எங்கே போனார் சசிகலா...? அப்போலோ பரபரப்பு

மிழக முதல்வர் ஜெயலலிதா சிகிச்சை பெற்று வரும் அப்போலோவில்  நேற்று மாலை 6 மணி முதல் மருத்துவமனைக்கு அ.தி.மு.க தொண்டர்கள் வரத் தொடங்கினார்கள். அதேபோன்று ஊடகங்களின் வருகையும் அதிகரிக்கத் தொடங்கின. அதோடு, அ.தி.மு.க-வின் முக்கியப் பிரமுகர்கள் வருகையும் இருந்தது.

அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், விஜயபாஸ்கர், தங்கமணி, வேலுமணி மற்றும் தம்பிதுரை எம்.பி உள்ளிட்டோரும் வந்திருந்தனர். முன்னாள் அமைச்சர் வளர்மதியும் வந்திருந்தார். காலையில் வந்த ஓ.பன்னீர்செல்வம், முதல்வரைப் பார்த்துவிட்டு நள்ளிரவு 12.30 மணிக்குத்தான் கிளம்பிச் சென்றார். அதேபோன்று, காலையில் வந்த தம்பிதுரை நேற்று இரவு 10 மணிக்குத்தான்  கிளம்பிச் சென்றார்.

எங்கே போனார் சசிகலா?

இரவு 9.15 மணியளவில், மிகவும் எளிமையான ரெட் கலர் கார் ஒன்று மருத்துவமனையில் இருந்து வெளியேறியது. லைட் எரியாமல் சென்ற அந்த காரில் அமர்ந்திருந்தது சசிகலா என்று செய்தியாளர்கள் பரபரத்தனர். கேமராவுடன் சென்ற ஊடகவியலாளர்களுக்கு முன்சீட்டில் அமர்ந்திருந்தது சசிகலாவே என்று தெரிந்ததும் படத்தை கிளிக் செய்தனர். பின்சீட்டில், இளவரசி போன்று ஒரு பெண்மணி அமர்ந்திருந்தார். ஒரு வார காலமாக முதல்வருடன் இருந்த சசிகலா, முதன்முதலாக மருத்துவமனையைவிட்டு வெளியே வந்துள்ளார். அவர், போயஸ் கார்டன் சென்றாரா அல்லது வேறு எங்கேனும் சென்றாரா என்பது தெரியவில்லை.


தொண்டர்கள் மனநிலை!

அ.தி.மு.க-வின் சோஷியல் மீடியா குரூப்வாசிகள் வாயிலில் நின்றுகொண்டு மருத்துவமனையில் இருந்து வெளியே வருபவர்களிடம் சென்று, ‘அம்மா எப்படி இருக்கிறார்’ என்பதைக் கேட்கும் அசைவுகளை நம்மால் யூகிக்க முடிந்தது. அதேபோன்று, சில அ.தி.மு.க பெண் உறுப்பினர்கள் மருத்துவமனையின் வாயிலில் கலங்கிய கண்களுடன் காட்சி அளித்தனர். வாயிலின் நடுவில் நின்ற பெண்களை ஒதுங்கி நிற்குமாறு போலீஸார் அறிவுறுத்தினர். அதனால், அவர்கள் தங்கள் ஆதங்கத்தை போலீஸாரிடம் வெளிப்படுத்தினர். பின்னர், அவர்களின் மனநிலையை உணர்ந்தவர்களாக போலீஸார் அமைதியாக ஒதுங்கி நின்றனர்.


முதல்வரின் உடல்நிலை குறித்து அ.தி.மு.க தொண்டர்கள் கவலை அடைந்தவர்களாக அனைவரும் குரூப் குரூப் ஆக  நின்றுகொண்டிருந்தார்கள். முதல்வரைப் பார்த்துவிட்டு வெளியேவந்த தலைவர்களிடம் விவரம் கேட்டு ஆறுதல் தேடிக்கொண்ட்னர். அங்கிருந்த தொண்டர் ஒருவர், ‘‘அம்மா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது முதல் இங்கேதான் இருக்கிறேன். அவர் குணமடைந்து மருத்துவமனையில் இருந்து கிளம்பும்போதுதான் நானும் வீட்டுக்குச்  செல்வேன்’’ என்றார்.

‘‘அம்மா நிம்மதியா, சந்தோஷமா இருக்காங்க!’’

சசிகலா சென்றபிறகு, இரவு 10 மணியளவில் மருத்துவமனைக்கு வந்தார் முன்னாள் அமைச்சர் வளர்மதி. அவரை, வாயிலில் நின்ற தொண்டர்களும் ஊடகத்தினரும் சூழ்ந்துகொண்டனர். பின்னர், மீடியாவிடம் பேசுவதைத் தவிர்ப்பதற்காகச் சிறிது தூரம் தொண்டர்களுடன் நடந்துசென்றார். மீடியாவினர் போய்விட்டார்களா என்று பார்த்துக்கொண்டே காரின் அருகே சென்றவர்... தொண்டர்களிடம், ‘‘அம்மா நிம்மதியா, சந்தோஷமா ஓய்வெடுத்துக்கிட்டு இருக்காங்க. அவுங்களுக்குத் தொந்தரவு கொடுக்காதீங்க. நீங்க கூட்டம் போட்டுக்கிட்டீங்கனு  இவன், 10 பேர்கிட்டச் சொல்வான். அவன், 10 பேர்கிட்டச் சொல்வான்.  தயவுசெஞ்சு கிளம்புங்க. தி.மு.க-காரன் பொய் பிரசாரம் செய்வான். கிளம்புங்க’’ என்றார்.

‘‘அம்மாவை தனியாக விட்டுவிட்டு ‘எங்கே சென்றிருப்பார் சசிகலா?’ ’’ என தொண்டர்களிடம் கேள்வி எழத் தொடங்கியிருக்கிறது?

- கே.புவனேஸ்வரி, ஐஸ்வர்யா

Do you like the story?

Please Appreciate the Author by clapping!