Published:Updated:

குழந்தைகள் தொடர் பலி! போலி டாக்டர்கள் தேடுதல் வேட்டை

குழந்தைகள் தொடர் பலி! போலி டாக்டர்கள் தேடுதல் வேட்டை
குழந்தைகள் தொடர் பலி! போலி டாக்டர்கள் தேடுதல் வேட்டை

குழந்தைகள் தொடர் பலி! போலி டாக்டர்கள் தேடுதல் வேட்டை

திருவள்ளூர் மாவட்டத்தில் அடுத்தடுத்து 4 குழந்தைகள் பலி எதிரொலியாக சுகாதாரதுறையினர் போலி டாக்டர்களை கைது செய்ய அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். இந்த ஆண்டு இதுவரை 25 போலி டாக்டர்களை கைது செய்துள்ளதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர்.

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணியை அடுத்த காவேரிராஜபுரம் மற்றும் ஆதிஆந்திரவாடா ஆகிய இரண்டு கிராமங்களில் மர்ம காய்ச்சலுக்கு ஒரே வாரத்தில் 4 குழந்தைகள் அடுத்தடுத்து பலியாகினர். இதனால் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகஸ்ட் 21ஆம் தேதி அங்கு சென்று ஆய்வு நடத்தியதோடு சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் மர்ம காய்ச்சலுக்கு என்ன காரணம்? என்பதில் உடனடியாக கவனம் செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார். அதன்படி சுகாதாரத்துறை அதிகாரிகள் அவசர ஆலோசனை மேற்கொண்டனர். கொசுக்கள், போலி டாக்டர்களால் மக்கள் பாதிக்கப்படுவதாக கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இதுதொடர்பாக சுகாதாரத்துறை உயரதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தவுடன் போலி டாக்டர்களை உடனடியாக கைது செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மேலும் கொசுக்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவும் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து சென்னை பொது சுகாதாரத்துறை அலுவலகத்திலிருந்து இரண்டு அதிகாரிகள் மேற்பார்வையில் திருவள்ளூர் மாவட்டத்துக்கு 20க்கும் மேற்பட்ட சுகாதாரத்துறை குழு சென்றது. அந்த குழு மாவட்டம் முழுவதும் போலி டாக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க அதிரடி சோதனை மேற்கொண்டுள்ளனர். இந்த சோதனையில் இன்று போலி டாக்டர் பலர் சிக்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து சுகாதாரத்துறை உயரதிகாரி ஒருவர் கூறுகையில், "திருவள்ளூர் மாவட்டத்தில் போலி டாக்டர்கள் குறித்து எங்களுக்கு புகார் வந்ததன்பேரில் இந்த சோதனை நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு இதுவரை 25க்கும் மேற்பட்ட போலி டாக்டர்கள் பிடிபட்டுள்ளனர். ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் 4 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த 14ம் தேதி நடத்தப்பட்ட சோதனையில் திருவொற்றியூரை சேர்ந்த வெங்கடேஷ்வரன் சிக்கினார். இவர், பிளஸ் 2 முடித்து விட்டு அந்தப்பகுதியில் கிளினிக் நடத்தி வந்தார். அடுத்து நந்தகோபால் என்பவரும், சுரேசும் பிடிபட்டனர். இதில் நந்தகோபால் பத்தாம் வகுப்பு படித்து விட்டு கிளினிக் நடத்தினார். 16ம் தேதி திருவள்ளூரை அடுத்த கனகம்பாள்சத்திரத்தில் 8ம் வகுப்பு வரை படித்து விட்டு கிளினிக் நடத்திய தெய்வசிகாமணி பிடிபட்டார். இதுபோல இன்று நடத்தப்படும் சோதனையிலும் போலி டாக்டர்கள் சிக்குவார்கள் என எதிர்பார்க்கிறோம். போலி டாக்டர்கள் குறித்த ரகசிய விவரம் எங்களிடம் உள்ளது" என்றார்.

சுகாதாரத்துறையினர் கூறுகையில், "உயிரிழப்பு ஏற்படும் சமயங்களில் மட்டும் இதுபோன்ற சோதனைகள் நடத்தப்படுகின்றன. இதன்பிறகு போலி டாக்டர்களை கண்டுகொள்வதில்லை. இதனால் அவர்கள் நடமாட்டம் திருவள்ளூர் மாவட்டத்தில் அதிகமாக உள்ளது. தொடர்ந்து போலி டாக்டர்களை கண்காணித்தால் மட்டுமே அவர்களை முற்றிலும் ஒழிக்க முடியும்" என்றனர்.
 

எஸ்.மகேஷ்

அடுத்த கட்டுரைக்கு