Published:Updated:

உ.பி. உள்பட 5 மாநிலங்களில் நாளை வாக்கு எண்ணிக்கை

விகடன் விமர்சனக்குழு

புதுடெல்லி: உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களில் நாளை வாக்கு எண்ணிகை நடைபெறுகிறது.

2014-ம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னோடியாக அமையும் என கருதப்படுகிற உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், மணிப்பூர், கோவா ஆகிய 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல்கள் அமைதியாக நடைபெற்று முடிந்திருக்கிறது.

இந்த 5 மாநிலங்களிலும் தலா 60 சதவீதத்துக்கு மேல் வாக்குகள் பதிவாகியுள்ள நிலையில், வாக்குகள் நாளை (செவ்வாய்கிழமை) காலை 8 மணிக்கு எண்ணப்படுகின்றன. வாக்கு எண்ணிக்கை தொடங்கிய 4 மணி நேரத்திலேயே முடிவுகள் வெளிவரத் தொடங்கிவிடும்.

மொத்தம் 403 இடங்களை கொண்ட உத்தரப் பிரதேசத்தில், மாயாவதி ஆட்சியை தக்க வைக்க போராடிய வேளையில், ஆட்சியை அவரிடமிருந்து கைப்பற்றுவதில் சமாஜ்வாடி, பிஜேபி, காங்கிரஸ் ஆகிய 3 கட்சிகளும் தீவிரமாக செயல்பட்டன.

உத்தரகாண்டில் பி.சி. கந்தூரி தலைமையில் பிஜேபி ஆட்சி நடந்து வருகிறது. 70 இடங்களை கொண்ட சட்டப்பேரவைக்கு ஒரே கட்டமாக நடந்த தேர்தலில் 68 சதவீத ஓட்டுக்கள் பதிவாகின. இங்கு பிஜேபிக்கும், காங்கிரசுக்கும்தான் நேரடிப் போட்டி நிலவுகிறது.

பஞ்சாப்பில் பிரகாஷ் சிங் பாதல் தலைமையில் சிரோமணி அகாலி தளம், பிஜேபி கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. 117 இடங்களைக் கொண்ட சட்டப்பேரவைக்கு ஒரே கட்டமாக நடந்த தேர்தலில் 78.57 சதவீத ஓட்டுக்கள் பதிவாகின. இங்கு சிரோமணி அகாலிதளம், பிஜேபி கூட்டணிக்கும், காங்கிரசுக்கும் இடையே நேரடி போட்டி நிலவுகிறது.

மணிப்பூரில் ஓக்ராம் இபோபி சிங் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. தொடர்ந்து இரண்டு முறை காங்கிரஸ் வெற்றி பெற்று, இவரது தலைமையில் முழு ஆட்சிக்காலத்தையும் காங்கிரஸ் நிறைவு செய்துள்ளது. 60 இடங்களைக் கொண்ட சட்டப்பேரவைக்கு ஒரே கட்டமாக நடந்த தேர்தலில் 79.41 சதவீத ஓட்டுக்கள் பதிவாகி உள்ளன.

இந்த மாநிலத்தில் காங்கிரசுக்கு எதிராக தேசியவாத காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளிட்ட பிற கட்சிகள் இணைந்து மக்கள் ஜனநாயகக் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தன. பாரதீய ஜனதாவும் போட்டியில் இருக்கிறது.

கோவாவில் திகாம்பர் காமத் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. காங்கிரசுடன் ஆட்சியில் பங்கு கொண்டிருந்த மாநிலக் கட்சியான மகாராஷ்டிரவாடி கோமந்தக் கட்சி கூட்டணியிலிருந்து விலகி, பிஜேபியுடன் கை கோர்த்தது. 40 இடங்களுக்கு நடந்த தேர்தலில் 81 சதவீத ஓட்டுக்கள் பதிவாகின.

கோவாவில் காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் கூட்டணிக்கும், பிஜேபி - மகாராஷ்டிரவாடி கோமந்தக் கட்சி கூட்டணிக்கும் இடையேதான் கடும் போட்டி நிலவுகிறது. திரிணாமுல் காங்கிரசும் முதல் முறையாக களம் இறங்கி உள்ளது.