வெளியிடப்பட்ட நேரம்: 15:44 (08/06/2016)

கடைசி தொடர்பு:14:13 (09/06/2016)

மலைக்க வைக்கும் சிலைக் கடத்தல்... மர்மப் பின்னணியில் 'நேஷனல் பாலிடிக்ஸ்'... வெடித்துக் கிளம்பும் அடுத்த பூதம்!

மிழகத்தில் இருந்து கடத்தப்பட்ட பழங்கால சிலைகள், அரியவகை ஓவியங்கள் மற்றும் கலைப் பொருட்களை மீட்கும் நடவடிக்கையில், போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். மக்கள் மத்தியில் பரபரப்பை உண்டாக்கியுள்ள இந்த சிலைகள் மீட்பு விவகாரத்தில், மிகப் பெரிய அரசியல் பின்னணி இருப்பதாக சலசலப்பு எழுந்துள்ளது.

வரலாற்றுச் சிலைகள் மீட்பில் நாட்டின் பிரதமர், அடுத்த நாட்டின் பிரதமருடன் பேசுவதும், கலை, கலாச்சார, பண்பாட்டுப் பொக்கிஷங்களை இந்தியாவுக்கு மீட்டுக் கொண்டு வருவதில் தீவிரமாக முன் முயற்சிகளை மேற்கொள்வதும் அரசியல் வட்டாரத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன.

'சிலை மீட்பில் தமிழக போலீஸ் ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் காட்டிய வேகத்தால்தான், அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து இந்திய அரசு முடிவெடுக்கவில்லை. இல்லையென்றால், தேசிய அளவிலான பாதுகாப்பு கேந்திரமே 'சிலை மீட்பில்' களம் இறங்கியிருக்கும்' என்று கமலாலயம் வட்டாரத்தில் சொல்லிச் சொல்லி மாய்கிறார்கள்.

அவர்களிடம் பேசியபோது, " இதுவரை மத்தியில் இருந்த ஆட்சியாளர்கள், நம்முடைய நாட்டின் புராதன கலைப் பொருட்களை மீட்கும் வேலையில் ஆர்வம் காட்டவில்லை. மாநில அரசுகளுக்கும் போதிய ஒத்துழைப்பு கொடுக்கவில்லை. தொடர்ந்து முப்பதாண்டுகளாக நம்முடைய தேசத்தின் கலாசார சொத்துக்கள், அயல் நாட்டு கண்காட்சிகளில் விற்பனைக்கும், ஏலத்துக்கும் போய்க் கொண்டிருப்பதை கண்டும், காணாமலும் இருந்து விட்டனர்.

சிலை கடத்தலில் ஈடுபட்டிருக்கும் ராஜஸ்தானின் வாமன்கியோ, தமிழகச் சிறையில் இருக்கும் சுபாஷ் சந்திரகபூர், இவருடைய சீடர் தீனதயாளன் போன்றோர் சாதாரணமான 'க்ரைம் அக்யூஸ்ட்' டுகள் அல்ல. கோடி, கோடியாய் கொள்ளையடிக்கும் வேலையைச் செய்கிறவர்கள்.

கண்டிப்பாக இவர்களின் பின்னணியிலோ அல்லது இவர்களுக்கான பாதுகாப்பிலோ, இவர்களை காப்பாற்றி விடவோ தேசிய அளவிலான அரசியல் பின்புலம் இருக்கிறது என்பதே கசப்பான உண்மை" என்கின்றனர் அதிர்ச்சி விலகாமல்.

இந்தியப் பிரதமர் மோடி, ஆஸ்திரேலியாவுக்கு சென்றபோது, அந்நாட்டு பிரதமர் டோனி அபோட், கடலூர் மாவட்டம், விருத்தாசலம் பகுதியில் உள்ள விருத்தகிரீஸ்வரர் கோவிலின் அர்த்த நாரீஸ்வரர் , நடராஜர் சிலைகளை மோடியிடம் ஒப்படைத்தார். அதை திரும்பப்பெறும் முன்னதாக, பலசுற்றுப் பேச்சு வார்த்தைகளை மோடி மேற்கொண்டார் .

