வெளியிடப்பட்ட நேரம்: 11:43 (17/09/2016)

கடைசி தொடர்பு:13:29 (19/09/2016)

பெரியாரிஸம் உருவாக்கிய பெண் பேராளுமைகள்!

தமிழகத்தின் பத்தொன்பதாம் நுற்றாண்டின் தொடக்கம் சுயமரியாதை இயக்கத்தால் உழுது பயிரிடப்பட்ட விளை நிலமாக இருந்தது. 1920-களிலிருந்து 1940 வரை மிக மிகக் குறிப்பிடத்தக்க காலகட்டமாகும். பெரியார் பெண்கள் உரிமைக்காக தொடர்ந்துபோராடியதோடு, அவர்களை தொடர்ந்து இயங்க உந்துச் சக்தியாக விளங்கினார். இக்காலகட்டத்தில் சுயமரியாதை இயக்கத்தில் தோன்றி சுடர் விட்டு ஒளி தந்த சுயமரியாதை இயக்க வீராங்கனைகள் வரலாறு மானுட வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கத் தக்கதாகும்.   அவர்களுள் சிலர் இதோ….

நாகம்மையார்:


13 வயதில் இவர் செய்த முதல் சாதனை தனது வீட்டில் மணந்தால் பெரியாரையே மணப்பேன் என்று பிடிவாதம் பிடித்து அவரை காதல் மணம் புரிந்த்த்து. கடவுள் நம்பிக்கையுடன் மிகவும் ஆச்சாரமான குடும்பத்தில் பிறந்த இவர் பெரியாரால் பகுத்தறிவு வாழ்க்கை நெறிக்குள் ஆட்படுத்தப் பட்டதோடு பெரியாரோடு இணைந்து அவரது இயக்க வாழ்க்கைக்கு முழுமையாக தன்னை அர்ப்பணித்துக் கொண்ட்டார். அகில இந்திய காங்கிரசுக் கட்சியின் தமிழ் மாநிலத்தின் முதல் பெண் பிரதிநிதியாக தேர்வாகி பங்கு பெற்றிருக்கிறார். இவரும் பெரியாருடைய தங்கை கண்ணம்மாவும் தென்னகத்தில் மதுவிலக்குப் போராட்டத்தை காந்தியாரின் ஆணையேற்று முன்னின்று நடத்தினர்  அப்போதெல்லாம் கள்ளுக்கடைகள் ஊருக்கு வெளியே பெண்கள் போக முடியாதபடி அமைந்திருக்கும், அங்கேயே சென்று பெண்கள் மறியல் நடத்தியது பிரிட்டிசு ஆட்சியாளர்களை அதிர வைத்த்து, காந்தியாரிடம் மதுவிலக்கு போராட்டத்தைத் திரும்பப் பெறுமாறு கேட்ட போது மும்பையிலிருந்து அவர் சொன்னார் அது என் கையில் இல்லை;  ஈரோட்டிலிருக்கும் இரண்டு பெண்கள் கையில்தான் இருக்கிறது என்று. வைக்கம் போராட்டத்தில் பெரியார் சிறைப் பிடிக்கப்பட்ட பின் அந்தப் போராட்டத்தைத் தொடர்ந்து நடத்த வைக்கம் சென்றார் அன்னையார். சாதி என்ன என்று கேட்ட காவலர்களிடம் உணர்ச்சி பெருக்கோடு வாதிட்டார்.  ஆண்களின் போராட்டத்தை எளிதாகக் கையாண்ட அரச அதிகார வர்க்கம் பெண்களின் இந்தப் போராட்டத்தைக் கண்டு திகைத்தது.  பல்வேறு, சாதி மறுப்பு திருமணங்களையும் தாலி மறுப்பு திருமணங்களையும் தானே முன்னின்று நடத்தி வைத்தார் அம்மையார்.  பெரியாரின் அனைத்து பணிகளுக்கும் உறுதுணையாக இருந்ததுடன் இயக்கத் தோழர்களை அன்புடன் அரவணைத்து அன்னமிட்ட அன்னையாகத் திகழ்ந்தார். குடிஅரசு பத்திரிகையின் பதிப்பாளராகப் பணியாற்றினார்.  

கண்ணம்மா:


அன்னை நாகம்மையாருடன் இணையாக அனைத்துப் போராட்டங்களிலும் பங்கு பெற்ற இவர் அம்மையாருக்கு பிறகு குடிஅரசு இதழ் பொறுப்பாசிரியராகப் பணியாற்றினார். அதன்பிறகு நடத்தப் பட்ட 'புரட்சி' இதழிலும் பொறுப்பாசிரியராக இருந்தார். இப்பத்திரிகைகளில் வெள்ளையர் ஆட்சிக்கு எதிராக வெளியிடப்பட்ட கட்டுரைகளுக்காக இரண்டு முறை சிறையில் அடைக்கப்பட்டார். பெண்கள் இயக்க வரலாற்றில் இடம் பெற வேண்டிய மாணிக்கங்கள் இவர்கள்.

