Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

விசாரணையைத் திசை திருப்பும் ராமதாஸ் மீது நடவடிக்கை வேண்டும்: பாரிவேந்தர் வலியுறுத்தல்!

சென்னை: எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக விவகாரத்தில் நடந்து வரும் விசாரணையைத் திசை திருப்பும் வகையில் பாமக நிறுவனர் ராமதாஸ் நடந்து கொள்கிறார் என்றும் அவர் மீது காவல் துறையும், நீதித் துறையும் சரியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இந்திய ஜனநாயகக் கட்சியின் நிறுவனர் டாக்டர். பாரிவேந்தர் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று(ஞாயிறு) வெளியிட்டுள்ள அறிக்கையில்,

"தமிழ்ச் சமூகம் சமீப காலமாக சந்தித்து வருகின்ற பின்னடைவுகளில் ஒன்று, தன்னைத்தானே சமூகக் காவலனாகப் பறை சாற்றிக் கொள்ளும் சிலரின் மிரட்டல் அரசியல்தான்.

விஜயகாந்த் தொடங்கி ரஜினிகாந்த் வரை தனது வறட்டு மிரட்டல்களால் 'புகழ் பெற்ற' மருத்துவர் ராமதாஸ், எமது எஸ்.ஆர்.எம்.  பல்கலைக்கழக விவகாரத்தில், தானே புலன் விசாரணை செய்து, தானே தண்டிக்கும் தலைமை நீதிபதி ஆகத் துடிக்கின்ற அவலம், அடிக்கடி ஊடகங்களில் அவருடைய வன்ம அறிக்கைகளின் மூலமாக வெளிவருகின்றன.

நடக்கும் பாதையில் கிடப்பனவற்றையெல்லாம் பொருள்படுத்தாமல் நாம் நடக்க முயன்றாலும், தனது இருப்பைக் காட்டிக் கொள்வதற்காக வாரம் ஒரு முறையாவது எம்மை வம்புக்கு இழுத்துக் கொண்டிருக்கிறார் ராமதாஸ்.

ஒத்துப் போகின்ற இரு சமூகங்களின் இணக்கத்தை இழந்துவிடக் கூடாது என்று நாம் அமைதியாக இருப்பதை அவர் ஒருவேளை கோழைத்தனம் என்று முடிவு செய்துவிட்டார் போல.

நீதிமன்ற விசாரணையில் நடக்காதவை எல்லாவற்றையும் நடந்ததாகத் தனது வெற்று ஒற்றர் படை தந்த தகவல்களின் அடிப்படையில், மருத்துவர் அவர்கள் நீதிமன்றத்துக்கும் காவல்துறைக்கும் கட்டளை இடுகின்ற வேலையை மேற்கொண்டு வருகிறார். இதன் மூலம் புலன் விசாரணை மற்றும் நீதிமன்ற விசாரணைகளின் போக்கில் சட்டவிரோதமான இடையூறுகளைத் தொடர்ந்து செய்து வருகிறார்.

ஒரு புலன் விசாரணை அதிகாரி, யாரை, எப்படி, எப்போது விசாரணை செய்ய வேண்டும் என்பதை நீதிமன்றங்கள் மேற்பார்வை செய்யலாமே ஒழிய,  இப்படித்தான் புலன் விசாரணை செய்ய வேண்டுமென்று யாரும் கட்டளை இட முடியாது என்றும் அதே கருத்தைப் பல முறை உச்ச நீதிமன்றம் பலமுறை அங்கீகரித்துள்ளது என்பதும் அடிப்படை சட்ட நெறிகள்.

மேலும் இதே வழக்கில் இதுவரை தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலை அறிக்கைகளில் (Status Reports) உள்ள தகவல்களைப் பரிசீலனை செய்த அமர்வு, நீதி விசாரணை மிகச் சரியான திசையில் செல்கிறது என்று அறிவித்து, அது 30.07.2016 அன்று இந்து ஆங்கில நாளிதழ் பக்கம் 7-ல் கட்டம் கட்டி வெளியிடப்பட்டுள்ளதை மருத்துவர் அய்யா, தயைகூர்ந்து தேடிப் பிடித்துப் படிக்க வேண்டுகிறேன்.

நீதியின் பரிபாலனத்தில் தலையிடுவதும் விசாரணையைத் திசை திருப்ப முயற்சிப்பதும் காவல்துறை மீது களங்கம் கற்பிப்பதும் சட்டப்படி தவறான நடவடிக்கைகள் என்று தெரிந்தும் மருத்துவர் வரம்பு மீறுகிறார் என்பதே இதன் ஆழமான உண்மை.

