தி.மு.க. 89, அ.தி.மு.க. 83 இடங்களில் வெற்றி! -கருணாநிதி கணக்கு

சென்னை: தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் நேரடியாக போட்டியிட்ட 172 இடங்களில், தி.மு.க. 89 இடங்களிலும், அ.தி.மு.க. 83 இடங்களிலும்தான் வெற்றி பெற்றுள்ளது என்று கருணாநிதி தெரிவித்து உள்ளார்.

இது குறித்து தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில், ''தற்போது நடைபெற்ற 234 தொகுதிகளுக்கான தேர்தலில், அ.தி.மு.க. அணி 234 தொகுதிகளிலும் இரட்டை இலை சின்னத்திலே தான் போட்டியிட்டன. தி.மு.க., காங்கிரஸ் கட்சிக்கு 41 இடங்களையும், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு 5 இடங்களையும், மனித நேய மக்கள் கட்சிக்கு 4 இடங்களையும், புதிய தமிழகம் கட்சிக்கு 4 இடங்களையும் அளித்ததுபோக எஞ்சிய 180 தொகுதிகளிலும் உதய சூரியன் சின்னம் தான், அ.தி.மு.க. வை எதிர்த்துப் போட்டியிட்டது.

இந்த 180 இடங்களில்கூட மக்கள் தே.மு.தி.க. கட்சிக்கு 3 இடங்களும், பெருந்தலைவர் மக்கள் கட்சி, சமூக சமத் துவப்படை, விவசாயத் தொழிலாளர் கட்சி ஆகிய வற்றுக்கு தலா ஒரு இடமும் அளித்ததுபோக 174 இடங்களில் தான் தி.மு.க. போட்டியிட்டது.

அதிகாரப் பூர்வமாக 232 தொகுதிகளில், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள தேர்தல் முடிவுகள் அ.தி.மு.க. 134 இடங்களிலும், தி.மு.க. அணி 98 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. இந்த 98 இடங்களில், தி.மு.க. 89 இடங்களிலும், காங்கிரஸ் கட்சி 8 இடங்களிலும், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் 1 இடத்திலும் வெற்றி பெற்றுள்ளது. தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் நேரடியாக போட்டியிட்ட 172 இடங்களில், தி.மு.க. 89 இடங்களிலும், அ.தி.மு.க. 83 இடங்களிலும் தான் வெற்றி பெற்றுள்ளது.

ஆனால், ஒட்டுமொத்தமாக 232 தொகுதிகளில் 134 இடங்களில் அ.தி.மு.க. வெற்றி பெற்றதாகக் கூறு கிறார்களே, அது எப்படி? காங்கிரஸ் கட்சி போட்டியிட்ட 41 இடங்களில் 33 இடங்களிலும், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி போட்டியிட்ட 5 இடங்களில் 4 இடங்களிலும், மனித நேய மக்கள் கட்சி போட்டியிட்ட 4 இடங்களிலும், புதிய தமிழகம் போட்டி யிட்ட 4 இடங்களிலும், மக்கள் தே.மு.தி.க. போட்டியிட்ட 3 இடங்களிலும், மற்றும் தி.மு.க. ஆதரவோடு போட்டியிட்ட 3 கட்சிகள் போட்டியிட்ட 3 இடங்களிலுமாக 51 இடங்களில், அதாவது தி.மு.க.வின் கூட்டணி கட்சிகள் போட்டியிட்ட 60 இடங்களில் 51 இடங்களை, அ.தி.மு.க. கைப்பற்றியுள்ளது.

தோழமைக் கட்சிகளைப் பற்றி குறை கூறுவதற்காக நான் இதையெல்லாம் சொல்கிறேன் என்று யாரும் தவறாக கருதிடக் கூடாது. அந்தக் கட்சியினரும் அப்படி நினைக்க வேண்டாம். தி.மு.க.வை இந்தத் தேர்தலில் வாக்காளர்கள் பெருவாரியாக ஆதரிக்கவே முனைந்தார்கள் என்பதை எடுத்துக் காட்டுவதற்காகவே இந்த விவரங்களைத் தெரிவிக்கிறேனே தவிர, கூட்டணிக் கட்சிகளை குறை கூறுவதற்காக அல்ல.

தமிழக வரலாற்றிலேயே இதுவரை இல்லாத அளவுக்கு மிகப்பெரிய வலிமைவுடன் சட்டப்பேரவையில் எதிர்க்கட்சியாகச் செயல்படக்கூடிய வாய்ப்பு தி.மு.க.விற்குக் கிடைத்துள்ளது. இந்த வாய்ப்பினை மிகச் சிறப்பாகப் பயன்படுத்தி, தமிழகச் சட்டப்பேரவையில் ஆக்கப் பூர்வமான வகையில் நல்லதோர் எதிர்க்கட்சியாக மக்களின் பிரச்னைகளை முன் வைத்துப் பணியாற்றும் என்ற நம்பிக்கையை தமிழ்நாட்டு மக்களுக்கு இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று கூறி உள்ளார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!