Published:Updated:

வில்லனா சீமான்?

வீறிடும் விஜயலட்சுமி

வில்லனா சீமான்?

வீறிடும் விஜயலட்சுமி

Published:Updated:
##~##

''என்னை மூணு வருஷமா லவ் பண்ணினார். கல்யாணம் பண்ணிக் கிறதாச் சொல்லி ஆசையாப் பழகினார். ஆனால், இப்போ கல்யாணத்துக்கு மறுக்கிறார். என்னை மன உளைச்சலில் தள்ளிய அவர் மீது நடவடிக்கை எடுங்கள்!'' - இயக்குநர் சீமான் மீதுதான் இப்படி ஒரு புகார்... கிளப்பி இருப்பவர் நடிகை விஜயலட்சுமி! புகார் கொடுத்த கையோடு சில சினிமா புள்ளிகளிடம் பேசிய விஜயலட்சுமி, ''உலகம் முழுவதும் வாழும் தமிழர்களுக்கு ஹீரோவாக இருக்கும் சீமான் என் வாழ் வில் வில்லனாகிவிட்டார். புகாரை வாபஸ் வாங்கச் சொல்லி யாரும் வற்புறுத்தினால் தற்கொலை செய்துகொள்வேன்!'' எனப் புலம்பி இருக்கிறார். 

விஜயலட்சுமிக்கு அப்படி என்னதான் பிரச்னை?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

'ப்ரண்ட்ஸ்’ படம் மூலமாக தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் விஜயலட்சுமி. பெரிய வாய்ப்புகள் ஏதும் இல்லாததால் சின்னத்திரையிலும் தலையைக் காட்டினார். சீமானின் இயக்கத்தில் வெளியான 'வாழ்த்துகள்’ படத்திலும்  நடித்தார். பரபரப்பு சர்ச்சையில் அவர் பெயர் சிக்குவது இது முதல் முறை அல்ல. ஏற்கெனவே இயக்குநர் ஏ.ஆர்.ரமேஷ், தன்னைக் காதலித்து ஏமாற்றியதாகப் புகார் கொடுத்தார். அப்போது, தூக்க மாத்திரை களை விழுங்கி தற்கொலைக்கும் முயன்றார். 2006-ல் கன்னட நடிகர் சுஜான் லோகேஷ§டன் மூன்று வருடங்களாக குடும்பம் நடத்துவதாகச் சொல்லி பரபரப்பு கிளப்பினார். டி.வி நிகழ்ச்சியின் இயக்குநர் ஒருவர் மீதும் 'கல்யாண கலாட்டா’ புகாரைக் கொடுத்து பரபரக்க வைத்தார். இப்போது அதே வெடிகுண்டை சீமான் மீதும் வீசி இருக்கிறார். பரபரப்பு கிளப்புவதும் பின்னர் அப்படியே அமைதியாகிவிடுவதும் விஜயலட்சுமியின் வழக்கமான வாடிக்கைதான்.

வில்லனா சீமான்?

சீமானுக்கும் விஜயலட்சுமிக்கும் எப்படிப் பழக்கம்?

ஒன்றரை வருடத்துக்கு முன்பு விஜயலட்சுமியின் சகோதரிக்கு குடும்ப ரீதியான சிக்கல். அப்போது விஜயலட்சுமி கண்ணீரோடு சீமானை அணுக, அவர் மகளிர் ஆணையத்தின் தலைவராக இருந்த ராமாத்தாளிடம் அனுப்பினார். விஜயலட்சுமியின் சட்டப் போராட்டத்துக்கு சங்கமித்திரை என்ற வழக்கறிஞர் மூலமாக உதவினார். மேற்கொண்டு நடந்ததை சீமானின் வழக்கறிஞர் சந்திரசேகர் விவரிக்கிறார்.

