10.22 லட்சம் அரசுப் பணியாளர்கள் பயன்பெறும் திட்டம் தொடக்கம்!

சென்னை: தமிழக அரசு அரசுப் பணியாளர்கள் சுமார் 10 லட்சம் பேர் மற்றும் அவர்களது குடும்பத்தினர் பயன்பெறும் வகையில், அரசு பணியாளர்களுக்கான மேம்படுத்தப்பட்ட மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தினை தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா இன்று துவக்கி வைத்தார். 

இது தொடர்பாக தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், " தமிழ்நாடு அரசு பணியாளர்களுக்கான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை மேம்படுத்தி 1.7.2012 முதல் 30.6.2016 வரை  நான்கு ஆண்டு காலத்திற்கு மத்திய அரசின்  பொதுத் துறை நிறுவனமான யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்தின் மூலம் செயல்படுத்திட,  முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டிருந்தார்.

அரசுப் பணியாளர்களுக்கு தற்போது நடைமுறைப்படுத்தப்படும் இந்த புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் நான்கு ஆண்டுகளுக்கு, அரசுப் பணியாளர் குடும்பத்திற்கு அனுமதிக்கப்படும் மருத்துவக் காப்பீட்டுத் தொகை 4 லட்சம் ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளதுடன்,  புற்று நோய், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை உள்ளிட்ட குறிப்பிட்ட சில சிகிச்சைகளுக்கு அனுமதிக்கப்படும் நிதியுதவியானது 7 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அரசு ஊழியரை முழுவதும் சார்ந்துள்ள, குறைந்தபட்சம் 40 சதவீத குறைபாடு கொண்ட மாற்றுத் திறனாளிகள்,  எவ்வித வயது வரம்புமின்றி  இத்திட்டத்தில் பயன் பெற வகை செய்யப்பட்டுள்ளதுடன், விபத்து காரணமாக இத்திட்டத்தின் கீழ் ஒப்புதலளிக்கப்பட்ட சிகிச்சைகளை அவசர சிகிச்சையாக அங்கீகரிக்கப்படாத மருத்துவமனையில் மேற்கொண்டிருப்பின், பணியாளர் பயன்பெறவும், இத்திட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.  இத்திட்டத்தின் கீழ் அரசுத்துறை, உள்ளாட்சி நிறுவனங்கள், அரசு பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் சட்டப்படியான வாரியங்கள், மாநில அரசு பல்கலைக் கழகங்கள் ஆகியவற்றின் பணியாளர்கள் மற்றும் குடும்பத்தினர் நான்கு ஆண்டுகளுக்கு மருத்துவக் காப்பீட்டுப் பலன்களைப் பெற முடியும்.

இந்த மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்திற்கு அரசு பணியாளர்கள் சந்தாத் தொகையாக மாதம் 180/- ரூபாய் செலுத்த வேண்டும்.  தமிழ்நாடு அரசு தனது பங்காக மொத்தம் 17 கோடியே 90 லட்சம் ரூபாயை ஆண்டு தோறும் காப்பீட்டு நிறுவனத்திற்கு வழங்கும். இந்தத் திட்டத்தின் மூலம் சுமார்  10.22 லட்சம் அரசுப் பணியாளர் மற்றும்  அவர்தம் குடும்பத்தினர் பயன் பெறுவர்" எனக் கூறப்பட்டுள்ளது

Do you like the story?

Please Appreciate the Author by clapping!