யாரோ ஏமாற்றிவிட்டுப் பணத்துடன் பதுங்கிய ஒருவரைக் கண்டுபிடிக்க முயலும் காவல்துறையைக் கொச்சைப்படுத்தும் நீங்கள், நான் ஏற்கெனவே கேட்டும் “இன்டெக்ஸ்” மருத்துவக் கல்லூரி வழக்கில், சி.பி.ஐ. விசாரித்து, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, உயர் நீதிமன்றம் முதல் உச்ச நீதிமன்றம் வரை முட்டி மோதி நிற்கின்ற தகவலைத் தமிழ்நாட்டு மக்களுக்கு ஏன் இன்னமும் தரவில்லை?

இதுவரை நீதிமன்றம் அளித்துள்ள உத்தரவின் நகலில் இல்லாத தகவல்களை ஊடகங்கள் மூலமாகப் பொய்ப் பிரச்சாரம் மேற்கொண்டுள்ள மருத்துவர் அவர்கள் நீதிமன்ற அவமதிப்பையும் அவதூறையும் தொடர்ந்து செய்து வருகின்ற குற்றவாளியாக நிற்கிறார்.

ஒடுக்கப்பட்ட சமூகத்தின் முதுகிலேறி ஒளிந்துகொண்டு, நில அபகரிப்பு என்ற பொய்யைப் புனைந்து எஸ்ஆர்எம் குழுமத்துக்கு எதிராக வழக்காடும் ராமதாஸ், இந்த மக்களுக்கு ஏற்கெனவே இழைத்த, இப்போதும் இழைத்து வருகிற கொடுமைகள் யாரும் அறியாததல்ல.

தனது இன மக்களையே சுரண்டிப் பெருத்த ராமதாஸ், நில மோசடி விவகாரம் குறித்துத் தனது மகளிடம் காவல்துறை நடத்திய விசாரணை குறித்து, இன்னும் ஏன் இதுபோன்ற காரசாரமான விஷயங்களில், பொதுநலன் சார்ந்து கொப்புளிக்கவில்லை?

பணமோசடி குறித்து பாதிக்கப்பட்டவர்கள் என்ற அடிப்படையில் முதலில் புகார் தந்த எமது பல்கலைக்கழகம், இறுதி விசாரணை முடிந்து உண்மையை மக்களுக்கு கொண்டு வர வேண்டும் என்பதன் அடிப்படையிலேயே வழக்கைச் சந்தித்தும், அதற்கான ஒத்துழைப்பை நல்கியும் வருகிறது.

ஆனால், அதற்குள் மதன் எழுதியதாகக் கூறப்படும் கடிதத்தில் உள்ளதே வேதவாக்கு என்று அறிக்கை விடுகின்ற மருத்துவரைப் பார்த்தால் அந்தக் கடிதத்தையே இவர்தான் மதன் பேரில் எழுதி இருப்பாரோ என்று அஞ்சத் தோன்றுகிறது.

காவல்துறைக்கு எது மானம்? எது அவமானம்? என்று  நற்சான்றளிக்கிற தகுதியை மிரட்டலிலும், உருட்டலிலும்,எப்போதும் வெளிப்படுத்தும் ராமதாஸ் கைது செய்த அடுத்த நொடியில் காலில் விழுகிற கலாச்சாரத்திலும் கைதேர்ந்த ஒருவர் எப்படி ஊருக்கு உபதேசம் செய்யும் ஞானம் பெற்றார் என்பது தெரியவில்லை.

பல நேரம் குழம்பிய குட்டையிலும், சில நேரம் தானே குழப்பிய குட்டையிலும் ஆதாய மீன் வேட்டை நடத்திப் பழக்கப்பட்ட மருத்துவர் அய்யா அவர்கள், இந்த குழப்பத்தில்  பலன் கிடைக்கவில்லையே என்று பதற்றமடைகிறார்.

குற்றவியல் நடைமுறைச் சட்டம், இந்திய தண்டனைச் சட்டம் உள்ளிட்ட எல்லா விளக்கங்களையும் கற்றறிந்த நீதிமானாக வலம் வரும் மருத்துவர் அவர்கள், தொடர்ந்து நீதிமன்ற அவமதிப்பையே வேலையாகக் கொண்டுள்ளார்.