''ஈழ விவகாரத்தில் மிகுந்த தீரத்தோடு போராடும் சீமானுக்கு இழுக்கு உண்டாக்கும் விதமாகவே இப்படி ஒரு புகாரைப் பரப்பி இருக்கிறார் விஜயலட்சுமி. குடும்பப் பிரச்னை யில் மனிதாபிமான முறையில் இரக்கப்பட்டதைத் தவிர அந்தப் பெண்ணுக்கும் சீமானுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. சம்பந்தமே இல்லாமல் சீமானின் செல்லுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பி தேவையற்ற மன உளைச்சலை உண்டாக்கியது விஜயலட்சுமிதான். 'என் மீது கயல் விழி என்கிற ஆவியை ஏவிவிட்டு என் குடும்பத்தின் நிம்மதியையே குலைத்து விட்டீர்கள். தயவு செய்து என் மீது ஏவி இருக்கும் ஆவியை விரட்டுங்கள். இல்லையேல் நான் தற்கொலை செய்துகொள்வேன்!’ என்கிற எஸ்.எம்.எஸ்-ஐ சமீபத்தில் சீமானுக்கு அனுப்பினார். (அதை நம்மிடம் காட்டுகிறார்!) எத்தனையோ இக்கட்டுகளையும் பொருட்படுத்தாமல் ஈழ விவகாரத்தில் தொடர்ந்து போராடிவரும் சீமான், ஆவியை ஏவிவிடுகிறார் என்றால் சிரிக்கத்தானே முடியும்? பகுத்தறிவுக் கொள்கையில் உறுதி பிறழாமல் இருக்கும் சீமான் மீது பில்லி சூனியப் பிரச்னையைக் கிளப்புவதில் இருந்தே அந்தப் பெண்ணின் குணம் எப்படிப்பட்டது என்பது தெரிகிறது. அவதூறு பரப்பிய விஜய லட்சுமி மீது ஐந்து கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு வழக்குத் தொடர இருக்கிறோம். விஜயலட்சுமியை இயக்கும் சூத்திரதாரிகளையும் சும்மா விட மாட்டோம்!'' என்றார் சந்திரசேகர்.

இன்னும் சிலரோ, ''விஜயலட்சுமி புகார் கொடுக்க கமிஷனர் ஆபீஸ் போவதற்கு முன்னரே காங்கிரஸ் புள்ளி ஒருவர் அனைத்து பத்திரிகை யாளர்களுக்கும் போன் செய்து 'கமிஷனர் ஆபீஸில் முக்கியச் செய்தி!’ எனப் பரப்பி இருக்கிறார். ஈழ விவகாரத்தில் தீவிரமாக இருக்கும் சீமானை சிதைக்கும் விதமாகவே திட்டமிட்டு சிலர் விஜயலட்சுமி மூலமாக இந்த நாடகத்தை நடத்துகிறார்கள். விஜய லட்சுமி மீது தாக்குதலை நடத்தி பழியை சீமான் மீதும் போட்டு சிக்கவைக்கவும் சிலர் திட்டமிட்டு வருகிறார்கள். விஜயலட்சுமி சீமானை திருமணம் செய்ய நினைத்திருந்தால் அவருடைய உறவினர்களைத்தானே அணுகி இருக்க வேண்டும். அதைச் செய்யாமல் போலீஸி டம் புகார் கொடுத்ததிலேயே சீமானின் இமேஜை உடைப்பதுதான் அவருடைய நோக்கம் என்பது புரிந்துவிட்டது. ஈழப் போர் தீவிரமாக நடந்த நேரத்தில் சிங்கள அரசுக்கு எதிராக தொடர்ந்து முழங்கி வந்த சி.மகேந்திரன் மீது வெளிநாட்டுப் பெண் ஒருவர் பாலியல் புகார் கொடுத்தார். அதன் பின்னணியில் சிங்கள உளவுப் புள்ளிகளின் கைங்கர்யம்தான் செயல்பட்டது. அதேபோல் இப்போது சீமான் மீதும் பரபரப்பு கிளப்பப்படுகிறது. உலகளாவிய அளவில் சீமானுக்கு எழுந்திருக்கும் ஆதரவை சிதைக்க உளவுப் புள்ளிகள் நிகழ்த்தும் சதிதான் இது!'' என்கிறார்கள் அவர்கள்.

'பகலவன்’ பட டிஸ்கஷனில் இருந்த சீமானை சந்தித்தோம். எதையும் சட்டையே செய்யாதவராக சிரித்தவர், ''காதல் செய்கிற நிலையிலா நான் இருக்கேன்? ஒரு வருஷத் துக்கும் மேல் சிறையில் இருந்துட்டு வெளியே வந்த எனக்கு ஈழ விவகாரங்களுக்காகப் போராடவும் காங் கிரஸுக்கு எதிராகப் பரப்புரை செய்யவுமே நேரம் இல்லை. படிக் கவோ தூங்கவோ நேரம் இல்லாத அளவுக்கு தீவிரமாக இயங்கிவரும் எனக்குக் கண்டவர்களோடும் டூயட் பாடுவதுதான் வேலையா? ஏற்கெனவே இலங்கைப் புள்ளிகள் சிலரை தமிழகத்துக்கு அனுப்பி என்னைக் கொலை செய்ய முயற்சி நடந்தது. அதையே சட்டை செய்யாத நான் இந்த மாதிரி சின்னத்தனமான அவதூறுகளையா பொருட்படுத்துவேன்? யுத்த களத்தில் நின்றால் குண்டுகளையும் அரசியல் களத்தில் நின்றால் அவதூறுகளையும் எதிர்கொண்டுதான் ஆகவேண்டும். விட்டுத் தள்ளுங்கள் அந்த வெட்டிக் கதைகளை எல்லாம்...'' என்றார் சீறலாக!

- இரா.சரவணன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism