தேர்தல் ஒத்திவைப்பு... உயர் நீதிமன்றத்தை நாடியது தி.மு.க.! | Election postponded, DMK went to High Court

வெளியிடப்பட்ட நேரம்: 13:25 (21/05/2016)

கடைசி தொடர்பு:13:42 (21/05/2016)

தேர்தல் ஒத்திவைப்பு... உயர் நீதிமன்றத்தை நாடியது தி.மு.க.!

சென்னை: தமிழகத்தில் தஞ்சை மற்றும் அரவக்குறிச்சி தொகுதிகளில் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டு உள்ளது. இதை எதிர்த்து தி.மு.க. சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

தமிழக சட்டமன்றத்திற்கு நடைபெற்ற தேர்தலில், வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்பட்டதாகவும், பணம் பறிமுதல் செய்யப்பட்டதாலும், தஞ்சை மற்றும் அரவக்குறிச்சி தொகுதிகளின் வாக்குப்பதிவை தேர்தல் ஆணையம் ஒத்திவைத்துள்ளது. மேலும், இந்த இரண்டு தொகுதிகளிலும் மே 23-ம் தேதி தேர்தல் நடைபெறும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்தது.

ஆனால், அதனை எதிர்த்து பல்வேறு மனுக்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. அந்த மனுக்கள் மீதான விசாரணையில், இந்த இரண்டு தொகுதிகளிலும் மே 23-ம் தேதி தேர்தல் நடத்தப்படாது. என்று தேர்தல் ஆணையம் பதில் அளித்தது.

மேலும், தஞ்சை மற்றும் அரவக்குறிச்சி தொகுதிகளுக்கு ஜூன் 13-ம் தேதி தேர்தல் நடைபெறும். 2 தொகுதிகளின் வாக்கு எண்ணும் தேதி பின்னர் அறிவிக்கப்படும். தேர்தல் தொடர்பான நடவடிக்கைகள் ஜூன் 20-ம் தேதிக்குள் முடிவடையும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், இந்த இரண்டு தொகுதிகளிலும் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டதை எதிர்த்தும், மே 23ம் தேதியே இவ்விரு தொகுதிகளிலும் வாக்குப்பதிவை நடத்த வேண்டும் என்று உத்தரவிடக் கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் தி.மு.க. சார்பாக அக்கட்சியின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மனு தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனுவை அவசர வழக்காக, நீதிபதிகள் கல்யாணசுந்தரம், கிருஷ்ணகுமார் இன்று பிற்பகலில் விசாரணைக்கு எடுத்துக்கொள்வார்கள் என்று கூறப்படுகிறது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்