தேர்தலில் தலா 3000 கோடி ரூபாய் செலவு செய்த திமுக, அதிமுக:திருமாவளவன் புகார்!

சென்னை: நடந்து முடிந்த தமிழ்நாடு 2016 சட்டமன்றத் தேர்தலில் திமுகவும் அதிமுகவும் போட்டிப் போட்டுக்கொண்டு தலா ரூ.3000 கோடியை செலவு செய்து வாக்குகளைப் பெற்றதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் பரபரப்புப் புகார் தெரிவித்துள்ளார்.

முன்னணி தமிழ்த் தொலைக்காட்சி ஒன்றிற்கு திருமாவளவன்  பேட்டியளித்துள்ளார். அதில், மேற்கண்டவாறு அவர் கூறியுள்ளார். அந்தப் பேட்டியில்,திருமாவளவனிடம் பல்வேறு கேள்விகள் முன்வைக்கப்பட்டன. அவற்றுக்குப் பதில் அளித்த திருமாவளவன்,'பாமக, தேர்தலுக்காக ரூ. 100 கோடியில் இருந்து ரூ. 200 கோடி வரை செலவு செய்துள்ளார்கள். எங்கள் மக்கள் நலக்கூட்டணி 234 தொகுதியிலும் மொத்தத்தில் ரூ. 50 கோடியில் இருந்து ரூ.60 கோடி கூட செலவு செய்திருக்கமாட்டோம்' என தெரிவித்தார்.

தொடர்ந்து அவர் கூறுகையில், தமிழகத்தில் அதிமுகவிற்கு எதிராக எதிர்க் கட்சிகளை ஒன்று சேர்க்க திமுக தவறியது என்றார். மேலும் அவர் காட்டுமன்னார் கோவிலில் தனக்கு ஏற்பட்ட தோல்வி குறித்துத் தெரிவிக்கையில்,' குறைந்த வாக்குவித்தியாசத்தில் காட்டுமன்னார் கோயில் தொகுதியில் தோற்றதை கவுரவமான தோல்வி என்று எடுத்துக்கொண்டேன். எனக்கு வாய்ப்பு கிடைத்திருந்தால் நன்றாக செய்திருப்பேன். என் மீது அபரிதமான நம்பிக்கையும் பற்றும் வைத்திருந்த மக்கள் வாக்களித்திருக்கிறார்கள். அதையும் மீறி தோல்வி என்பது சற்று ஏமாற்றத்தை, அதிர்ச்சியை தந்திருக்கிறது.' என்று கூறினார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!