தமிழகத்தின் வரலாற்றுச் சிறப்புகள் மிக்க சோழர் காலச் சிலைகளை கடத்தி விற்றது, அண்மையில் சென்னையில் சரண்டரான தீனதயாளன் என்பதையும், இவர் சந்திரகபூரின் கூட்டாளி என்பதையும் தீனதயாளனின் மேலாளர் போலீஸ் விசாரணையின் போது ஒப்புக்கொண்டுள்ளார். இதன்பிறகு இன்னும் பிடிபடாமல் உள்ள சர்வதேச சிலைக்கடத்தல் கும்பலின் பின்னணிகளை அறிந்துகொள்ள போலீசார் தீவிரம் காட்டத் தொடங்கியுள்ளனர்.

இந்நிலையில், அண்மையில் மூன்றுநாள் பயணமாக அமெரிக்கா சென்ற பிரதமர் மோடியிடம் அமெரிக்க அரசும், இதுவரையில் மீட்டிருக்கும் சிலைகளை முறைப்படி ஒப்படைத்தது. வாஷிங்டனில் உள்ள அமெரிக்க விருந்தினர் இல்ல 'பிளேர் ஹவுஸ்' மாளிகையில் இந்த ஒப்படைப்பு பணி நடந்தது. 10 மில்லியன் அமெரிக்க டாலர்  மதிப்புள்ள 200 சிலைகளை இந்தியாவிடம், நேற்றுமுன் தினம் (திங்கள்) அமெரிக்கா வழங்கியது.

ஐம்பொன், வெண்கல சிலைகள், டெரகோட்டா பொம்மைகள் மற்றும் கற்சிலைகள்தான் இதில் அதிகம் காணப்பட்டன. இவற்றில் சில 2 ஆயிரம் ஆண்டுகளுக்கும் முந்தைய பழமை கொண்டவை என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தின் அரியலூர் மாவட்டம் ஸ்ரீபுரந்தான் கிராமத்தில் உள்ள சிவன் கோவிலில் இருந்து கடத்திச் செல்லப்பட்ட ஆயிரம் ஆண்டு பழமையான விநாயகர் சிலை, கி.பி. 850-1250 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட சோழர் காலத்திய ரூ.10 கோடி பெறுமானமுள்ள மாணிக்கவாசகர் வெண்கலச் சிலை இதில் முக்கியமானவை. சிலைகளையும், பழங்கால கலைப் பொருட்களையும் இந்தியா சார்பில் பெற்றுக் கொண்ட பின், அங்கே பேசிய இந்திய பிரதமர் மோடி, "சிலைகள் ஒப்படைப்பு என்பது, இந்தியா-அமெரிக்கா இடையேயான கலாசார உறவில் மிகப்பெரிய இணைப்பை ஏற்படுத்துவதாக அமைந்து இருக்கிறது.

இந்திய கோவில்களில் திருடி கடத்தப்பட்ட கலாசார சிறப்புவாய்ந்த சாமி சிலைகளை, கடந்த 2 ஆண்டுகளாக பல்வேறு நாடுகள் இந்தியாவிடம் ஒப்படைத்து வருகின்றன. இதில் சம்பந்தப்பட்ட இரு நாடுகளும், அவைகளின் விசாரணை தன்மையும் சிறப்பாக செயல்படுகின்றன.

5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய சிந்துசமவெளி நாகரிக நகரங்களைக் காண்பதற்காக சுற்றுலா பயணிகள் இந்தியாவுக்கு அதிக அளவில் வருகிறார்கள். இந்த பொக்கிஷங்கள் உலகம் முழுவதையும் ரசிக்க வைக்கிறது. இன்றைய தொழில்நுட்பம் சட்டவிரோதமாக சிலைகளை கடத்துவோரை பிடிக்க உதவியாக இருக்கிறது" என்றார் பெருமிதமாக. அமெரிக்காவுக்கான இந்திய தூதர் அருண் கே.சிங் , ‘தற்போது 12 சிலைகள் இந்தியாவிடன் ஒப்படைக்கப்பட்டு உள்ளன. மற்ற சிலைகளும் விரைவில் முறைப்படி பெறப்படும்” என்றார்.