மூவாலூர் இராமாமிர்தம் அம்மையார்:


தேவதாசி சமுகத்தில் பிறந்து அந்தச் சமுக இழிவு ஒழிய பொது வாழ்வுக் களங் கண்டவர். காந்தியாருடன் பின் பெரியாருடன் இணைந்து தனது போராட்டக் களத்தை பல்வேறு தியாகங்களுடன் முன்னெடுத்தவர். வீடு, வீடாகச் சென்று தனது இலட்சியத்துக்காக பரப்புரை செய்தவர். பெரியார் வரதராஜ நாயுடு தண்டபாணிப் பிள்ளை ஆகியோர் துணையுடன் நாகபாசத்தார் சங்கம் என்ற அமைப்பை தோற்றுவித்து தேவதாசி முறை ஒழிய பாடுபட்டவர். 'தாசிகள் மோச வலை' என்ற நாடகத்தை இயற்றி அதனை நாடகமாக அரங்கேற்றி அதனை தனது பிரச்சாரக் கருவியாக மாற்றியமைத்தவர்.  பொது மேடையில் வைத்து இவரது கூந்தலை அறுத்து அவமானப் படுத்தினார்கள். உணவில் விஷம் வைத்தார்கள். அவர்களையே மன்னித்தார் அம்மையார். தாழ்த்தப்பட்ட மக்கள் வேட்டி உடுத்தியதை சிலர் கேள்வி கேட்டார்கள் என்பதற்காக அவர்கள் வேட்டி உடுத்தும் போராட்டம் நடத்தினார். இந்தி எதிர்ப்பு பேரணியில் முன்னின்று கலந்து கொண்டார். தான் வாழ்ந்த போதே தனது இலட்சியம் ஈடேறக் கண்டார்.
 


அன்னை மீனாம்பாள் சிவராஜ்:


பர்மாவிலிருந்து தனது உயர்கல்விக்காக இங்கு வந்தவர். தாழ்த்தப்பட்ட இயக்கத் தலைவர் சிவராஜ் அவர்களின் துணைவியார். முதன் முதலாகக் கப்பலோட்டிய மதுரைப் பிள்ளை அவர்களின் மகள். பெரியார் மீது பேரன்பு கொண்டவர். தனது பொது வாழ்வின் துவக்கத்தை சுயமரியாதை இயக்கத்திலேய தொடங்கினார். இந்தி எதிர்ப்புப் பேரணியில் சிறப்புரையாளர்.  பெரியாருக்கு 'பெரியார்' என்ற பெயரை தர ஏற்பாடு செய்த பெண்களில் முன்னணிப் பங்கு வகித்தவர். பின்னர் அம்பேத்கர் இயக்கத்தில் தொடர்பு கொண்டு அகில இந்திய அரசியலுக்கு சென்றவர். அரசியல் சட்டம் இயற்றும் குழுவில் அம்பேத்கர் இடம் பெற அவரது சம்மத்த்தைப் பெற்று தந்தவர்.

 

 


மருத்துவர் தருமாம்பாள்:


சித்த மருத்துவர் மனிதர்களின் நோய்க்கு மட்டுமல்ல வாழ்க்கைக்கும் மருத்துவராக விளங்கியவர். பெரியாரியக்கத்தில் சேர்ந்து சமுக மருத்துவராகப் பரிணாமம் பெற்றவர்.  தமிழை நேசித்த பெண் தலைவர் இவர். இந்தி எதிர்ப்புப் போரில் முன்னின்றவர்.  இவரும் இராமாமிர்தம் அம்மையாரும் ஆற்றிய உரைகளின் எழுச்சியால் பெரு எண்ணிக்கையில் பெண்கள் இந்தியை எதிர்த்து சிறையேகினார்கள். அதில் கைக்குழுந்தைகளுடன் 38 பெண்கள் சிறைக்கு சென்றார்கள். தனது வீட்டையே கரந்தை தமிழ் சங்கத்துக்கு நன்கொடையாக வழங்கினார்.  கலைவாணர் என். எஸ். கிருஷ்ணனை 'இந்து நேசன்' பத்திரிகை ஆசிரியர் லட்சுமிகாந்தன் கொலை வழக்கிலிருந்து காப்பாற்ற இலண்டன் பிரிவியூ கவுன்சில் வரை சென்று வழக்கு நடத்தி மீட்டு வந்தவர். தமிழாசிரியர்கள் சமுகத்தில் பிறரைப் போல் மதிப்புடன் வாழ அவர்களின் ஊதிய உயர்வுக்காக அரசை நிர்ப்பந்தித்து வெற்றி கண்டவர். ஊதியம் உயர்த்திக் கொடுக்காவிட்டால் பெண்களைத் திரட்டி 'இழவு வாரம்' கொண்டாடுவேன் என இவர் அறிவித்தார். இரண்டாம் தமிழிசை மாநாட்டுக்கு வரவேற்புக்குழு உறுப்பினர். இந்தி எதிர்ப்புப் பேரணி சென்னை கடற்கரை வந்து சேர்ந்த போது வரவேற்புக் குழுவில் பங்காற்றியவர். எத்தனை பெருமைகள்…….. எத்தனை பெருமைகள் ……

