழக்கங்களாகவும், பேட்டியாகவும் கொடுத்துள்ளனர்.

இந்நிலையில், இன்று கோவை மாவட்ட முதன்மை நீதிமன்ற நீதிபதி பொங்கியப்பன் முன்னிலையில் மாவோயிஸ்ட்கள் 5 பேரும் ஆஜர் படுத்தப்பட்டனர். அவர்களை மே மாதம் 25-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்.

கோவையில் மதுக்கடையைப் பற்றி பேச முயன்ற மாவோயிஸ்டை மடக்கிய போலீஸ்!

இதையடுத்து, மாவோயிஸ்ட்கள் 5 பேரும் வெளியே அழைத்து வரப்பட்டபோது, தேர்தலை புறக்கணிக்கக் கோரி முழக்கங்களை எழுப்பினர். அப்போது மதுக்கடைகளை மூட வலியுறுத்தி மாவோயிஸ்ட்கள் பேச ஆரம்பிக்க, அதிர்ச்சியடைந்த போலீசார், மாவோயிஸ்ட்கள் வாயை பொத்தி இழுத்து சென்றனர். வழக்கமாக எதை பேசினாலும் மாவோயிஸ்ட்களை தடுக்காத போலீசார், மதுக்கடைகளை பற்றி பேச முற்பட்டதால் வாயை பொத்தி அழைத்து சென்றது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. காவல் துறையை மீறி பேச முயன்ற மாவோயிஸ்ட்டுகளை காவல் துறையினர் பேசவிடாமல் தடுத்து உடனடியாக வாகனத்தில் ஏற்றி அழைத்து சென்றனர்.

தமிழக கேரள எல்லையான ஆனைகட்டியில் உள்ள மதுக்கடையை அகற்ற கோரி அட்டப்பாடி மலைபகுதியை சேர்ந்த ஆதிவாசி பெண்கள் இரண்டு மாதமாக போராட்டம் நடத்தி வந்தனர். கடையை அகற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுக்காத சூழ்நிலையில், தமிழக அரசுக்கு எச்சரிக்கை விடுத்து மாவோயிஸ்ட்டுகள் அட்டப்பாடி பகுதியில் நோட்டீஸ் ஓட்டினர். இதனால் அதிர்ச்சியடைந்த கோவை மாவட்ட நிர்வாகம் உடனடியாக ஆனைகட்டி மதுக்கடையை மூடியது குறிப்பிடத்தக்கது.

-ச.ஜெ.ரவி