பணம் இருந்தால் பக்கத்தில் வந்து நில்லு... பெரியார் வழியில் வைகோ!

 

'கட்சிக்கு நிதியளிப்பவர்கள் மட்டுமே இனி தன்னுடன் நின்று புகைப்படம் எடுத்துக்கொள்ளவேண்டும்'  என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அறிவித்திருப்பது, கட்சியினரிடையே ஆச்சர்யத்தையும் அதிர்ச்சியையும் ஒரு சேர ஏற்படுத்தியுள்ளது.

தென்சென்னை, கிழக்கு மாவட்ட மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகச் செயல்வீரர்கள் கூட்டம்,   சென்னை, தரமணியையொட்டியுள்ள வேளச்சேரி மெயின் ரோட்டில் உள்ள ஹேமா மஹாலில் நடைபெற்றது. மாவட்டப் பொறுப்பாளர் கே. கழககுமார்  தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், வைகோ உள்ளிட்ட தலைவர்கள் சிறப்புரையாற்றினர்.

கூட்டத்திற்குப்பின் கட்சி நிர்வாகிகள் பலர், வைகோவுடன் புகைப்படம் எடுத்துக்கொள்ள முண்டியடித்துக்கொண்டு வந்தனர். கூட்ட பரபரப்பில் தொண்டர்களை கட்டுப்படுத்தமுடியாத வைகோ,  தடாலடியாக மைக்கை பிடித்து, " இனி என்னுடன் படம் எடுக்கவேண்டுமானால் கட்சிக்கு பணமாகவோ காசோலையாகவோ என்னிடமே நேரடியாக நிதி தரவேண்டும். அப்படி தருபவர்களுடன் மட்டும்தான் இனி புகைப்படம் எடுத்துக்கொள்வேன்” என அறிவிக்க, நிசப்தமானது கூட்டம். ஆனாலும் அசராமல் தொண்டர்கள் பலர் கட்சிக்கு நிதியாக சிறுதொகையை கொடுத்துவிட்டு, கைகோவுடன் நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

கட்சி நிர்வாகி ஒருவர் காசு கொடுக்காமல் அருகில் வந்து நிற்க, " காசு தந்தியா...போ போ...கொடுத்திட்டுவந்து நில்லு!"  என வைகோ சிரித்தபடியே கறாராக சொல்ல,  அந்த இடம் சிரிப்பலையால் அதிர்ந்தது. இதனையடுத்து, அந்த நிர்வாகி தன்னிடம் இருந்த பணத்தை வைகோவிடம் தந்துவிட்டு, புகைப்படம் எடுத்துக்கொண்டுதான் அங்கிருந்து நகர்ந்தார்.

இன்னொரு நிர்வாகி, தன் மகன்களிடம் காசு கொடுத்து அதை வைகோவுக்கு தரச்சொல்லி புகைப்படம் எடுத்துக்கொண்டார். புகைப்படம் எடுக்க வருபவர்களிடம் பணத்தைப் பெற்று,  அதை எண்ணி பார்த்த பின்னரே தன் அருகிலிருந்து உதவியாளரிடம் தந்தார் வைகோ.

திராவிடர் கழகத் தலைவரான பெரியார்,  தன் இயக்கத்திற்கு நிதி சேர்ப்பதற்காக தன்னுடன் புகைப்படம் எடுக்க பணம் வசூலித்தார். புகைப்படம் எடுத்துக்கொள்ள, பொதுக்கூட்டத்திற்கு வர, உடன் உணவு அருந்த என பல வழிகளிலும் கட்சிக்கு நிதி சேர்ப்பார். அவர் காலத்தில்தான், அரசியல் கட்சித் தலைவர்களுக்கு தொண்டர்கள் எடைக்கு எடை நாணயம் வழங்கும் நடைமுறை பிரபலமடையத் தொடங்கியது.   அப்படி பொதுக்கூட்டங்களுக்கு செல்லும் இடங்களில் தொண்டர்கள் அவருக்கு எடைக்கு எடை நாணயம் மட்டுமல்லாது மற்ற பொருட்களையும் வழங்குவார்கள்.

பெரியாரின் வழிவந்த வைகோவும் இப்போது பெரியாரின் பாணியை பின்பற்றி கட்சிக்கு நிதிசேர்க்க ஆரம்பித்திருக்கிறார் என்கிறார்கள் அவரது கட்சியினர். 

படங்கள்: குமரகுருபரன்
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!