வெளியிடப்பட்ட நேரம்: 16:22 (15/09/2016)

கடைசி தொடர்பு:16:34 (15/09/2016)

யார் சாமி நீங்க... எங்கே இருந்து வந்தீங்க? #HBDSwamy

சர்ச்சையான கருத்துகள் மூலம் அடிக்கடி செய்தித்தாள்களில் இடம்பெறும் பெயர் சுப்ரமணியன் சுவாமி. சமீபத்தில் கூட 'காவிரி தண்ணீருக்காக கத்திக்கொண்டிருப்பதற்குப் பதிலாக கடல்நீரை குடிநீராக்கி விவசாயத்திற்கும், குடிநீருக்கும் பயன்படுத்திக்கொள்ளுங்கள்' என முத்தான கருத்தை உதிர்த்திருக்கிறார். அவர் இன்று 77-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.  எல்லோரையும் எந்நேரமும் பிஸியாவே வெச்சுக்கணும் என்பதைக் கொள்கையா வைத்திருக்கும் நம்மவருக்கு பிறந்த நாள் மெமரீஸ்..! 

* சென்னையில் உள்ள மயிலாப்பூரில் பிறந்திருந்தாலும், இவரது பூர்விகம் மதுரை அருகில் சோழவந்தான். அதனால்தான் என்னவோ... நானும் மதுரக்காரன்தான்டா எனத் தோளில் துண்டைப்போட்டு அடிக்கடி கிளம்பிவிடுகிறார். கணிதத்தில் இளங்கலைப் பட்டத்தை டெல்லியில் உள்ள ஹிந்து கல்லூரியிலும் (குறியீடு... குறியீடு), புள்ளியியல் முதுகலைப் பட்டத்தை கொல்கத்தாவிலும், பொருளாதாரத்திற்கான பி.எச்.டி. பட்டத்தை ஹார்வர்ட் பல்கலைக் கழகத்திலும் முடித்துள்ளார். ஹார்வர்ட் பல்கலைக் கழகத்தில் படிக்கும்போதுதான், கணிதத்தில் பி.எச்.டி. படித்துவந்த ரோக்ஸ்னா என்ற பார்சி இன இந்தியப் பெண் மீது காதல் வந்தது  இருவருக்கும் 1966-ல் திருமணம் முடிந்து இரு மகள்கள் உள்ளனர். 

* 1970-ம் ஆண்டு ஐ.ஐ.டி-யில் பொருளாதாரத்தைப் பற்றிப் பாடமெடுத்துக்கொண்டிருந்தார் சுவாமி. அதற்கு முந்தைய ஆண்டுதான் அயல்நாட்டு முதலீட்டைப் பெருக்கும் வகையில் இந்தியாவின் பணமதிப்பு குறைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் ஐந்தாண்டுத் திட்டங்களைக் கைவிடும்படியும், வெளிநாட்டிலிருந்து முதலீடு பெறுவதை நிறுத்த வேண்டும் என்றும் சுவாமி இந்திய அரசுக்குப் பரிந்துரைத்தார். இந்தக் கருத்துக்கு பட்ஜெட் விவாதத்தின்போது பதிலளித்த அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி, 'சாத்தியமற்ற கருத்துகளைச் சொல்லும் சான்டா க்ளாஸ்' என சுவாமியை விமர்சித்தார். இதன் விளைவு 1972-ம் ஆண்டில் ஐ.ஐ.டி-யில் இருந்து சுவாமி நீக்கம் செய்யப்பட்டார். அதன்பின் நீதிமன்றம் வாயிலாக 1991-ம் ஆண்டு அந்த நீக்கம் செல்லாது என்ற உத்தரவு வந்தது. ஐ.ஐ.டி-க்குச் சென்ற அவர் அடுத்த நாளே பதவியை ராஜினாமா செய்து கெத்து காட்டியது தனிக்கதை. #சுவாமிடா!

* இந்திரா காந்திக்கு எதிராகத் தைரியமாகக் கருத்துகளைக் கூறுபவர்கள், மக்கள் மனநிலையில் அப்போது மாவீரர்களாகப் பார்க்கப்பட்டார்கள். 1974-ம் ஆண்டு இந்திரா காந்திக்கு எதிராக செயல்பட்ட கட்சியான ஜனசக்தி சார்பாக மாநிலங்களவைக்கு சுவாமி அனுப்பப்பட்டார். 1975-ம் ஆண்டுதான் எமர்ஜென்சி அறிவிக்கப்பட்டது. வழக்குப் பதிவு செய்யப்பட்டு தேடப்பட்டவர்கள் பட்டியலில் சுவாமியும் ஒருவர். அமெரிக்காவுக்குத் தப்பிச்சென்ற சுவாமி, 1976-ம் ஆண்டு அங்கிருந்து இந்தியா வந்து பாராளுமன்றக் கூட்டத்தொடரில் கலந்துகொண்டு, பாதுகாப்பையும் மீறி திரும்ப அமெரிக்காவுக்குத் தப்பிச்சென்றது அப்போது பரபரப்பான டாபிக். அந்தக் கூட்டத்தொடர் தொடக்கத்தில் மாநிலங்கள் அவைத் தலைவராக இருந்த குடியரசுத் துணைத்தலைவர் பி.டி. ஜாட்டி, இறந்துபோன நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசியல் தலைவர்கள் பற்றி இரங்கல் உரை ஆற்றிக்கொண்டிருந்தார். இடைமறித்த சுவாமி, 'இறந்தவர்கள் பட்டியலில் ஜனநாயகத்தையும் சேர்த்துக்கொள்ளுங்கள்’ எனப் பேசியது வீராவேசமாகக் கருதப்பட்டது. #தில்லு! 