நீலாவதி இராமசுப்ரமணியம்:


திராவிடன், குடிஅரசு, ஊழியன் ஆகிய இதழ்களில் எழுதி வந்த எழுத்தாளர். இவர் எழுதிய சீர்திருத்தப் பெண்ணுரிமைக் கருத்துக்களின் வேகம் பார்த்து இவர் உண்மையில் பெண்ணா என்று அறிய இவரைத் தேடி வந்தார் 'குமரன்' இதழ் ஆசிரியரும் பெரியாரின் உற்ற நண்பருமான செ. முருகதாசு அவர்கள்.  பின் தன் ஊழியர் இராமசுப்ரமணியமும் நீலாவதியும் ஒருவருக்கொருவர் வாழ்க்கைத் துணையாக்குவது என முடிவு செய்தார்கள். 1920-களில் நடைபெற்ற சாதி மறுப்பு திருமணம். ஊரெங்கும் எதிர்ப்பு. 'சிவநேசன்' என்ற பத்திரிகை வரிந்து கட்டிக் கொண்டு, எதிர்த்து நின்றது.  இந்தத் திருமணத்தை நடத்துவதற்காக 'பாதுகாப்பு குழு' ஒன்றே தனியாக அமைக்கப் பட்டது. திருமணப் பத்திரிகையில் அழைப்பாளர்கள் பெரியார் நாகம்மையார் மற்றும் பெண்ணின் தகப்பனார். இவரது திருமணத்தையொட்டி எழுந்த எதிர்ப்புகளுக்கு பதில் சொல்லதான் 'பெரியாரால் பெண் ஏன் அடிமையானாள்?' என்ற நூலும் திரு வி.கல்யாணசுந்தரம் அவர்களால் பெண்ணின் பெருமை என்ற நூலும் எழுதப் பட்டதாம். அது மட்டுமன்றி அது தாலி மறுப்பு திருமணமும்கூட இருபாலார் இணைந்து கொள்ளும் திருமணத்திற்கு ஒருபாலாருக்கு மட்டும் தாலி என்பது கொடுமை என்று கவிதைகள் எழுதப் பட்டதும் அப்போதுதானாம்.  

குஞ்சிதம் குருசாமி:


அம்மையார் குஞ்சிதம் குருசாமி அந்தக் காலத்தில் ஆங்கிலத்திலும் தமிழிலும் சுயமரியாதைக் கருத்துக்களை மேடையேறி முழங்கியவர். குஞ்சிதம் அம்மையாரும் குருசாமி அவர்களும் சாதி மறுப்பு இணையர். மாப்பிள்ளை குருசாமியிடம் பெரியார் அவர் எதிர்பாராத வேண்டுகோள் ஒன்றை வைக்கிறார். பெண்ணுக்கு தாலி கட்ட வேண்டும் என்பதுதான் அது.  அதிர்ச்சியடைகிறார் மணமகன்.  'நீங்களா இப்படி கேட்பது?' என்கிறார்.  ஆமாம்.  ஏனெனில் பெண் சமூகம் தாலி மறுக்கப் பட்ட இசை வேளாளர் சமுகம்.  எனவே இந்தத் திருமணத்தில் தாலி கட்டினால் அதுவே புரட்சி என்றார் பெரியார். பெரியாரே கேட்டும் அந்தப் பெரியார் கொள்கையாளர் மணமகன் அடிமைச் சின்னமாம் தாலி அணிவிக்க ஒத்துக் கொள்ளவில்லை.  தாலியின்றியே நிறைவேறியது புரட்சி திருமணம். குஞ்சிதம் அம்மையார் அரசுப் பள்ளி ஆசிரியை. பூவும் பொட்டுமில்லாமல் வேலைக்கு வரக் கூடாது என்றது பள்ளி நிர்வாகம். பூவும் பொட்டும் பெண்ணடிமைச் சின்னங்கள். சுயமரியாதைக் கட்சிக்காரி நான். அணிந்து வர மாட்டேன் என்று தன் நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தார் அம்மையார். வேலை போனது.  வறுமையை விரும்பி ஏற்றுக் கொண்டார்கள். இணையராக பொதுவாழ்வில் இறுதிவரை நின்றார்கள். இவர்களது குழந்தை இரசியாவுக்குதான் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் தமிழ் இலக்கியத்தில் முதன்முறையாக எழுதப் பட்ட பெண் குழந்தைக்கான தாலாட்டுப் பாடலை எழுதினார். 'சாணிக்குப் பொட்டிட்டு சாமி என்பர் செய்கைக்கு நாணிக் கண்ணுறங்கு நகைத்தே நீ கண்ணுறங்கு' என்ற அந்தத் தாலாட்டு கேட்டுதான் நாங்கள் எல்லோரும் வளர்ந்தோம்.

