Published:Updated:

' சுயவிளம்பரம் தேடுவது ஸ்டாலினா... விஜயகாந்தா?' -தே.மு.தி.கவை விளாசும் தி.மு.க.

' சுயவிளம்பரம் தேடுவது ஸ்டாலினா... விஜயகாந்தா?' -தே.மு.தி.கவை விளாசும்  தி.மு.க.
' சுயவிளம்பரம் தேடுவது ஸ்டாலினா... விஜயகாந்தா?' -தே.மு.தி.கவை விளாசும் தி.மு.க.

' சுயவிளம்பரம் தேடுவது ஸ்டாலினா... விஜயகாந்தா?' -தே.மு.தி.கவை விளாசும் தி.மு.க.

தி.மு.க எம்.எல்.ஏக்கள் சஸ்பெண்ட் நிகழ்வை கடுமையாக விமர்சித்திருக்கிறார் தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த். ' சுயவிளம்பரம் தேடிக் கொள்வது நாங்கள் அல்ல. எங்களை விமர்சிப்பதை அவர் நிறுத்திக் கொள்ள வேண்டும்' எனக் கொதிக்கின்றனர் தி.மு.கவினர்.

சட்டமன்றத்தில் இருந்து ஒருவார காலம் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர் தி.மு.க உறுப்பினர்கள். இதையடுத்து நடத்தப்பட்ட போட்டி சட்டமன்றக் கூட்டம் மற்றும் தர்ணா போராட்டத்தின் எதிரொலியாக, எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க எம்.எல்.ஏக்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், தி.மு.க உறுப்பினர்கள் மீதான நடவடிக்கை குறித்து அறிக்கை வெளியிட்ட விஜயகாந்த், ' சட்டப்பேரவையில் மக்கள் பிரச்னையைப் பற்றிப் பேசாமல், தினந்தோறும் ஒரு நிகழ்வை சட்டப்பேரவையில் ஏற்படுத்தியும், போட்டி சட்டப்பேரவை நடத்தியும் சுயவிளம்பரம் தேடிக்கொள்வதில்தான் தி.மு.க அதிக கவனம் செலுத்தி வருகிறது' எனக் குறிப்பிட்டிருந்தார். காங்கிரஸ், இடதுசாரிகள், வி.சி.க என அனைத்துக் கட்சிகளும், 'தி.மு.க உறுப்பினர்கள் சஸ்பெண்டை ரத்து செய்ய வேண்டும்' எனப் பேசி வரும் நிலையில், தே.மு.தி.க நிலைப்பாட்டால் அதிர்ந்து போனது தி.மு.க.

" மக்கள் பிரச்னைகளை விரிவாக எடுத்து வைப்பதற்கு சபாநாயகர் விரும்புவதில்லை. இதை எதிர்த்துதான் தி.மு.க உறுப்பினர்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர். கடந்தகால நிகழ்வுகளை அறியாமல், யாரோ எழுதிக் கொடுக்கும் அறிக்கைகளில் கையெழுத்துப் போடுகிறார் விஜயகாந்த்" எனக் கொதிக்கிறார் தே.மு.தி.க முன்னாள் எம்.எல்.ஏவும் தற்போது தி.மு.க.வில் அங்கம் வகிக்கும் சந்திரகுமார். அவர் நம்மிடம், " கடந்த அ.தி.மு.க ஆட்சியில் தே.மு.தி.க உறுப்பினர்களுக்குக் கொடுக்கப்பட்ட சிரமங்களைப் பற்றி மக்கள் அறிவார்கள். பேருந்து கட்டணம், பால் விலையேற்றம் ஆகியவற்றுக்கு எதிராக பேரவையில் குரல் கொடுத்தோம்.

அப்போது எங்களை ஆளுங்கட்சி உறுப்பினர்கள் சிலர் சீண்டியதால், சபையில் நாக்கைத் துறுத்தும் அளவுக்குச் சென்றார் விஜயகாந்த். இந்த சம்பவத்தை அடுத்து, சபையில் இருந்து எங்களை சஸ்பெண்ட் செய்யும் வேலையில் அ.தி.மு.க அரசு இறங்கியது. இந்த விவகாரம் எங்களுக்குத் தெரியாது. அன்றைக்கு சபைக்குள் நுழைந்த எங்களிடம், ' சட்டசபை உரிமைக் குழு கூடி உங்கள் தலைவரையும் தே.மு.தி.க உறுப்பினர்களையும் சஸ்பெண்ட் செய்யும் வேலையில் இறங்கியுள்ளது. அது குறித்த தீர்மானத்தை இன்று கொண்டு வர இருக்கிறார்கள். என்ன செய்யப் போகிறீர்கள்?' எனக் கேட்டார் தி.மு.க பொருளாளர் மு.க.ஸ்டாலின்.

அப்போது அருகில் இருந்த துரைமுருகன், ' இந்தத் தீர்மானம் குறித்து உங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்யுங்கள்' என்றார். சட்டசபைக்குப் புதியவர்களான எங்களுக்கு சஸ்பெண்ட் நடவடிக்கை அதிர்ச்சியாக இருந்தது. என்ன செய்வது என்றும் தெரியவில்லை. எங்களுக்கு ஆலோசனை அளிக்கும் பண்ருட்டி ராமச்சந்திரனும் அன்றைக்கு சபைக்கு வரவில்லை. இதுகுறித்து தே.மு.தி.க தலைவருடன் தீவிர ஆலோசனை நடத்தினோம். எங்கள் எதிர்ப்பையும் பதிவு செய்தோம். தே.மு.தி.க உறுப்பினர்கள் மீதான சஸ்பெண்ட் நடவடிக்கைக்கு தி.மு.க, காங்கிரஸ், கம்யூனிஸ்டு கட்சிகள் கடும் எதிர்ப்பைப் பதிவு செய்தன. அன்றைக்கு விஜயகாந்த்துக்கு ஆதரவாக எதிர்க்கட்சிகள் ஒன்று திரண்டு வந்தன. எங்களுக்காக தார்மீக குரல் கொடுத்ததை ஏற்றுக் கொண்டோம். இன்றைக்கு அதையே தி.மு.க செய்தால் சுயவிளம்பரமா? அப்படியானால் கடந்த ஐந்து ஆண்டுகளில் விஜயகாந்த், சுயவிளம்பரம் மட்டுமே தேடிக் கொண்டிருந்தார் என்று ஏற்றுக் கொள்ளலாமா? அன்றைக்கு தே.மு.தி.க உறுப்பினர்கள் சபையில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட நிகழ்வை தி.மு.க ஆதரித்திருந்தால், விஜயகாந்த் மௌனமாக இருந்திருப்பாரா? அ.தி.மு.க.வுக்கு ஆதரவாக தே.மு.தி.க செயல்படுகிறது என்ற குற்றச்சாட்டுக்கு வலு சேர்க்கும்விதமாகவே, விஜயகாந்த்தின் அறிக்கை அமைந்திருக்கிறது" என்றார் கொந்தளிப்போடு.

-ஆ.விஜயானந்த்

அடுத்த கட்டுரைக்கு