இது தொடர்பாக தமிழக மரபுசார் தன்னார்வலர்கள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ராஜசேகரன் பாண்டுரங்கன், கட்டடக் கலை வல்லுநரான அவர் மனைவி வித்யாலட்சுமி ஆகியோரிடம் பேசினோம்.

"தமிழகம் முழுவதும் மரபுசார் கலாச்சாரங்களை, கலைகளை காக்கும் பொறுப்பு, அந்தந்தப் பகுதியில் வசிக்கும் பொது மக்களுக்கும், மாணவர்களுக்கும் மட்டுமே அதிகம் உள்ளது. இதை வலியுறுத்தி சென்னையில்  இருந்து நெல்லை நோக்கிய பயணம் இப்போது... தொடர்ந்து தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறோம்.

திருச்சி,  மதுரை, நெல்லை மண்ணில், பாண்டிய மன்னர் காலத்திய குடவறைகள், கோயில்கள், கல்வெட்டுகள், சிற்பங்கள் என சோழ மன்னர்களுக்கு இணையாக அமைக்கப்பட்டுள்ளன. முதுமக்கள் தாழியாகட்டும், அதே போல் சுமைதாங்கிக் கற்கள், ஊர் எல்லைக் கற்கள், கல்வெட்டுகள் என பல அம்சங்கள் பாதுக்காக்கப் படவேண்டியவைகள் என்பதை ஊர் ஊராகப் போய்ச் சொல்லி மக்களுக்கு விழிப்பு உணர்வை ஏற்படுத்தும் வேலையில் இறங்கியுள்ளோம். இந்து, சமணம், பௌத்தம், ஹரப்பா-மொகஞ்சதாரா என்று பல அற்புத கலைப் பொக்கிஷங்கள் அனைத்தும் மீட்கப்பட்டு வருவது மகிழ்ச்சியளிக்கிறது." என்றனர்.

கோவை, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் வரலாற்று ஆர்வலர்கள் என்ற அமைப்பே இயங்கி வருகிறது.
'நாங்கள் ஜமீன் குடும்பம். அந்த வகையில் இந்த பழங்காலப் பொருட்கள் எங்கள் குடும்பத்தில் தலைமுறை, தலைமுறையாக இருக்கின்றன' என்று சொல்லிக் கொண்டு அவைகளை கொண்டு வந்து உலகளாவிய கண்காட்சிகளில் வைத்து வணிக ரீதியாக சந்தைப்படுத்துகிறவர்களும் இன்னொரு பக்கத்தில் அதிகமாகி விட்டனர்.

சிலைக் கடத்தல் என்றுதான் கேள்விப் படுகிறோம், அடுத்ததாக அதை போலீஸ் மீட்டது எப்படி என்று பார்க்கிறோம். சிலைக் கடத்தலுக்குப் பின்னால் இருக்கும் பல விஷயங்கள் வெளியே தெரியாத மர்மமாகவே உள்ளன.

வெறும் மீட்பு மட்டும் போதாது என்கிற நிலையில், மாநில அரசும் மத்திய அரசும் சிலைக் கடத்தலின் பின்னணியில் உள்ள சர்வதேச தொடர்புகளைக் கண்டறிந்து, எதிர் காலத்திலும் இது போன்ற சிலைத் திருட்டுக் கொள்ளைக் கும்பல் இயங்காமல் தடுப்பதற்கான உரிய நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என்பதே வரலாற்று ஆர்வலர்களின் எதிர்பார்ப்பு!


ந.பா.சேதுராமன்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்