* சர்ச்சைகளைக் கிளறி பலரின் பதவி காலியாவதற்குக் காரணமாக இருந்த சுவாமியே ஒருமுறை பதவி நீக்கம் செய்யப்பட்டாரென்றால் உங்களால் நம்ப முடிகிறதா? உண்மைதாங்க. ஹார்வர்ட் பல்கலைக் கழகத்தில் விரிவுரையாளராக மாணவர்களுக்கு அவ்வப்போது பாடம் எடுத்துக்கொண்டிருந்தார் சுவாமி. 'சமஸ்கிருதம் கற்றுக்கொள்வது மற்றும் வந்தே மாதரம் பாடுவதைக் கட்டாயமாக்க வேண்டும். இதை மறுப்பவர்களுக்கு வாக்களிக்கும் உரிமையை ரத்து செய்ய வேண்டும்' என்ற சர்ச்சையான கருத்துகளை டி.என்.ஏ. என்ற பத்திரிகையில் எழுதியதால் அப்பல்கலைக்கழகம் அவரை விரிவுரையாற்ற அதன்பின் அனுமதிக்கவில்லை. அதுவரை அவர் எடுத்து வந்த இரண்டு பாடங்களையும் நீக்கிவிட்டது. #வாத்தியாருக்கு தண்டனை!

* தனது இந்துத்வா கருத்துகளுக்காக அவ்வப்போது வாங்கிக்கட்டிக்கொள்வது சுவாமிக்கு சகஜம். ஒரு முறை இப்படித்தான் 'இந்தித் திணிப்பு பிடிக்காதவர்களுக்கு ஒரு மாற்றுவழி உள்ளது; அதுதான் பள்ளிக்கே செல்லாமல் இருப்பது' என ட்விட்டரில் ரிப்ளை செய்ய... அதற்கு ஒருவர் 'சரி! நாளை முதல் நாடெங்கும் அசைவம் மட்டுமே வழங்கப்பெறும். பிடிக்காதவர்களுக்கு மாற்றுவழி ஒன்று உள்ளது; அதுதான் பட்டினி கிடப்பது' எனப் பதிலடி கொடுத்து வாயை அடைத்தார். #ஜூப்பரேய்!

 

* தொண்டர் ஒருவர் திருமணத்திற்கு தாலி எடுத்துக் கொடுப்பதற்குப் பதில் தாலியை மணமகள் கழுத்துவரை கொண்டு சென்றது மீம் கிரியேட்டர்களுக்கு பெரும் இரை போட்டதை யாரும் மறந்துவிட முடியாது.#நவீன சின்னத்தம்பி!

* 'டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், ஐ.ஐ.டி. படிப்பிற்கான போட்டித் தேர்வு எழுதவில்லை, தவறான வழியில் நுழைந்துள்ளார், அவரது டிகிரியில் எனக்கு சந்தேகம் உள்ளது' எனப் பரபரப்பைக் கிளப்பினார். இறுதியில் ஆம் ஆத்மி கட்சியினர், கெஜ்ரிவாலின் சான்றிதழை நிருபர் சந்திப்பில் வெளியிட்டதும்தான் சுவாமி கப்சிப் ஆனார்.#இதெல்லாம் சகஜமப்பா!

* ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கு, 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கு, சேது சமுத்திரத் திட்டம் தடை வழக்கு என நாடு முழுவதும் சர்ச்சைகளைக் கிளறிய பல வழக்குகளைத் தொடர்ந்தது இவர்தான். எப்போதும் ஏதாவதொரு பரபரப்பைக் கிளப்பிவிட்டு பிஸியாக இருப்பதே இவர் வேலை. சமீபத்தில் ரிசர்வ் வங்கி ஆளுநராக இருந்த ரகுராம் ராஜன், மீண்டும் ஆளுநராகத் தொடர விருப்பம் இல்லை என அவர் வாயிலிருந்து வரும்வரை குறிவைத்துத் தொடர் கருத்துகளை வெளியிட்டு இம்சை செய்தது தேசிய மீடியாக்கள் வரை பிரபலம். #எவ்வளவோ பண்ணிட்டோம்!

 

கடைசியாக ஒன்று....

* 'எனது குற்றச்சாட்டுக்கு என்னிடம் ஆதாரம் உள்ளது. தக்க நேரத்தில் அதை வெளியிடுவேன்' என சுவாமி இதுவரை 1,308 தடவை கூறியுள்ளார் என்பதற்கும் ஆதாரம் உள்ளது. 

ஆங்!

- கருப்பு

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்