 

மணியம்மையார்:


பெரியாரிடம் விளைந்த முத்துகளிலெல்லாம் நன்முத்து. பெரியார் தனது பணிகளை ஒப்படைத்து செல்ல தேர்ந்தெடுத்த அரிய பெண்மணி மணியம்மையார்.  பெரியாரைக் காப்பதைத் தன் வாழ்நாள் கடமையாக ஏற்ற தியாகத் திருவுருவம். அன்னை நாகம்மையாரைப் போன்றே இயக்கத்தை தன் வாழ்க்கையாகப் பார்த்தவர். எனினும் பெரியாரைத் திருமணம் செய்து கொண்ட காரணத்தினாலேயே அதே இயக்கத்தவராலேயே அவர் அனுபவித்த துன்பங்கள், கேலிகள் சொல்லி மாளாது. எனினும் கடமை காத்து நின்றவர். தன்னைத் துற்றியவர்களே தேடி வந்து மரியாதை செய்த வரலாற்றைப் பார்த்தவர். சாதி ஒழிப்பு போராம் சட்ட நகல் எரிப்புப் போரில் சிறைப்பட்ட தோழர்களுக்காக போராடியவர். பெரியாருக்குப் பின் திராவிடர் கழகத்தின் தலைமையேற்றதன் மூலம் உலகிலேயே ஒரு நாத்திக புரட்சி இயக்கத்துக்கு ஒரு பெண் தலைமையேற்றார் என்ற வரலாறு படைத்தார். பெரியார் கூட நடத்தியிராத பாணியில் வட இந்தியாவில் எங்கள் தென்னாட்டு இராவணனை இராமலீலா என்ற பெயரில் எரிப்பீர்கள் என்றால் நாங்கள் இராவணலீலா நடத்தி இராமனை எரிப்போம் என்று அவர் ஆர்த்தெழுந்ததை நாளை இந்தியா முழுவதிலும் பார்ப்பனரல்லாதார் இயக்கங்கள் பதிவு செய்யும் நாள் வரும். இந்தியா முழுவதிலும் சனநாயகத்தின் குரல்வளை நெறிக்கப் பட்ட அவசரநிலை அறிவிக்கப் பட்டிருந்த காலத்தில் உடல் நலிவுற்றிருந்த நிலையிலும் அவர் காட்டிய மன உறுதியும் தனது இலட்சியத்தில் விட்டுக் கொடுக்காமல் அந்த இயக்கத்தை கட்டிக் காத்த பேராளுமையும் உலகத் தலைவர்கள் வரிசையில் வைத்து எண்ணத் தக்கவையாகும். சிந்தனையாளர், எழுத்தாளர், பேச்சாளர், பத்திரிகையாளர் இயக்கத் தலைவர் என்ற பன்முக பொறுப்பேற்று உழைத்திட்ட காவியப் பெண்மணி.

திராவிட இயக்கத்தின் மீது காட்டப் பட்ட இருட்டடிப்பின் காரணமாக இவர்தம் ஆளுமையெல்லாம் எடுத்துச் சொல்லப் படாமல் இருக்கிறது. இவர்களைப் போல இன்னும் ஏராளமான பெண்கள் இருக்கின்றனர். காலம் தனது வெளிச்சத்தை அவர்கள் மீது பாய்ச்சாமல் இருக்காது.  எண்ண எண்ணப் பொங்கும் இவர்தம் நினைவுகள். அவை பெண்கள் வரலாற்றை இனியும் எழுதும்.

- ஓவியா

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்