நீதிமன்ற நெருக்கடிகள், பாதுகாப்பு கடினமான பின்பு, தனது படை பரிவாரங்களுடன் பதுங்கிக்கொண்ட ராமதாஸ் அவர்கள் காவல்துறை மீது கறை பூச முயற்சிக்கிறார்.

இதுவரையிலும் காவல்துறை அழைத்த அத்தனை பேரையும் எமது பல்கலைக்கழகம் அனுப்பிவைத்து விசாரணைக்கு ஒத்துழைப்புத்  தந்துள்ளது.

மேலும், அதன் chairman  மற்றும் president என்ற முறையில் திரு. ரவி பச்சமுத்து மற்றும் திரு. சத்தியநாராயணன் ஆகியோர் காவல்துறை முன் ஆஜராகித் தங்களது வாக்குமூலத்தை அளித்துவிட்டனர் என்பதைக் காவல்துறை நீதிமன்றத்தில் தெரிவித்ததை ராமதாஸ் அவர்கள் கவனமாக மறக்கிறார் அல்லது மறைக்கிறார்.

யார் யாரிடம், யார் சொல்லிப் பணம் தந்தார்கள்  என்பதைக் காவல்துறை விசாரிக்க வேண்டும். புகாரில் உள்ளபடியே ஒத்துக்கொள்ள வேண்டுமென்று சொன்னால், அதை உங்கள் மகள் மீதான நில அபகரிப்பு வழக்கிலிருந்தே தொடங்கலாமே…? விசாரணை, குற்ற அறிக்கை என்ற நடைமுறைகள் எல்லாம் எதற்கு…?

தன்னிடம் ஒரு வழக்கு சம்பந்தமான தகவல் இருப்பின் சட்ட நடைமுறைப்படி அதைக் காவல்துறைக்குத் தெரிவிப்பதை விட்டுவிட்டு ஏற்கெனவே மஞ்சள் காமாலை கண்ணுடன் அலையும் ஊடக நிறுவனத்துடன் உங்களுக்கு என்ன ஒப்பந்தம்…?

ஒருவேளை சி.பி.ஐ. குற்றவாளிகள் என்ற அடிப்படையில் ஏற்பட்ட சமீபத்திய நெருக்கமோ..? ரகசியங்களை அம்பலப்படுத்துவேன் என்ற ராமதாஸுடைய வசனத்தின் உட்பொருள் என்ன என்பதை அறிந்தவர்கள் உணர்வார்கள்.

பாமக செய்வதற்கே ஒன்றும் வேலையில்லை என்றான பின்பு, திமுகவும் அதிமுகவும் என்ன செய்ய வேண்டுமென்று சொல்ல இவர் யார்…?

நாற்பதாண்டு காலம் கறைபடாத கல்விச் சேவையாற்றி வருகிறோம். அப்படி எங்கள் கரங்கள் நனைந்திருந்தால், அடுத்த நொடி அந்த பணம் செலுத்தப்பட்டு இருக்கும்.

ஆனால், செய்யாத குற்றத்தைச் சந்தித்தே நிரூபிக்க வேண்டும், உண்மை என்ன என்பதை உரக்கச் சொல்ல வேண்டும் என்ற உணர்விலேயே இந்த வழக்கைச் சந்தித்து வருகிறோம். அதனால்தான் கல்லுரிகளுக்கு மாணவர்களே வரவில்லை என்ற சூழலிலும் எமது கல்லூரிகளில் முழுவீச்சுடன் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. ஒருவேளை இந்தக் காந்தாரி மனப்பான்மையும் மருத்துவரின் புலம்பலுக்குக் காரணமாக இருக்கலாம்.

கை நீட்டி வாங்கிய ஈரம் காயும் முன்பே கொடுத்த கரங்களைக் கொச்சைப்படுத்தும் மருத்துவர் அவர்கள் காவல்துறையைப் பார்த்து செஞ்சோற்றுக் கடன் என்று சொல்லிக் கறை பூசுகிறார்.

ஒரு வழக்கு புலன் விசாரணையை நியாயமாக நடக்க விடாமல் திசை திருப்பும் எண்ணத்துடன் தொடர்ந்து காவல்துறை மற்றும் நீதித் துறை மீது களங்கம் கற்பிக்கும் ராமதாஸ் அவர்கள் மீது காவல் துறையும், நீதித் துறையும் சரியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றேன்." என்று தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement